என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீலகிரியில் விடிய, விடிய சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை
    X

    நீலகிரியில் விடிய, விடிய சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

    • ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
    • வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்தன.

    அதன்பின்னர் சற்று மழை ஓய்ந்திருந்தது. கடந்தவாரம் முதல் மீண்டும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது.

    நேற்று ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கி, பலத்த மழையாக வெளுத்து வாங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இன்று காலையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தொழிலாளர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது. ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன டிரைவர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

    இரவில் மட்டும் அல்லாமல் பகலிலேயே குளிர் காணப்பட்டதால் நேற்று விடுமுறை தினம் என்றாலும் பஜார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. மழை காரணமாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

    கோவை மாவட்டத்தில் காலை முதல் மிதமான வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறி லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவில் காந்திபுரம், அண்ணாசிலை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை உள்ளது. காலையிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    Next Story
    ×