என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆராமுத தேவசேனா
திருச்சி அருகே ஜே.சி.பி. எந்திரம் மீது ஜீப் மோதி விபத்து - பெண் சப்-கலெக்டர் பலி
- ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது
- படுகாயம் அடைந்த ஜீப் டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுத தேவசேனா (வயது 50). இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார். ஜீப்பை அலுவலக டிரைவர் ஓட்டிச் சென்றார். ஆரமுத தேவசேனா ஜீப்பில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்த ஜீப் இன்று காலை ஜீயபுரம் அருகே கரியகுறிச்சி பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கியது.
திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் கரிய குறிச்சி பகுதியில் நேருக்கு நேர் ஜீப் மீது மோதுவது போல் வந்தது. உடனே டிரைவர் பஸ் மீது மோதாமல் இருக்க ஜீப்பை வேகமாக இடது பக்கம் திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் சாலை பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த அவரது ஜீப் டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
பலியான ஆர்.டி.ஓ. ஆரமுத தேவசேனாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகும்.
பெண் உதவி கலெக்டர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் வருவாய்த் துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






