என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த காட்சி.
மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது- திருமாவளவன்
- முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம்.
- இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
திருப்பரங்குன்றம்:
சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அருகில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளி வாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சனைகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-
தர்கா மலை உச்சியிலே இருக்கிறது. அதேபோல, இந்துக்கள் வழிபாடு செய்கிற காசி விஸ்வநாதர் ஆலயமும் இதே மலையின் உச்சியில்தான் இருக்கிறது. இரண்டு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தளங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்று.
மலைக்கு அடியிலே பழனி ஆண்டவர் கோவில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் முதல் படை வீட்டு முருகன் கோவில் இருக்கிறது. இங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில மதவாத அமைப்புகள் இதில் தலையீடு செய்து இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலே பகையை வளர்க்க முயற்சிக்கிறது.
அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. எனவே இந்த பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் நான் இன்றைக்கு திருப்பரங்குன்றம் வருகை தந்தேன். முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம். ஆனால் நேரம் உச்சி வேலையாக இருப்பதால் நெடுந்தூரம் மலை ஏற முடியாத ஒரு சூழலில் இந்த அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும், இந்து சமூகத்தை சார்ந்த பிரதிநிதி தமிழன், தி.மு.க. கவுன்சிலர் ஆகியோரை சந்தித்தேன்.
அவர்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். தங்கள் இடையில் இருந்த பகை இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்கள். ஆகவே மதவாதசக்திகள் இந்த பிரச்சனையை பெரிதாக்க கூடாது. தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக்கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






