என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இதையடுத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தின் நின்றவாறு காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை பார்த்தனர். மெயின் அருவியில் ஆனந்தமாக அவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- ஜூலை முதல் 6 மாதங்களுக்கு இன்னும் பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படவில்லை.
- தமிழ்நாட்டில் முதன்மை அரசு பல்கலைக்கழகமாக திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம் தான்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்தமுள்ள 20 வளாகங்களில் பணியாற்றி வரும் 502 பேராசிரியர்கள், 1635 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 2100-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பணி நீட்டிப்பு இன்று வரை வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தவிர்த்த பிற ஊர்களில் அமைந்துள்ள 16 வளாகங்களில் பணியாற்றி வரும் 332 தற்காலிக பேராசிரியர்களுக்கு இன்று வரை ஊதியமும் வழங்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக பணியாளர்கள் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னையில் 4 வளாகங்களும், கோவை, திருச்சி, மதுரை, திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலுர் உள்ளிட்ட 16 நகரங்களில் மண்டல வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னை வளாகங்களில் 170 பேராசிரியர்கள், 713 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 884 தற்காலிகப் பணியாளர்களும், வெளியூர்களில் உள்ள 16 வளாகங்களில் 332 பேராசிரியர்கள், 922 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 1254 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
ஆனால், ஜூலை முதல் 6 மாதங்களுக்கு இன்னும் பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படவில்லை. அதனால் தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்ற கவலையில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? தற்காலிக பேராசிரியர்களுக்கான ஜூன் மாத ஊதியம் எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து தமிழக அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அதை விட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், பேராசிரியர்களுக்கும், தற்காலிக பணியாளர்களுக்கும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு அவர்கள் அனைவரும் பணி நீக்கப்பட்டு, மனிதவள நிறுவனங்கள் மூலம் பேராசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் குத்தகை முறையில் நியமிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் திட்டம் உண்மையானால் அது மிகவும் ஆபத்தானது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதன் பதிவாளர் ஆணையிட்டிருந்தார். அதை பா.ம.க. சார்பில் கடுமையாகக் கண்டித்திருந்தேன். அதைத் தொடர்ந்து அத்திட்டத்தைக் கைவிடுவதாக அண்ணா பல்கலை. அறிவித்திருந்தது. ஆனால், அடுத்த 10 மாதங்களில் மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் துடிப்பதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் முதன்மை அரசு பல்கலைக்கழகமாக திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம் தான். அங்கேயே பேராசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பற்ற சூழல் நிலவினால் பிற அரசு பல்கலைக்கழகங்களின் நிலை குறித்து எதுவும் கூறத் தேவையில்லை. பேராசிரியர்களுக்கே பணிப்பாதுகாப்பற்ற நிலை நிலவினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து விடும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். அதேபோல், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் குத்தகை முறையில் நியமிக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக, தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் பணி நிலைப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என காவல்துறை கண்காணிக்க வேண்டும்
- சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று வழக்கின் விசாரணையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.
- திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரீகமானவை.
- காமராசர் உயிருடன் இருந்தபோதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கர்மவீரர் காமராசர் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது.
சென்னையில் நேற்று முன்நாள் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, ''காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
திருச்சி சிவாவின் கருத்துகள் அநாகரீகமானவை. காமராசர் எந்தக் காலத்திலும் ஆடம்பரங்களை விரும்பியதில்லை. முதலமைச்சராகவும், இந்தியாவையே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றிய காமராசர் அவர்கள் நினைத்திருந்தால் அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவர் எளிமையின் வடிவமாகத் தான் வாழ்ந்து மறைந்தார். அதேபோல், காமராசர் உயிருடன் இருந்த போதே அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அப்படி இருக்கும் போதே கலைஞரின்ன் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று காமராசர் கூறியதாக திருச்சி சிவாவுக்கு யார் கூறியது என்று தெரியவில்லை.
பெருந்தலைவர் காமராசர் உயிருடன் இருந்தபோதே அவரை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்தவர்கள் திமுகவினர் தான். அவர் மறைந்து அரை நூற்றாண்டாகியும் அவரை களங்கப்படுத்தும் செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த பொன்முடி அவர்கள், சில சமூகங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் தான் அமைச்சர் பொறுப்பில் இருந்தும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சி சிவாவும் அதே போன்று பேசுவதிலிருந்தே திமுக எத்தகைய நாகரீகத்தைக் கடைபிடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
திமுக பொதுக்கூட்ட உரை குறித்து நேற்று இரவு அளித்த விளக்கத்தில் கூட, காமராசர் குறித்து தாம் பேசிய கருத்துகள் தவறு என்றோ, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவோ திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. அவரை கட்சித் தலைமையும் கண்டிக்கவில்லை. இதிலிருந்தே பெருந்தலைவர் காமராசரை திமுக எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பெருந்தலைவர் காமராசர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவா அவர்களை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக தலைமையும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார்.
- ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும்.
சென்னை:
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும்.
அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் பேச முடியும். கடந்த மே மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், ஏசு கிறிஸ்து-யூதாஸ், வீர பாண்டிய கட்ட பொம்மன்-எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார்.
துரை வைகோ அரசியல் பால பாடம் கூட படித்ததில்லை. அரசியலில் அவர் ஒரு எல்.கே.ஜி. அவர் குறிப்பிட்ட உதாரணங்கள் அனைத்தும், ஒரே ரத்தத்தில் வந்தவர்கள் என்பதை உணரவில்லை. ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும்.
எனவே, ம.தி.மு.க.வை கட்டி எழுப்பிய வைகோவுக்கு, ஒரே ரத்தத்தைச் சேர்ந்த நீங்கள் தான் துரோகியாக இருப்பீர்கள். நாங்கள் காட்டிக்கொடுக்கும் கூட்டமல்ல. களத்தில் படைத் தளபதியாக நின்று மாண்டு போகிறவர்கள். எனவே, ம.தி.மு.க.வுக்கும், தலைவர் வைகோவுக்கும், துரை வைகோதான் எதிரியாக வருவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதனை தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், ஓட்டுப்பட்டறை, அருவங்காடு, கொலகொம்பை, காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கி சென்றனர். விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.
இதேபோல் கோத்தகிரி மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவிலும் மழைநீடித்தது அங்குள்ள முக்கிய சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல் அம்பலமூலா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழைக்கு அய்யன்கொல்லியில் இருந்து காரக்கொல்லி வழியாக கையுன்னி செல்லும் சாலையில் மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மேலும் மரம் விழுந்ததால் போக்குவரத்தும் தடைபட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரியத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்தனர். கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. கடந்த 9-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து விலை குறையத் தொடங்கி உள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 145-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,105 ரூபாய்க்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 124 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160
14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-07-2025- ஒரு கிராம் ரூ.124
15-07-2025- ஒரு கிராம் ரூ.125
14-07-2025- ஒரு கிராம் ரூ.127
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
- யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார்
- அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக்கொள்ளுங்கள்
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜூலை 13இல்
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக்கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன.
- பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காகவும், பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிரசவத்திற்காக வரும் பெண்கள், குழந்தை பெற்றதும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போல் பச்சிளம் குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அவ்வாறு பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
இந்த வார்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருப்பதற்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து படுக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் படுக்கைகள் கிழிந்து சேதமாகி இருப்பதும், பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் தரையில் படுத்து படுக்க வைத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைபார்த்ததும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனைகளில் இதுபோன்று சேதமாகி காணப்படும் படுக்கை மற்றும் மெத்தைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- ஆட்சியர் பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
- மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் விஜய், ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.
அதில் 'வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்ட குறுஞ்செய்தி மூலம் ஆட்சியர் பணிக்கு நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று எருமப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆட்சியர் துர்காமூர்த்தி, மாணவன் எழுதிய கடிதத்தை படித்தபோது கண்கலங்கினார்.
மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசித்த அவர், மாணவனை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
அப்போது மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான். அதற்கு ஆட்சியர், ஆங்கிலத்தில் எழுதினேன் என்றார்.
உடனே ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர், 'தாராளமாக தமிழில், நமது தாய்மொழியில் எழுதலாம். இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு பெற்றவர்கள், பலர் தங்கள் தாய்மொழியில் எழுதி உள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்' என்றார். இவ்வாறு மாணவர் மற்றும் ஆட்சியர் இடையே கலந்துரையாடல் சுவாரசியமாக நடந்தது.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வரவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும் தன்னை பள்ளிக்கு அழைத்த மாணவருக்கு ஆட்சியர் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியும் பாராட்டினார்.
- எடப்பாடி பழனிசாமி காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு.
- ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எடப்பாடி பழனிசாமி காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி.
போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.
ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வை பொறுத்தவரை எங்களது கூட்டணியில் இணைபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் கட்சி ஆகும்.
- அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தில் நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் தனது பிரசார பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அப்போது சிதம்பரத்தில் பிரசார வேனில் இருந்தபடி எடப்படி பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க.வின் கூட்டணி கட்சிக்கே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். ஏனெனில் விழுப்புரத்தில் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கும், திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கும் கொடி நடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இவ்வளவு அவமானப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா, தொடர வேண்டுமா?. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எங்களது கூட்டணியில் இணைபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் கட்சி ஆகும்.
தி.முக. கூட்டணி வைத்துள்ள அத்தனை கட்சியோடும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. எனவே எங்களைப்பற்றி பேச எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற நீங்கள் தற்போது செய்யும் தந்திர மாடல் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.
இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறுகையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம். அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே எடப்பாடி பழனிசாமி அழைக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு யாரும் தயாராக இல்லை என்ற சூழ்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என எடப்பாடி பழனிசாமி சொல்லுவது அவர் கருத்தாக இல்லை, யாரோ சொல்வதை திருப்பி கூறுகிறார். நிறைவேறாது என தெரிந்தும் திரும்பத்திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.






