என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.
    • 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.

    சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    * என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய்.

    * நீண்ட நாட்களாக மனதில் சுமையை சுமந்து கொண்டிருக்கிறேன்.

    * இ.பி.எஸ். ஒரு மாதத்திற்கு முன்பாக வன்னியர் இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    * கடைசி நேரத்தில் இடஒதுக்கீடு கொடுத்ததால் அது நடைமுறைக்கு வரவில்லை.

    * 10.5% இடஒதுக்கீட்டில் தி.மு.க. அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
    • சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

    பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

    அப்போது, பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் விரைவில் பூரண குணமடைய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரார்த்தனை செய்தனர்.

    • விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து அவர் தியானம் மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டுக்காக கடந்த 15 நாட்களாக நாங்கள் அனைவரும் விரதம் இருந்து வருகிறோம். அதன் காரணமாக வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டோம்.

    ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரும் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து வருகிறார்.

    22-ந்தேதி தான் மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இன்றைக்கே மக்கள் மாநாடு நடைபெறும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதனை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். அவர் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினார். தற்போது நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். அவரைப் போலவே நிறைய பேர் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

    பொதுமக்களுடைய ஆதரவு எங்களுக்கு நிறைய இருக்கிறது. பொதுமக்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



    நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை முருகரை பற்றி தான் பேசி வருகிறோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு பயங்கரவாதம் வரும், மத வெறி வரும் என்றெல்லாம் கூறுகிறார். மதம் குறித்து தொடர்ச்சியாக அமைச்சர்தான் பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழ் கடவுள் முருகனை அவர்கள் ஆராதனை செய்தார்கள். தற்போது நாங்கள் ஆராதனை செய்கிறோம். இதில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து எது உண்மையான முருகன் மாநாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

    இப்பொழுது தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 தொகுதியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இது தி.மு.க.வுக்கு நெருக்கடியாகவே இருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    பவன் கல்யாண் முருக பக்தர். அறுபடை வீடுகளுக்கு அவர் ஏற்கனவே வந்து விட்டு சென்றிருக்கிறார். இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொள்ளக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? சாமி தரிசனம் செய்யக்கூடாதா?

    வேலை எடுத்து சுற்றியதின் விளைவாக சூரசம்காரம் நடைபெற்றது ஜெயிக்க வேண்டும் என்றால் இறைவன் பல அவதாரங்களை எடுப்பார். எடுக்கப்பட்டிருக்கிறது அதற்கான முடிவுகள் வெளியாகும். இந்த ஆட்சி நீட்டிக்கப்படுமா என்பதை முருகன் தான் முடிவு செய்ய வேண்டும்

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லையே 20,000 ஆசிரியர்கள் இல்லையே முதலமைச்சரை நோக்கி ஏன் கேள்வி எழுப்பத் தயங்குகிறீர்கள்.

    டி.ஆர்.பி. தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள். மத்திய அரசின் நிதி தேவையில்லை நாங்கள் அரசாங்கத்தை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். மத்திய அரசை பகைத்துக் கொண்டே இருந்தால் எப்படி நிதி கொடுக்க முடியும்.

    தர்மங்கள் ஜெயிக்க வேண்டும். அதற்கு இறைவன் சிலர் அவதாரங்கள் எடுப்பார். அந்த வகையில் கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    • முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம்.
    • இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    திருப்பரங்குன்றம்:

    சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அருகில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளி வாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சனைகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-

    தர்கா மலை உச்சியிலே இருக்கிறது. அதேபோல, இந்துக்கள் வழிபாடு செய்கிற காசி விஸ்வநாதர் ஆலயமும் இதே மலையின் உச்சியில்தான் இருக்கிறது. இரண்டு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தளங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்று.

    மலைக்கு அடியிலே பழனி ஆண்டவர் கோவில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் முதல் படை வீட்டு முருகன் கோவில் இருக்கிறது. இங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில மதவாத அமைப்புகள் இதில் தலையீடு செய்து இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலே பகையை வளர்க்க முயற்சிக்கிறது.

    அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. எனவே இந்த பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் நான் இன்றைக்கு திருப்பரங்குன்றம் வருகை தந்தேன். முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம். ஆனால் நேரம் உச்சி வேலையாக இருப்பதால் நெடுந்தூரம் மலை ஏற முடியாத ஒரு சூழலில் இந்த அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும், இந்து சமூகத்தை சார்ந்த பிரதிநிதி தமிழன், தி.மு.க. கவுன்சிலர் ஆகியோரை சந்தித்தேன்.

    அவர்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். தங்கள் இடையில் இருந்த பகை இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்கள். ஆகவே மதவாதசக்திகள் இந்த பிரச்சனையை பெரிதாக்க கூடாது. தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக்கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
    • சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை.

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த 13-7-20222-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, ஜூலை 17-ம் தேதி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இதனிடையே, மாணவி மர்மம் தொடர்பான வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை சட்டப்படி நடைபெற்றது. சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை. விசாரணையில் தவறு காணப்படவில்லை என கூறிய நீதிபதி, தற்கொலை செய்து கொண்டதற்கான முகாந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதால் இம்மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

    3 ஆண்டுகளாக மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது
    • படுகாயம் அடைந்த ஜீப் டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுத தேவசேனா (வயது 50). இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார். ஜீப்பை அலுவலக டிரைவர் ஓட்டிச் சென்றார். ஆரமுத தேவசேனா ஜீப்பில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்த ஜீப் இன்று காலை ஜீயபுரம் அருகே கரியகுறிச்சி பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கியது.

    திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் கரிய குறிச்சி பகுதியில் நேருக்கு நேர் ஜீப் மீது மோதுவது போல் வந்தது. உடனே டிரைவர் பஸ் மீது மோதாமல் இருக்க ஜீப்பை வேகமாக இடது பக்கம் திருப்பினார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் சாலை பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், படுகாயம் அடைந்த அவரது ஜீப் டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    பலியான ஆர்.டி.ஓ. ஆரமுத தேவசேனாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகும்.

    பெண் உதவி கலெக்டர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் வருவாய்த் துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கடந்த ஏப்ரல் மாதம் புறநகர் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கோடை காலத்தில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையிலும் கூட ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை. இந்த ரெயிலில் பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை. 12 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3,798 பேர் பயணம் செய்ய முடியும். ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். சென்னையில் மெட்ரோ ரெயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் முழு அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஏ.சி. மின்சார ரெயிலில் 50 சதவீத பயணிகள் கூட பயணம் செய்யவில்லை. சென்னையில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் விரைவில் 2-வது மின்சார ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு இல்லாமல் போனதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதே காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குஜராத்தில் உள்ள பூஜ் முதல் அஞ்சார் வரை இயக்கப்படும் வந்தே மெட்ரோ ரெயிலுடன் ஒப்பிடும்போது, அங்கு 42 கி.மீ. பயணத்திற்கு ரூ.55 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தாம்பரம் - கடற்கரை இடையே 30 கி.மீ. பயணத்திற்கு கட்டணம் ரூ.85 ஆக உள்ளது.

    10 கி.மீ. வரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மாதாந்திர சீசன் டிக்கெட் விலை ரூ.2,115 ஆகவும், கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ரூ.1,705 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு

    உள்ளது. ஏ.சி. மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை நீண்ட வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதன் பயண நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாகும். இது தினமும் 10 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு குறுகிய சேவைகளாக இயக்கப்பட வேண்டும். காலை மற்றும் மாலையில் நெரிசலான நேரங்களில், சாதாரண மின்சார ரெயில்களுக்கு இணையாக, கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளை வழங்க வேண்டும். கட்டணத்தையும் குறைத்து கூடுதல் ரெயில் சேவைகளை இயக்கினால் ஏ.சி. மின்சார ரெயில்கள் பயணிகளின் வரவேற்பை பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.
    • போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார்.

    சென்னை:

    ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்த ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி: பா.ம.க.வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தி.மு.க. தான் காரணம் என அன்புமணி பேசியிருந்தது குறித்து...

    பதில்: பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்.

    கேள்வி: அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே?

    பதில்: அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர்.

    கேள்வி: மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

    பதில்: போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடினார். 

    • கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

    மாநில மருத்துவர் அணி நிர்வாகிகள்:

    சரவணன் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக விஷ்ணு, ரவி, அருண் பிரசாத், நரேஷ், அரவிந்த், பிரிதீங்கா, கார்த்திக், சித்தர் பாண்டியன், மணிமேகலை, ஹரி, ஜெகதா, சினோரா P.S. மோஹித், தமிழினியன், விவேக் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். 



    • பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.
    • விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    சென்னை பெரம்பூரில் நேற்று லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    * பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.

    * பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் இருக்க வேண்டும்.

    * விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    * காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • உங்கள் தைரியம், தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பலரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

    சென்னை:

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான உங்கள் தைரியம், தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பலரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

    நீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கான உங்கள் போராட்டத்தில் நீங்கள் வலு பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.



    • கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று காலையில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணி முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனால் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்து, டி.நரசிப்புராவில் உள்ள திருமகூடலு வழியாக ஒகேனக்கல் வந்து சேரும். அந்த வகையில் நேற்று கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 48 மணி நேரத்தில் தமிழகத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளை மதியத்துக்கு மேல் கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் நாளை இரவு முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.81 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று வினாடிக்கு 6829 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் பாசனத்திற்கு தொடர்ந்து 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 83.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×