என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடி இருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்.

    என விஜய் கூறினார்.

    • ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
    • மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

    சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் 71,000 கோவில்கள் இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

    * ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

    * சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும். அதன்பின் பேசட்டும்.

    * பா.ஜ.க.வினருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டது அ.தி.மு.க.

    * பெரியார், அண்ணா மட்டுமின்றி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரைதான் அண்ணாமலை வசைபாடி உள்ளார்.

    * அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது.

    * யார் பலம் வாய்ந்தவர்கள்? என நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுகிறது.

    * நயினார் நாகேந்திரன் பச்சைத்துண்டுடனும், அண்ணாமலை காவி துண்டுடனும் சுற்றுகின்றனர்.

    * மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

    * அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
    • கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.

    திருவிடைமருதூர்:

    கும்பகோணம் அருகே ஆடுதுறையில் செய்தியாளர்களை அமைச்சர் கோவி.செழியன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆங்கிலம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்து இந்தியையும், வட மொழியையும் திணிப்பதற்கான வழிதான்.

    அவரது கருத்தை என்றும் தமிழகம் ஏற்காது. மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

    ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு கூட மாநில மொழி பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

    கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.

    5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை தமிழர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தினர் என்பது உலகினரை அதிசயித்து பார்க்க வைத்து உள்ளது.

    இந்தியாவில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும்.
    • தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்.

    சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நடப்பாண்டில் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள் பெரிதும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்காமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    நெல், கரும்பு உள்ளிட்ட ஒரு சில பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளதுபோல வேளாண் பெருமக்கள் விளைவிக்கும் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டுமென வேளாண் பெருங்குடி மக்கள் நெடுங்காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால் நெல், கரும்புக்கே உரிய ஆதார விலை அளிக்காமல் ஒன்றிய - மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன. ஒரே விளைபொருளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கொள்முதல் விலை இருப்பது இந்த நாட்டில் மட்டுமே நிகழும் மாபெரும் அநீதியாகும்.

    வேளாண் பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயிக்க மறுத்து, விவசாயிகளை நட்டத்திற்கு ஆளாக்கி, அவர்களது குடும்பத்தை வறுமையில் வாடவிடும் திமுக அரசு, வேளாண்மைக்குத் தனிநிதிநிலை அறிக்கை வெளியிடுவதையே பெரும் சாதனை போல் விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது.

    ஆந்திர மாநில அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயித்து அம்மாநில மாம்பழ விவசாயிகளைப் பெரும் நட்டத்திற்கு ஆளாகாமல் காத்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்குள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளிடம் பிற மாநில மாம்பழங்களைக் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. இதனால், அங்குள்ள மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதார் அட்டை, வங்கி முகவரியை சோதித்து தமிழ்நாட்டு மாம்பழங்களைத் திருப்பி அனுப்புகின்றன.

    ஆனால், தமிழ்நாட்டில் அப்படியான எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை; மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையும் திமுக அரசு நிர்ணயிக்கவில்லை. இதனால் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும்கூட, உரிய விலை கிடைக்காமல் தமிழக மாம்பழ விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு ஆளாகி, இழப்பீடு கேட்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

    திமுக அரசு அந்த இழப்பீட்டையும் வழங்க மறுப்பதால் மாம்பழங்களை வீதியில் கொட்டிவிட்டு வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.

    விளைச்சல் குறைந்தால் உற்பத்தி செலவைக்கூட ஈடுசெய்ய முடியாமல் நட்டத்திற்கு ஆளாகும் விவசாயிகள், அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும்.

    கடுமையான உழைப்பும், அந்த உழைப்புக்கேற்ற விளைச்சலும் கிடைத்த பின்னும் விவசாயிகள் வறுமையில் வாடி, பட்டினியாகப் படுத்துறங்க நேர்ந்தால் இந்த நாடு மாபெரும் பஞ்சத்தை எதிர்கொள்வதை எவராலும தடுக்க முடியாது என எச்சரிக்கிறேன்.

    ஆகவே, தமிழ்நாட்டு மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும். விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    தமிழ்நாடு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கக்கோரியும், உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்று உறுதியளிக்கின்றேன்.

    • சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
    • சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.

    சென்னிமலை:

    சேவல் சண்டை விளையாட்டு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடக, அந்திரா, தெலுக்கான, மஹாராட்ரா, உள்ளிட்ட மாநிலங்களில் கிராம புறங்களில் பண்டிகை காலங்களில் சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறி விட்ட நிலையில் அரசு அதற்கு தடை விதித்துள்ளது.

    ஆனால், மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது. அதுவும், தமிழ்நாட்டு சேவலுக்கு மற்ற மாநிலங்களில் அதிக மவுசும், விற்பனை வாய்ப்பு, நல்ல விலையும் கிராக்கியும் உள்ளதால் தற்போது இந்த சண்டை கோழி வளர்ப்பு தொழில் சூடு பிடித்துள்ளது. சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 50க்கும் மேற்பட்ட சண்டை சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளது. அதிக படியான வாலிபர்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

    சண்டை சேவல் குஞ்சு தேர்வில் இருந்து தொடங்கி அதை வளர்பதற்கு பெரும் முக்கியதுவம் கொடுத்து சண்டைகோழி வளர்ப்பில் வாலிபர்கள் ஆர்வமுடன் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில், காகம், வல்லூறு, ஆந்தை, கீரி, மயில், செங்கருப்பு, கோழிக்கறிப்பு, ஜல்லிக்கருப்பு என பல்வேறு ரகங்கள் உள்ளது. கேராள மாநில மக்கள் அழகுக்காக வீடுகளில் சேவல் வளர்க்க வாங்குகின்றனர் அதில், கிளி மூக்கு, கட்ட மூக்கு, விசிறி வால், மீட்டர் வால் என்ற ரகங்கள் அங்கு விற்பனை ஆகிறது அதுவும் ஒரு சேவல் ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை விலை போகிறது.

    அதே போல் சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, கத்தி கால் சண்டை என ஒவ்வொறு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன.


    சண்டை சேவல் வளர்ப்பு சாவல் மிகுந்த வேலை தான் என்கிறார் சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவில் சண்டை சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சீனிவாசன், (46), இது குறித்து அவர் கூறும் போது:

    பொதுவாகவே, சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சி யோடு, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி என சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது.

    சண்டை கோழிவளர்ப்பில் உணவு முக்கியம் வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, அத்தி பழம் போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்குத் நன்கு தயாராகிய சேவல்களைப் சண்டை ஒத்திகை பார்த்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஒரு கோழி குறைந்தது ரூ.5 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை சண்டை திறனை பொறுத்து விலை போகிறது. மேலும், சண்டை கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.1,200 வரை விலை போகிறது. சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.

    தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டுக்கு தடைவிதித்த போது தமிழகத்தில் வாலிபர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி போன்று சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்கிற கோரிக்கை வாலிபர்கள் மத்தியில் வலுவாகி கொண்டே வருகிறது. சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.

    'சேவல் சண்டையை போட்டியாகப் பார்க்காமல், இதை ஒரு பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்க வேண்டும். இந்த வீர விளையாட்டு ராஜாக்கள் காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது''எப்படி ஜல்லிகட்டு விளையாட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதோ அதே போல் சேவல் சண்டை அழியாமல் தடுக்க போராட்டம் நடத்தி அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை மீட்டெடுக்க வேண்டும்' என்கிறார்.

    • தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,235-க்கும் ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.

    தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,235-க்கும் ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,230-க்கும் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120

    18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    21-06-2025- ஒரு கிராம் ரூ.120

    20-06-2025- ஒரு கிராம் ரூ.120

    19-06-2025- ஒரு கிராம் ரூ.122

    18-06-2025- ஒரு கிராம் ரூ.122

    • ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
    • வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்தன.

    அதன்பின்னர் சற்று மழை ஓய்ந்திருந்தது. கடந்தவாரம் முதல் மீண்டும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது.

    நேற்று ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கி, பலத்த மழையாக வெளுத்து வாங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இன்று காலையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தொழிலாளர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது. ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன டிரைவர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

    இரவில் மட்டும் அல்லாமல் பகலிலேயே குளிர் காணப்பட்டதால் நேற்று விடுமுறை தினம் என்றாலும் பஜார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. மழை காரணமாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

    கோவை மாவட்டத்தில் காலை முதல் மிதமான வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறி லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவில் காந்திபுரம், அண்ணாசிலை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை உள்ளது. காலையிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    • சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரெயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
    • ஓ.டி.பி.யை பதிவு செய்ததும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும்.

    சென்னை:

    ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளால் தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரெயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

    அதேவேளையில், வருகிற 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

    அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம், ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி உள்ளது.

    அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது யூசர் ஐ.டி. (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐ.ஆர்.சி.டி.சி. முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று 'மை அக்கவுன்ட்' என்ற தலைப்பின் கீழ் இருக்கும் 'ஆத்தென்டிகேட் யூசர்' (பயனாளரை அங்கீகரிக்கவும்) என்பதை தேர்வு செய்து ஆதார் அட்டையில் இருப்பது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும்.

    அவ்வாறு பதிவு செய்ததும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அந்த ஓ.டி.பி.யை பதிவு செய்ததும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், இணையதளத்தில் பதிவு செய்யும் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே ஆதார் இணைக்கப்படுகிறது. கடைசி நேர சிக்கலை தவிர்க்க பயனாளர்கள் தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைக்க ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    • தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது.
    • இதுபோன்ற வழக்குகளில் ஒரே நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால் தான் விரைவில் நீதி கிடைக்கும்.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர்.

    தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது.

    இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு விசாரணை மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாதது ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தினரிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஜெயராஜ்-பெனிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல்கள் கூறியதாவது:-

    இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை கோர்ட்டுக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

    ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கிளை, 3 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க மதுரை கோர்ட்டுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    இதுவரை இந்த வழக்கை 4 நீதிபதிகள் விசாரித்து உள்ளனர். தற்போது 5-வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் கோர்ட்டுக்கு பொறுப்பு நீதிபதியாகவே இருந்து வருகிறார்.

    இது ஒரு முக்கியமான வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் ஒரே நீதிபதி மூலம் விசாரணையை மேற்கொண்டால் தான் விரைவில் நீதி கிடைக்கும்.

    ஆனாலும், இதை ஒரு உரிமையாக கோர முடியாது என்பதால் எங்களால் இந்த விவகாரத்தில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

    அதேவேளையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் தனித்தனியாக 9 வக்கீல்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 9 பேரும் தனித்தனியாக சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 105 பேரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

    இது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை. இதை எந்தவிதத்திலும் தடுக்க முடியாது. அதேவேளையில் இதை விரைந்து முடிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.

    இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் செயல்படுவதும் தெரிகிறது. அவ்வாறு செயல்படுவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தடுக்க வேண்டும்.

    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிரந்தர நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    இவ்வாறு வக்கீல்கள் கூறினர்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைந்து தீர்ப்பு வழங்கி வரும் நிலையில் ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கின் தீர்ப்பையும் விரைந்து வழங்க வேண்டும் என்பது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
    • சென்னையில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

    அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலத்தில்கூட இந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இல்லாத நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கொளுத்துகிறது. இடையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கிறது.

    அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. பகலில் உஷ்ணத்தால் அசவுகரியத்தை உணர முடிந்தது. நேற்று அதற்கு ஒரு இடைவெளி கொடுக்கும் வகையில் இரவில் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதிலும், இடி, மின்னல், காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் இதமான சூழலை மழை ஏற்படுத்தியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • கலெக்டர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
    • 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார். அன்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து 26-ந்தேதி காலை 9 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 25, 26 ஆகிய 2 நாட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    திருநெல்வேலி:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 20-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரத்குமார் 31 ரன்னும், ராஜலிங்கம் 22 ரன்னும் எடுத்தனர்.

    திருப்பூர் அணி சார்பில் சிலம்பரசன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 40 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து வென்றது. இது திருப்பூர் அணி பெற்ற 3வது வெற்றி ஆகும். அமித் சாத்விக் 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ×