என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
    • மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தூத்தூர் சின்னதுறை புனித ஜூட் விளையாட்டு குழு சார்பில் நடைபெற்ற மாநில மின்னொளி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அணிகளை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

    திருவட்டார் கிழக்கு வட்டார ஆற்றூர் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

    குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு புது நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்தினேன்.

    முன்னதாக ஊர்வலமாக சென்று காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

    நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று காலை என்னை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ஈரான் இஸ்ரேல் போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஈரானில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளேன்.

    மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.

    சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற குமரி கிழக்கு மற்றும் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டினை தெரிவித்து கொண்டேன்.

    நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பெருமையை விளக்கியும், பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்தும் நடக்க இருக்கும் தொடர் பரப்புரை பிரச்சார கூட்டத்தை தொடங்கி வைத்தேன்.

    மாநகர மாவட்ட தலைவர் திரு.நவீன் குமார் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    திருச்சி:

    துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையொட்டி துவாக்குடி பகுதியில் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ,பி,இ,ஆர், & பி.ஹச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி,

    பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மன்னார்புரம் செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.

    • கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.
    • மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.

    மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

    கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை.

    மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.

    அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு.

    கொள்கையை ஒருபோதும் இபிஎஸ் விட்டுக் கொடுக்க மாட்டார்" என்றார்.

    • ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

    நாகர்கோவில்:

    தமிழக மீனவர்கள் உலகின் பல்வேறு பகுதி களுக்கும் சென்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். குறிப் பாக வளைகுடா நாடுகளில் இவர்கள் அதிக அளவு மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இருந்து தனியார் ஏஜண்டுகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதன்படி ஈரான் நாட்டுக்குச் சென்ற மீனவர்கள், அங்குள்ள தீவுகளில் தங்கி ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.

    இதில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்புளி, இடிந்த கரை, கூத்தன்குழி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவு வெளிநாடுகளில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    ஈரான், இஸ்ரேல் நாடுகளிலும் அவர்கள் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறை முகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது அங்கு போர் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கி உள்ள மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இஸ்ரேல் நாட்டிலும் குமரி உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    எனவே அவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை மீட்க மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் என்று அவர்களும், மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

    மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி., தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்டது போல் மீனவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற இந்திய தூதரகம், மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    • கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மொரப்பூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், பொ.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், நொச்சிக்குட்டை, அய்யம்பட்டி, ரேகட அள்ளி, திப்பிரெட்டிஅள்ளி, பண்டார செட்டிபட்டி, வத்தல்மலை, சொரக்காப்பட்டி, வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி,

    கே.என்.புதூர், கே.மோரூர், கண்ணப்பாடி ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சி.டி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடத்த நிபுணர் குழு முடிவு.
    • மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனு.

    திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.

    அதேவேளையில் அன்றைய தினம் மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில், திருச்செந்தூரை சேர்ந்த சிவராம சுப்பிரமணியன் என்பவர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கோவில் நிபுணர்குழு முடிவு செய்த நேரத்தில் குடமுழுக்கு நடத்தலாம். வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும்போது கோவில் விதாயகரிட் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற உத்தரவிட்டுள்ளனர்.

    • உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பை ஏற்று கோவையில் இருந்து நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.
    • மாநில நிர்வாகிகள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தேசிய தலைமைக்கு நயினார் அனுப்பி வைத்திருந்தார்.

    தேசிய தலைமையில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பை ஏற்று கோவையில் இருந்து நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.

    மாநில நிர்வாகிகள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தேசிய தலைமைக்கு நயினார் அனுப்பி வைத்திருந்தார்.

    இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்தல் நேரம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் நயினார் நாகேந்திரன் அனுப்பிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
    • 19 இளநிலை உதவியாளர், 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிகத் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 19 இளநிலை உதவியாளர், 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 1 உதவி கண்காணிப்பாளர். 11 உதவி இயக்குநர்கள் 18 உதவி பொறியாளர்கள், 47 உதவியாளர்கள் 34 இளநிலை உதவியாளர்கள், 41 தட்டச்சர்கள் மற்றும் 25 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 177 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல. நிர்மல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
    • சேப்பாக்கம் தொகுதியில் ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 தெருக்களில் வாழும் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

    சேப்பாக்கம் தொகுதியில் ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன. இந்த பகுதியின் இருபுறமும் திரைச்சீலை அமைக்கப்பட்டுள்ளது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி குடிசைப்பகுதியில் திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    • மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.
    • சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்து.

    கோவை மாவட்டம் அவிநாசி சாலை ஹோப்ஸ் சிக்னல் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மகிந்திரா கார் ஷோரூமுக்கு தண்ணீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காவலாளி உயிரிழந்துள்ளார்.

    சாலை இறக்கத்தில் ஓரமாக லாரியை நிறுத்த முற்பட்டபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷோரூமுக்கு வெளியே அமர்ந்திருந்த காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழக பா.ஜ.க.விற்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.
    • மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு எதிர்பார்த்தபடியே அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி யாரும் அரசியல் பேச மாட்டோம் என்று சொன்னதை மீறுகின்ற வகையில் அதில் உரையாற்றிய ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பகிரங்கமாக தமிழக பா.ஜ.க.விற்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.

    அது மட்டுமல்லாமல், அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது.

    இது அரசமைப்புச் சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் செயலாகும். அரசியலையும், மதத்தையும் கலந்து தேசிய அளவில் அரசியல் ஆதாயம் தேடிய பா.ஜ.க., தமிழ்நாட்டில் கடவுள் பெயரை பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள மக்களை பாசிச வலையில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் இரையாக மாட்டார்கள்.

    தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெற்ற உரிமையை நிறைவேற்றுவதை தடுக்கிற வகையில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தமிழ்க் கடவுள் முருகன் பெயரை உச்சரிப்பதற்கு கூட தகுதியற்றவர்கள்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை மதிக்காமல் அதற்கு தடையாக இருக்கும் இந்து மதத்தின் துரோகிகள். இவர்கள் இந்து மதத்தை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கிறது? இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கருதாதவர்களை இந்து சமய விரோதிகள் என்று கூறாமல் வேறு எப்படி அழைப்பது? இத்தகைய பாசிச மக்கள் விரோத பா.ஜ.க.விடமிருந்து இந்து மதத்தையும், தமிழ்க் கடவுள் முருகனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இனிவருகிற காலங்களில் இத்தகைய முயற்சி நடைபெறுவதை முறியடிக்க சாதி, மத எல்லைகளைக் கடந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் அழிந்து வந்தன.
    • விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலைப்படுகிறோம். அதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது.

    ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்" கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் காவேரி கூக்கூரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்கவுரையாற்றி பேசுகையில் "ஈஷா காவேரி கூக்குரலின் மரம் சார்ந்த விவசாய கருத்தரங்குகள், தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளின் அறிவியலையும், முன்னோடி விவசாயிகளின் அனுபவ அறிவையும் இணைத்து எளிய விவசாயிகளுக்கு தரும் வகையில் நடத்தப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெருமளவில் ஆதரவு கிடைத்து வருகிறது.

    மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மர விற்பனையை ஒழுங்குபடுத்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய 'டிம்பர் வளர்ச்சி வாரியம்', தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 'மிளகு கொடி விநியோகம்' மற்றும் தடையில்லா 'சந்தன மர விற்பனை' ஆகிய 3 கோரிக்கைகளை அமைச்சர் மூலம் அரசுக்கு முன்வைக்கிறோம்." எனக் கூறினார்

     

    இதனைத் தொடர்ந்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "இன்றைக்கு நிலைத்த நீடித்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை விவசாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு வல்லுனர்கள், வெற்றி விவசாயிகள் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கு காலத்தின் தேவை என்றே கூற வேண்டும். இதில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

    சமூக காடுகள் பெருமளவில் அழிந்து வருவது, நெகிழி குப்பைகளை அலட்சியமாக ஆறுகளில் கொட்டுவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது ஆகியன கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டு இருக்கின்றன. இவை நம் முன் இருக்கும் சவால்கள். இவற்றை சமாளிக்க நாம் இயற்கை சார்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் அழிந்து வந்தன. நான் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் துறை அதிகாரிகளுக்கு அவற்றை மீட்க வேண்டுமென கூறினேன். தற்போது அரசு பழத் தோட்டத்தில் 35 ரக வாழை இனங்கள் நிற்கின்றன. காவேரி கூக்குரல் சார்பில் முன்வைக்கப்பட்டு இருக்கும் 3 கோரிக்கைகளை துறை சார்ந்த அமைச்சரிடம் எடுத்துச் செல்ல உறுதுணையாக இருப்பேன்" என்றார்.

    தென்னைக்குள் பல அடுக்கு, பல பயிர் விவசாயம் மூலம் சாதனை படைத்த முன்னோடி விவசாயி வள்ளுவன் பேசுகையில், "விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலைப்படுகிறோம். அதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. வறட்சி, மழைப்பொழிவு என மாறி மாறி வரும் போது, தென்னை போன்ற ஒரு பயிர் சாகுபடி, விவசாயிக்கு நஷ்டமாக உள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கம் பலபயிர் சாகுபடியால் தென்னைக்கு பாதிப்பில்லை என்பதை புரிய வைத்தனர். தற்போது, தென்னைக்குள் ஊடுபயிராக ஜாதிக்காய், வாழை, மரப்பயிர்கள், பாக்கு போன்றவற்றை சாகுபடி செய்து வருமானம் பெற முடிகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் எளிதாகக் கிடைக்கிறது" என்றார்.

    முன்னோடி ஜாதிக்காய் விவசாயி சொப்னா சிபி கள்ளிங்கள் பேசுகையில், "தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மிளகு, வாழை மற்றும் காய்கள், பழங்கள் என 25 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறோம். ஜாதிக்காய் விளைச்சலுக்கு தாமதமானாலும், அது தரும் வருமானம் அதிகமானதாக இருக்கும். மலைப்பிரதேசம், சமவெளிகளிலும் நன்றாக விளையக் கூடியது ஜாதிக்காய். விவசாயிகள் நலனுக்காக ஈஷா செயல்படுகிறது. விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமையை ஏற்படுத்தும் ஈஷாவுக்கு பாராட்டுகள்." என்றார்.

    சமவெளியில் ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானி ஆர்த்தி பேசுகையில், "ஜாதிக்காய் பசுமையான பகுதிகளில் வளரக்கூடியது. அதற்கான தேவையான சூழலை உருவாக்கி விட்டால் எங்கும் அதனை வளர்க்க முடியும். நல்ல விளைச்சல் தரக்கூடிய பல ரகங்கள் தற்போது கிடைக்கின்றன." என்றார்.

    தொடர்ந்து, ஜாதிக்காய் சாகுபடி குறித்து இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் கண்டியண்ணன், முகமது பைசல் மீரான் மற்றும் அவகோடா சாகுபடி குறித்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி செந்தில்குமார், பூச்சிகள் குறித்து பூச்சி செல்வம், தேனீ வளர்ப்பு மூலமாக வருமானம் அதிகரிப்பு குறித்து மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆகியோர் விளக்கி பேசினர்.

    ×