என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராய மரணங்கள்"

    • அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம்.
    • 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர!

    மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சர்

    மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

    முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா?

    ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும்.

    ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என்று அடுத்த வேலைக்கு, கமிஷன் கொள்ளையையும் விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர்.

    ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஓடிச் சென்ற ஸ்டாலின், 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்?

    கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த #கள்ளச்சாராய_திமுகமாடல் அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அதிமுக.
    • உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் சென்றது திமுக அரசு.

    eகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்தது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி CBI விசாரணை தான் என மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்

    எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அதிமுக..

    அஇஅதிமுக-வின் கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் சென்றது திமுக அரசு.

    அதிலும் நீதிமன்றத்திடம் திமுக அரசு குட்டு தான் வாங்கியது என்றாலும், எதற்காக மேல்முறையீடு செய்தது கள்ளச்சாராய திமுக மாடல் அரசு? இதில் அச்சம் ஏற்பட என்ன காரணம்?

    அன்றே மக்களின்குரலாய் எடப்பாடியார் கேட்ட கேள்வி!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசு.
    • அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா?

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

    கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொடுந்துயரம் நிகழ்ந்தது. விழுப்புரத்தில் திமுக நிர்வாகியே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதும், அவருக்கும் சேர்த்து திமுக அரசு நிவாரணத்தொகை அறிவித்த கொடுமைகளும் நடைபெற்றது.

    அதன் பிறகாவது திமுக அரசு விழிப்புற்று கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது மீண்டும் 5 உயிர்கள் பலியான துயரங்கள் நிகழ்ந்திருக்காது. அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? கள்ளச்சாராயத்தால் கண்ணுக்குமுன் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகும்போது மட்டும், மக்களின் மனக்கொந்தளிப்பிற்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திமுக அரசு, மெல்ல மெல்ல பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் மலிவு விலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்? ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற திமுகவின் கடந்தகால வாக்குறுதி என்னானது? சாராய ஆலைகளை நடத்தும் திமுகவினர் தங்கள் ஆலைகளை இதுவரை மூடாதது ஏன்? கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்?

    திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்கத் தவறியதும், வீரன் மதுபானம், கோதுமை பீர் வகை என்று டாஸ்மாக் மதுவிற்பனையை அதிகப்படுத்தியதுமே முதன்மையான சாதனையாகும். மகளிருக்கு உதவித்தொகை தருவதாகப் பெருமை பேசும் திமுக அரசு, டாஸ்மாக் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் தந்தையையும், கணவரையும், பிள்ளைகளையும், உடன் பிறந்தாரையும் இழந்து தவிக்கும் பெண்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது? தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகவுள்ள போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுப்பதில் திமுக அரசு தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்? கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வினைவிட, திமுக அரசிற்கு மதுவிற்பனையால் வரும் பல்லாயிரம் கோடி வருமானமும், அதன் மூலம் நடைபெறும் ஆட்சி அதிகாரமும்தான் முக்கியமானதா? என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது.

    ஆகவே, கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுதாக தடுக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ×