என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த சேலம் 160 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பர்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிஷேக் 47 ரன்னும், ஹரி நிஷாந்த் 31 ரன்னும், சன்னி சாந்து 30 ரன்னும் எடுத்தனர். விஜய சங்கர் 2 ரன்னில் அவுட்டானார்.

    சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆஷிக் 36 பந்தில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோகித் ஹரிஹரன் 32 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சேப்பாக் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சேப்பாக் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம்.
    • 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர!

    மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சர்

    மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

    முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா?

    ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்.

    ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என்று அடுத்த வேலைக்கு, கமிஷன் கொள்ளையையும் விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர்.

    ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஓடிச் சென்ற ஸ்டாலின், 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?

    கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த #கள்ளச்சாராய_திமுகமாடல் அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திணடுக்கல்:

    செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (20ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ராஜக்காபட்டி புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அதிமுக.
    • உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் சென்றது திமுக அரசு.

    eகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்தது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி CBI விசாரணை தான் என மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்

    எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அதிமுக..

    அஇஅதிமுக-வின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் சென்றது திமுக அரசு.

    அதிலும் நீதிமன்றத்திடம் திமுக அரசு குட்டு தான் வாங்கியது என்றாலும், எதற்காக மேல்முறையீடு செய்தது கள்ளச்சாராய திமுக மாடல் அரசு? இதில் அச்சம் ஏற்பட என்ன காரணம்?

    அன்றே மக்களின்குரலாய் எடப்பாடியார் கேட்ட கேள்வி!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 24.6.2025, 25.6.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

    24.6.2025 - செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. சிவகங்கை

    2. திண்டுக்கல் கிழக்கு

    3. திண்டுக்கல் மேற்கு

    4. அரியலூர்

    5. பெரம்பலூர்

    6. கரூர்

    7. நாமக்கல்

    8. தருமபுரி

    9. கிருஷ்ணகிரி கிழக்கு

    10. கிருஷ்ணகிரி மேற்கு

    11. விழுப்புரம்

    12. கடலூர் கிழக்கு

    13. கடலூர் வடக்கு

    14. கடலூர் தெற்கு

    15. கடலூர் மேற்கு

    16. திருவண்ணாமலை வடக்கு

    17. திருவண்ணாமலை தெற்கு

    18. திருவண்ணாமலை கிழக்கு

    19. திருவண்ணாமலை மத்தியம்

    20. ராணிப்பேட்டை கிழக்கு

    21. ராணிப்பேட்டை மேற்கு

    24.6.2025 - செவ்வாய் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. கன்னியாகுமரி கிழக்கு

    2. கன்னியாகுமரி மேற்கு

    3. தூத்துக்குடி வடக்கு

    4. தூத்துக்குடி தெற்கு

    5. தென்காசி வடக்கு

    6. தென்காசி தெற்கு

    7. திருநெல்வேலி மாநகர்

    8. திருநெல்வேலி புறநகர்

    9. ராமநாதபுரம்

    10. விருதுநகர் கிழக்கு

    11. விருதுநகர் மேற்கு

    12. தேனி கிழக்கு

    13. தேனி மேற்கு

    14. மதுரை மாநகர்

    15. மதுரை புறநகர் கிழக்கு

    16. மதுரை புறநகர் மேற்கு

    17. புதுக்கோட்டை வடக்கு

    18. புதுக்கோட்டை தெற்கு

    19. ஈரோடு மாநகர்

    20. ஈரோடு புறநகர் கிழக்கு

    21. ஈரோடு புறநகர் மேற்கு

    25.6.2025 - புதன் கிழமை காலை 9.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. திருவாரூர்

    2. மயிலாடுதுறை

    3. நாகப்பட்டினம்

    4. தஞ்சாவூர் கிழக்கு

    5. தஞ்சாவூர் மேற்கு

    6. தஞ்சாவூர் மத்தியம்

    7. தஞ்சாவூர் தெற்கு

    8. கள்ளக்குறிச்சி

    9. சேலம் மாநகர்

    10. சேலம் புறநகர்

    11. திருச்சி மாநகர்

    12. திருச்சி புறநகர் வடக்கு

    13. திருச்சி புறநகர் தெற்கு

    14. நீலகிரி

    15. கோவை மாநகர்

    16. கோவை புறநகர் வடக்கு

    17. கோவை புறநகர் தெற்கு

    18. திருப்பூர் மாநகர்

    19. திருப்பூர் புறநகர் கிழக்கு

    20. திருப்பூர் புறநகர் மேற்கு

    25.6.2025 - புதன் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு

    கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:

    1. திருப்பத்தூர்

    2. வேலூர் மாநகர்

    3. வேலூர் புறநகர்

    4. திருவள்ளூர் வடக்கு

    5. திருவள்ளூர் மத்தியம்

    6. திருவள்ளூர் தெற்கு

    7. திருவள்ளூர் கிழக்கு

    8. திருவள்ளூர் மேற்கு

    9. செங்கல்பட்டு கிழக்கு

    10. செங்கல்பட்டு மேற்கு

    11. காஞ்சிபுரம்

    12. சென்னை புறநகர்

    13. வட சென்னை வடக்கு (கிழக்கு)

    14. வட சென்னை வடக்கு (மேற்கு)

    15. வட சென்னை தெற்கு (கிழக்கு)

    16. வட சென்னை தெற்கு (மேற்கு)

    17. தென் சென்னை வடக்கு (கிழக்கு)

    18. தென் சென்னை வடக்கு (மேற்கு)

    19. தென் சென்னை தெற்கு (கிழக்கு)

    20. தென் சென்னை தெற்கு (மேற்கு)

    மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும்; மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

    • பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை இருக்கும்.

    கோவை:

    பாப்பநாயக்கன்பாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளன.

    எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமுநகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.

    மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

    • விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? நீதிமன்றம் கேள்வி.
    • நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு செய்யப்பட்டு நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

    மருத்துவரின் இடத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற ஆர்.டி.ஓ. ஆணையிட்டார். வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா ஆசிரமம் சார்பில் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

    திருவண்ணாமலை நித்தியானந்த பீட அறங்காவலர் சந்திரசேகரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது ? நீங்கள் அங்கு சென்றுள்ளீர்களா? அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட்டு, விசா ஏதும் உள்ளதா? போன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    நித்யானந்தா ஆஸ்திரேலியா அருகில் உள்ள யுஎஸ்கே (United States of Kailasa) என்ற கைலாசா என்கிற தனி நாட்டில் உள்ளார். யுஎஸ்கே நாட்டிற்கு ஐநா சபையின் அங்கீகாரம் உள்ளது என நித்தியானந்தாவின் சீடர் பதில் அளித்தார்.

    மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கறிஞரை மாற்ற நித்யானந்தா தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?
    • போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.

    விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் திமுக அரசு, விளைவித்த பழங்களுக்கு விலையின்றி தவிக்கும் "மா" விவசாயிகளின் நலனை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தித்திக்கும் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் கிடைக்கும் என மகிழ்ந்திருந்த விவசாயிகளை உரிய விலையின்றி ஏமாற்றத்தை அளித்து வதைத்து வருகிறது திமுக அரசு.

    தெருவில் இறங்கி விவசாயிகள் போராடி வரும் வேளையில், மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொள்முதல் செய்ய ஆணையிட்டு பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட்டதாய் முழங்கி வருகிறது திமுக அரசு.

    ஆனால், மொந்த வணிகர்கள் இரகசிய கூட்டணி அமைத்து கொள்முதல் விலையைக் குறைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கும் அடிப்படை புகாரைக் கூட திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

    தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு புளகாங்கிதம் அடையும் திமுக அரசு, ஆந்திராவில் வழங்குவது போல தமிழகத்திலும் மாம்பழம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 மானியமாக வழங்க முயற்சிக்காதது ஏன்?

    காய், கனி சார்ந்த தோட்டக்கலை விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க முயற்சி எடுக்கப்படும் எனும் 2021 நேர்தல் வாக்குறுதி எண் 35-ஐ நான்காண்டுகளாகியும் நிறைவேற்றாது கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் சாதனையா?

    தமிழகத்தில் ஒவ்வொரு போகத்தின் போதும், போதிய விலை இல்லாததால் தக்காளியில் துவங்கி மாம்பழம் வரை சிரமப்பட்டு கண்ணுங்கருத்துமாக விளைவித்த பழங்களைத் தெருவில் கொட்டி போராடும் நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனை தேவையான குளிர்பதனக் கிடங்குகளையோ, போதிய உணவுத் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளையோ நிறுவாமல் விவசாயிகளை வதைப்பது தான் உழவர் நலனா?

    "தோளில் பச்சைத் துண்டு அணியும் போலி விவசாயி நான் அல்ல" என்று கூறும் மாண்புமிகு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், மானியத்துடன் கூடிய மாம்பழம் கொள்முதல் விலையை ரூ. 20/கி ஆக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குடிக்கிறது யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி திருந்துவான், இவரு சொல்லி திருந்துவான் இல்லை.
    • குடிக்கிறவன் நாட்டுக்கு தேவையில்லை என்று பேசினார்.

    சென்னை:

    பம்மல் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போன தேர்தலில் தோற்றதுக்கு காரணமும் ஆட்சிக்கு வர்றதுக்கும் நாங்க தான் காரணம். ஏன் என்றால் எங்கள் தளபதி சொன்னார், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடையை முதலில் மூடுவோம் என்று. நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று சொன்னால் ஒட்டுமொத்த பேரும் எங்களுக்கு ஓட்டுப்போடுவாங்கன்னு.

    ஆனா, குடிக்கிறவங்கள் எல்லாம் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கினதே டாஸ்மாக்கில் தான். சேல்ஸ் மேனும், சூப்பர்வைசரும் தான் தேர்தல் பிரசாரக் கருவி. அங்கு 5, 10 ரூபாய் குறைவா கொடுத்தாலும் பரவாயில்லைன்னு வாங்கி கல்லாவில் போடும் போது சொன்னான், இன்னிக்குதான் கடைசி, இனிமேல் கிடையாது என்றார். சாப்பாடுக்கூட இல்லாமல் இருப்போம் சரக்கு இல்லன்னா எப்படின்னு யோசனை பண்ணி இவங்க ஆட்சிக்கு வந்து கடையெல்லாம் மூடிட்டா என்ன பண்றதுன்னு சொல்லி குடிக்கிறவங்களா சேர்ந்து ஓட்டு மாற்றிபோட்டதால் தான் நாங்க ஆட்சியை விட்டுப்போனோம். இந்த தேர்தலில் நிறைய பேர் கேட்டாங்க, மூடுவிங்களா?ன்னு நாங்க வாயே மூடிட்டோம். ஏதாவது அபிப்ராயம் உண்டா என்றான். வாயைத்திறக்கவில்லை.

    இப்போ சொல்றேன். இது திராவிட முன்னேற்றக்கழகத்தின் கருத்து இல்லை. முதலமைச்சரின் கருத்து இல்லை. இது நெல்லிக்குப்பம் புகழேந்தியின் தனிப்பட்ட கருத்து. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் டாஸ்மாக் கடையை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு எல்லாம் மூட சொல்ல மாட்டேன். 24 மணி நேரமும் இயங்கட்டும். யாருக்கும் வஞ்சனை இல்ல. குடிக்கிறவன் தான் குடிக்கப்போவான்.

    குடிக்கிறது யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி திருந்துவான், இவரு சொல்லி திருந்துவான் இல்லை. அவனா திருந்தின்னாதான் உண்டே தவிர வேற யாராலயும் அவனை திருத்த முடியாது. இது என்னுடைய கருத்து. எதுக்கு டாஸ்மாக் கடை 24 மணிநேரமும் திறக்கணும் சொல்கிறேன் என்றால்... குடிக்கிறவன் நாட்டுக்கு தேவையில்லை என்று பேசினார். 

    • அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப மனு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு இல்லத்திலும் தலா 5 முதல் 10 நிமிட நேரத்தை உறுப்பினர் சேர்க்கைக் குழுவினர் செலவிட வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்திருந்த அந்த தீர்மானத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதாவது ஒரு திட்டத்தில் பயனாளியாக இருப்பதால் அனைத்து குடும்பங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதற்காக அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப மனு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    ஒரு விண்ணப்பத்தில் 25 நபர்களை சேர்க்கும் வகையில் விவரங்கள் இடம் பெற்றுள்ளது. உறுப்பினர் சேர்க்கையை 20-ந்தேதி (நாளை) தொடங்குவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் ஏனோதானோ என்று இதை செயல்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்கள் அடங் கிய புதிய செயலியை தி.மு.க. தலைமை உருவாக்கி உள்ளது.

    இந்த செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்குவதற்காக ஐ.டி. விங்க் நிர்வாகிகள் மாவட் டத்துக்கு ஒருவர் வீதம் 234 பேர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையானது தலைமைக் கழகத்தில் இருந்து பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் வழியாக நடைபெறும். அதே சமயத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேகமாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. படிவத்தில் நிரப்பப்படும் அதே விவரங்கள் செயலியிலும் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

    நாளை தொடங்க இருக்கும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் முதற்கட்டமாக செயலியைப் பயன்படுத்தும் முறை குறித்து தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்த 234 பேருக்கு தலைமைக்கழகத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.

    பயிற்சி பெற்ற 234 பேரும், தலா ஒரு தொகுதியில், மாவட்டச் செயலாளர்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கு (30 வயதுக்குட்பட்ட, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்) பயிற்சி அளிப்பர்.

    இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தொகுதியிலேயே மாவட்டச் செயலாளர்கள் வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி செய்து தரக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சிக்கு முறையான இணைய வசதி, எல்.இ.டி. இருப்பது அவசியம்.

    பயிற்சிக் கூட்டத்தில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் மட்டுமின்றி பி.எல்.ஏ.2-க்களும் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.

    செயலியில் உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் வழியாகவே கழகத்தலைவர், தலைமைக்கழகத்திற்கு எந்தத் தொகுதியில், எந்த வாக்குச்சாவடியில், எவ்வளவு உறுப்பினர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தினசரி தெரிய வரும் என்பதால் இச்செயல் பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அனைத்துத் தொகுதிகளிலும் பயிற்சிக் கூட்டங்கள் நிறைவடைந்த பிறகு கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி படிவத்தில் நிரப்பி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைப்பார். அதன் பிறகு அனைத்துத் தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிட வேண்டும்.

    மாவட்டச் செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் பட்டியலை தலைமைக் கழகத்தில் இருந்து சரிபார்க்கும்போது பல தொகுதிகளில் சுமார் 30 சதவீதம் பேர் வரைக்கும் தகுதியானவர்களாக இல்லை. எனவே, அத்தகைய வாக்குச்சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களை செயலியில் உள்ளீடு செய்வதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள், புதிய உறுப்பினர்கள் என அனைவரையும் உறுப்பினராக இணைத்து ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 30 சதவீத உறுப்பினர் சேர்க்கை என்பதை உறுதி செய்திட வேண்டும்.

    உறுப்பினர் படிவத்தில் வாக்குச்சாவடி எண்ணைக் கட்டாயம் குறிப்பிடவும், ஏற்கனவே உறுப்பினர் எனில் அதனையும் குறிப்பிடவும்.

    தேர்தல் சமயத்தில் ஒரு குறிப்பேட்டில் குடும்பங்கள் பிரித்து, அக்குடும்பத்தின் அரசியல் நிலைப்பாட்டை எழுதிக் கொள்வதைப் போல இப்பொழுதே குறித்து வைத்துக் கொண்டால் தேர்தல் சமயத்தில் இன்னொரு முறை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    கழகத்தலைவர் அறிவித்துள்ளபடி உறுப்பினர் சேர்க்கையை தேர்தல் பரப்புரையாக மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொரு இல்லத்திலும் தலா 5 முதல் 10 நிமிட நேரத்தை உறுப்பினர் சேர்க்கைக் குழுவினர் செலவிட வேண்டும்.

    உறுப்பினர் சேர்க்கைக் குழுவில் மகளிர், இளைஞர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஜூலை இறுதிவரை, அதாவது நாற்பது நாட்கள் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்பதால் தினசரி 10 முதல் 15 வீடு களில் உறுப்பினர் சேர்க்கையை நிகழ்த்தலாம். உறுப்பினர் சேர்க்கையின் இறுதியில் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு முறையேனும் சென்று வந்திருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

    நிர்வாகிகள், சார்பு அணியினர் என அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கையில் கலந்து கொள்ள வேண்டும். நிழற்படங்களை ஓரணியில் தமிழ்நாடு என்ற உடன் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட வேண்டும்.

    உறுப்பினர் சேர்க்கைக்கான வீடுகளின் கதவுகளில் வாகனத்தின் பின்புறம் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்கள், பாக்கெட் காலண்டர்கள், சிறு புத்தகம் ஆகியவை இன்று இரவு முதல் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வீடு வீடாக விநியோகம் செய்வதையும், ஒட்டுவதையும் மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து ஏதேனும் சந்தேகமிருப்பின் தலைமைக்கழகத்தை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் கல்லேரிபட்டு கிராமத்தை வசீகரன் என்ற மாணவனும் பஸ்சில் வந்து இறங்கினார்.
    • காயமடைந்த மாணவன் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்தப் பள்ளியில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    ஆரணி அருகே உள்ள சுந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி மேகநாதன் மகன் சதீஷ்குமார் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை வழக்கம் போல் சதீஷ்குமார் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். இதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் கல்லேரிபட்டு கிராமத்தை வசீகரன் என்ற மாணவனும் பஸ்சில் வந்து இறங்கினார்.

    இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பஸ்சில் இருந்து இறங்கிய சதீஷ்குமார் பள்ளியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ஆரணி சார் பதிவாளர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் வசீகரனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வசீகரன் கத்தியால் சதீஷ்குமாரின் பின்பக்க கழுத்தில் பக்கவாட்டில் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .அதனை தடுக்க முயன்றபோது சதீஷ்குமாரின் கைவிரல்களிலும் கத்தி வெட்டு விழுந்தது.

    இதனை கண்ட சக மாணவர்கள் அலறி அடித்தபடி ஓடினர். அங்கிருந்த பொதுமக்கள் மாணவர்களை விலக்கி விட்டனர்.

    காயமடைந்த மாணவன் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த மோதலில் மாணவர் வசீகரனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் அதே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

    நடுரோட்டில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஆரணி நகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்:-

    மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களும் இந்த ஆண்டுதான் பள்ளியில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடையே என்ன தகராறு என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர். 

    • இந்து சமய அறநிலைத்துறை என்பது அறம் சார்ந்த ஒரு துறை.
    • திருச்செந்தூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் இன்றைக்கு குடமுழுக்குக்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா தோட்டம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளின் இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருகர் மாநாடு ஆன்மீகவாதிகளால் நடத்தப்படும் மாநாடு என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஆந்திராவில் இருக்கும் பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். உத்தரப்பிரதேசத்தின் யோகிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்.

    இந்து சமய அறநிலைத்துறை என்பது அறம் சார்ந்த ஒரு துறை. அறம் என்றாலே கோவில்களின் பணிகளை போதிப்பது, மனிதனை ஒழுக்கப்படுத்துவது. ஆனால் இவர்கள் நடத்துகின்ற இந்த மாநாடு இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுபடுத்துகின்ற மாநாடு.

    இறை அன்பர்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த துறை நிறைவேற்றுவதால் தான் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு 117 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளோம். 136 முருகன் கோவில்களில் குடமுழுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    பெருந்திட்ட வரைவின் காரணமாக எடுத்துக்கொண்ட 846 பணிகள் 1446 கோடி ரூபாய் செலவில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முருக பக்தர்களுக்கு அதிசயிக்கின்ற வகையில் திருப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.

    பழனியை சென்று பாருங்கள் அங்கு எவ்வளவு ரம்யமான சூழல் நிலவுகிறது. திருச்செந்தூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் இன்றைக்கு குடமுழுக்குக்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பரங்குன்றத்தில் அடுத்த மாதம் 14-ந்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே இதுபோன்ற மக்களை பிளவுபடுத்துகின்ற ஒரு சாராரை வைத்து நடத்துகின்ற மாநாடுகள் தேவையற்றது.

    தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என வைகை செல்வன் கூறியுள்ளார்.

    தி.மு.க. கூட்டணி உறுதிமிக்க கப்பலை போன்றது. இந்த கப்பலை செலுத்துகின்ற மாலுமி பல்வேறு பூகம்பங்கள், புயல், மின்னல் உள்ளிட்டவை சந்தித்து தி.மு.க. என்ற கப்பலை கரைக்கு கொண்டு வந்து ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியின் நீட்சி தொடரும்.

    2026 சட்டமன்றத் தேர்தலிலும் திறமைமிக்க இந்த மாலுமியால் எப்படிப்பட்ட கடல் முரணாக இருந்தாலும் கடல் அலையை அரணாக்கி இந்த ஆட்சி தொடர்வதற்கு எல்லாம் வல்ல முருகன் எங்கள் முதலமைச்சருக்கு துணையாக இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×