என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

    23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-06-2025- ஒரு கிராம் ரூ.120

    25-06-2025- ஒரு கிராம் ரூ.119

    24-06-2025- ஒரு கிராம் ரூ.120

    23-06-2025- ஒரு கிராம் ரூ.120

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • செயற்குழுக் கூட்டம் பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
    • தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில், வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

    எனவே, கழகச் சட்ட விதிகளின்படி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான - தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள்/கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும்.
    • யாரை அவர் குறிப்பிடுகிறார் என்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும் என்றார்.

    மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

    முதலமைச்சர் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா குறிப்பிடாமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்கனவே உட்கட்சி மோதல்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமித்ஷா கூறியிருப்பது, யாரை அவர் குறிப்பிடுகிறார் என்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதன்படி, பா.ஜ.க. கூட்டணியை இன்னும் முழுமையாக எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாததால் அவர் மீது அமித்ஷா அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் முதலமைச்சர் வேட்பாளராக செங்கோட்டையன், எஸ்.வி.வேலுமணி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் தனியாக டெல்லிக்கு சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார். இதனால் அவர் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

    அமித்ஷா கூறியிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த மாதிரியான கருத்தை தெரிவிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.... 

    • தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது.
    • துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அமித்ஷா, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.

    தமிழக வெற்றிக்கழகம், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்பதை அமித்ஷா சூசகமாக கூறியிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    தி.மு.க. வை கடுமையாக விமர்சிக்கும் விஜய், அதிமுக, பாஜகவை விமர்சிப்பதில்லை என்று அரசியல் தலைவர்கள் பலராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. மேலும், அதிமுகவுடன் விஜய் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதனிடையே, தற்போது அரசியல் தலைவர்களால் கேட்கப்படும் ஒரே கேள்வி, பெரியார், அண்ணா குறித்த வீடியோவுக்கு விஜய் இதுவரை மௌனம் காப்பது ஏன்? என்பதே. தற்போது அமித்ஷா கூறியிருப்பது விஜய், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது உறுதி என்று அரசியல் நிபுணர்களால் எண்ணத் தோன்றுகிறது.

    எது எப்படியா, விஜய் தனது நிலைப்பாட்டை உறுதிப்பட தெரிவித்தால் மட்டுமே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது. 

    • அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி, குமுளி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 கனஅடியாக உள்ளது.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி, குமுளி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.80 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 2,251 கன அடியாகவும் காணப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 133.65 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4,154 கன அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,084 கன அடியாக இருந்தது.

    இந்தநிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 கனஅடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    • கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
    • பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும்.

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கூமாபட்டி கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் : சேலையூர் கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பாரத் நகர், எம்.ஜி.ஆர். நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் பிரதான சாலையின் ஒரு பகுதி

    போரூர் : குன்றத்தூர் டெம்பிள் வேவ், குமரன் நகர், பிகேவி மஹா நகர், ஆர்பி தர்மலிங்கம் நகர்.

    பல்லாவரம்: எஸ்பிஐ காலணி, புருஷோத்தம்மன் காலணியின் ஒரு பகுதி. கஜலட்சுமி நகர், கஜபதி நகர், என்எஸ்ஆர் ரோடு, கமலா தெரு, எம்.ஜி.ஆர். தெரு, பச்சப்பா நகர், குமரன் குன்றம் பகுதி.

    • ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

    • பணியிட மாறுதலுக்கு 30,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
    • 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ந்தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. பணியிட மாறுதலுக்கு 30,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ந்தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது.
    • இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தமிழ்நாடு அரசு சார்பில் டைடல் பூங்காவானது பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

    ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24 X 7 பாதுகாப்பு வசதிகள் , உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • கிழக்கே போகும் ரயில், ஐயா, வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    • சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ் சினிமாவில் 1970, 80களில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜி.சீனிவாசன்.

    இவர் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கன்னி பருவத்திலே, ராணுவ வீரன், இதயகோவில், ஐயா, நகரம், வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஓரிரு படங்களையும் இயக்கியுள்ளார். இவரது மனைவி சினிமாவின் மறைந்த பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜா ஆவார்.

    கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சீனிவாசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. சீனிவாசன் உடல், சென்னை அசோக்நகர் இந்திரா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×