என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி: மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
    X

    தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி: மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

    • அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப மனு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு இல்லத்திலும் தலா 5 முதல் 10 நிமிட நேரத்தை உறுப்பினர் சேர்க்கைக் குழுவினர் செலவிட வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்திருந்த அந்த தீர்மானத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதாவது ஒரு திட்டத்தில் பயனாளியாக இருப்பதால் அனைத்து குடும்பங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதற்காக அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப மனு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    ஒரு விண்ணப்பத்தில் 25 நபர்களை சேர்க்கும் வகையில் விவரங்கள் இடம் பெற்றுள்ளது. உறுப்பினர் சேர்க்கையை 20-ந்தேதி (நாளை) தொடங்குவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் ஏனோதானோ என்று இதை செயல்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்கள் அடங் கிய புதிய செயலியை தி.மு.க. தலைமை உருவாக்கி உள்ளது.

    இந்த செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்குவதற்காக ஐ.டி. விங்க் நிர்வாகிகள் மாவட் டத்துக்கு ஒருவர் வீதம் 234 பேர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் நாளை பயிற்சி வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையானது தலைமைக் கழகத்தில் இருந்து பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் வழியாக நடைபெறும். அதே சமயத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேகமாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. படிவத்தில் நிரப்பப்படும் அதே விவரங்கள் செயலியிலும் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

    நாளை தொடங்க இருக்கும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் முதற்கட்டமாக செயலியைப் பயன்படுத்தும் முறை குறித்து தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்த 234 பேருக்கு தலைமைக்கழகத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.

    பயிற்சி பெற்ற 234 பேரும், தலா ஒரு தொகுதியில், மாவட்டச் செயலாளர்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கு (30 வயதுக்குட்பட்ட, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்) பயிற்சி அளிப்பர்.

    இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தொகுதியிலேயே மாவட்டச் செயலாளர்கள் வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி செய்து தரக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சிக்கு முறையான இணைய வசதி, எல்.இ.டி. இருப்பது அவசியம்.

    பயிற்சிக் கூட்டத்தில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் மட்டுமின்றி பி.எல்.ஏ.2-க்களும் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.

    செயலியில் உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் வழியாகவே கழகத்தலைவர், தலைமைக்கழகத்திற்கு எந்தத் தொகுதியில், எந்த வாக்குச்சாவடியில், எவ்வளவு உறுப்பினர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தினசரி தெரிய வரும் என்பதால் இச்செயல் பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அனைத்துத் தொகுதிகளிலும் பயிற்சிக் கூட்டங்கள் நிறைவடைந்த பிறகு கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி படிவத்தில் நிரப்பி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைப்பார். அதன் பிறகு அனைத்துத் தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிட வேண்டும்.

    மாவட்டச் செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் பட்டியலை தலைமைக் கழகத்தில் இருந்து சரிபார்க்கும்போது பல தொகுதிகளில் சுமார் 30 சதவீதம் பேர் வரைக்கும் தகுதியானவர்களாக இல்லை. எனவே, அத்தகைய வாக்குச்சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களை செயலியில் உள்ளீடு செய்வதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள், புதிய உறுப்பினர்கள் என அனைவரையும் உறுப்பினராக இணைத்து ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 30 சதவீத உறுப்பினர் சேர்க்கை என்பதை உறுதி செய்திட வேண்டும்.

    உறுப்பினர் படிவத்தில் வாக்குச்சாவடி எண்ணைக் கட்டாயம் குறிப்பிடவும், ஏற்கனவே உறுப்பினர் எனில் அதனையும் குறிப்பிடவும்.

    தேர்தல் சமயத்தில் ஒரு குறிப்பேட்டில் குடும்பங்கள் பிரித்து, அக்குடும்பத்தின் அரசியல் நிலைப்பாட்டை எழுதிக் கொள்வதைப் போல இப்பொழுதே குறித்து வைத்துக் கொண்டால் தேர்தல் சமயத்தில் இன்னொரு முறை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    கழகத்தலைவர் அறிவித்துள்ளபடி உறுப்பினர் சேர்க்கையை தேர்தல் பரப்புரையாக மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொரு இல்லத்திலும் தலா 5 முதல் 10 நிமிட நேரத்தை உறுப்பினர் சேர்க்கைக் குழுவினர் செலவிட வேண்டும்.

    உறுப்பினர் சேர்க்கைக் குழுவில் மகளிர், இளைஞர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஜூலை இறுதிவரை, அதாவது நாற்பது நாட்கள் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்பதால் தினசரி 10 முதல் 15 வீடு களில் உறுப்பினர் சேர்க்கையை நிகழ்த்தலாம். உறுப்பினர் சேர்க்கையின் இறுதியில் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு முறையேனும் சென்று வந்திருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

    நிர்வாகிகள், சார்பு அணியினர் என அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கையில் கலந்து கொள்ள வேண்டும். நிழற்படங்களை ஓரணியில் தமிழ்நாடு என்ற உடன் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட வேண்டும்.

    உறுப்பினர் சேர்க்கைக்கான வீடுகளின் கதவுகளில் வாகனத்தின் பின்புறம் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்கள், பாக்கெட் காலண்டர்கள், சிறு புத்தகம் ஆகியவை இன்று இரவு முதல் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வீடு வீடாக விநியோகம் செய்வதையும், ஒட்டுவதையும் மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து ஏதேனும் சந்தேகமிருப்பின் தலைமைக்கழகத்தை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×