என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.
- பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.
சென்னை:
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தை முன் வைத்து கோவையில் பிரசாரத்தை தொடங்கினார்.
தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கமே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சென்ற சட்டமன்றத் தேர்தலில் சொன்னது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. பி.ஜே.பி.யோடு இருந்த காரணத்தினால் தமிழகம் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி.யால் வளைக்கப்படுகிறது. கபளீகரம் செய்யப்படுகிறது.
ஆகவே தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிற அரசியல் முழக்கத்தை நாங்கள் வைத்தோம். அந்த முழக்கத்தை இரவலாக பெற்று இப்போது எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அவர் கோவையில் பேசுகிறபோது, கம்யூனிஸ்டுகளே இல்லை. அவர்களது முகவரியே இல்லை. காணாமல் போய் விட்டார்கள் என்று மேட்டுப்பாளையம் கூட்டத்தில் பேசினார்.
ஒரு வாரம் இடைவெளியில் என்ன ஞானஸ்தானம் பெற்றார் என தெரியவில்லை. சிதம்பரம் சென்றபோது நடராஜரிடம் ஞானஸ்தானம் பெற்றாரா என தெரியவில்லை.
கம்யூனிஸ்டுகள், வி.சி.க. போன்ற கட்சிகள் எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கோவையில் கம்யூனிஸ்டு கட்சிகள் இல்லை என்று கூறிவிட்டு சிதம்பரத்தில் கம்யூனிஸ்டு கட்சி எங்கள் அணிக்கு வர வேண்டும் என்று பேசுவது நல்ல நகைச்சுவையாகும்.
எங்கள் அணிக்கு வந்தால் ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்றும் சொல்லி இருக்கிறார். அவர் ஏற்கனவே சேர்ந்திருக்கிற பா.ஜ.க. அணி ரத்ன கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம்.
அந்த ரத்தக்கறை படிந்த கம்பளத்தில் எடப்பாடி பயணம் பண்ணுகிறார். அதன் ஆபத்தை உணராமல் அல்லது ஆபத்தை உணர்ந்தும் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அவர் பயணம் பண்ணுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது.
- பராமரிப்பு சரியாக இல்லாவிட்டால் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள். இதன் முடிவு 2 நாட்களில் வெளிச்சத்துக்கு வரும்.
கடந்த ஆண்டுகளை விட மழைப்பொழிவு இந்தாண்டு அதிகம் என்ற தகவல் உள்ளது. மழை காலம் நெருங்குவதால் நீர் வழி தடங்களில் உள்ள ஷட்டர் பழுதாகி கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. பராமரிப்பு சரியாக இல்லாவிட்டால் மழை பொழிவின் போது ஆபத்தில் தள்ளிவிடும்.
தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஷட்டர்கள், சங்கிலிகள், ரப்பர்கள் பழுதடைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சரி செய்துவிட்டால் பெரிய இழப்பிலிருந்து தப்பிக்கலாம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தாமதிக்காமல் விடுவிக்க வேண்டும்.
அஜித் குமார் மரண வழக்கில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு நீதித்துறை அதிருப்தி தெரிவித்து கொண்டு தான் இருக்கிறது. காவல் துறை தனது போக்குகளை மாற்றி கொள்ள வேண்டும். சென்னை காவல் துறையை நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். 2008 முதல் தற்போது வரை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையினருக்கு யோகா, மன, உடற்பயிற்சி அளித்த பிறகும் தவறிழைக்கிறார்கள் என்றால் அவர்கள் காவல்துறை பணிக்கே தேவையில்லை. சென்னையில் விம்கோ நகரில் ரெயில் சிறைபிடிப்பு தான் நடக்கிறது. புறநகர் ரெயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூறியும் ரெயிலை சிறைபிடிக்கும் போரட்டத்தினை மக்கள் நடத்தியுள்ளனர். இது ரெயில்வே துறையினரின் மெத்தனபோக்கை காட்டுகிறது. ரெயில்வே துறையில் வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் தெரியாதவர்கள் நியமிக்கப்படுவதால் மொழி தெரியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததில் யார் மீது சந்தேகம் இருக்கிறது? என்று கேட்ட போது உங்கள் மீது தான் சந்தேகம் என்றார்.
- வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர்.
- தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.
சென்னை சைதாப்பேட்டை கோர்ட் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சொத்துக்களை சேர்க்காமல் தனது கடைசி காலம் வரை எளிமையாக வாழ்ந்தவர் காமராஜர்.
* கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை.
* வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன். இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா?
* உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?
* தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ராஜராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
போரூர்: வயர்லெஸ் ஸ்டேஷன் சாலை, ஆர்.இ.நகர் 5வது தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1-வது அவென்யூ முதல் 7-வது அவென்யூ வரை, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
பெசன்ட் நகர்: கங்கை தெரு, அப்பர் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, டைகர் வரதாச்சாரி ரோடு, கடற்கரை ரோடு, திருமுருகன் தெரு, காவேரி தெரு, திடீர் நகர், வைகை தெரு, ருக்மணி சாலை விரிவு, ஓடைக்குப்பம், அஷ்டலட்சுமி கார்டன், பாரி தெரு, பாண்டியம்மன் கோவில் தெரு, கம்பர் தெரு.
- வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.
- மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு பிறகு வெற்றி பெறும் கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே பேசும் பொருளாகி விட்டது.
ஆளும் கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயித்து உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்று தி.மு.க. தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் காங்கிரசார் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்றும் பேசி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேசும் போது, 'நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள்' என்று கூறினார்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் மலரும். கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால்தான் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் பேசி இருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவிக்கையில், 'திருச்சி வேலுச்சாமி ஒரு மூத்த தலைவர். அவரது கூற்றுகள் எப்போதும் சரியானவை' என்று கூறி இருந்தார்.
இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை சாத்தியம் இல்லை. மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல் வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள். எனவே கூட்டணி அரசாங் கங்களுக்கு ஏற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இது குறித்தும் விவாதிக்கலாமே தவிர இப்போது அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
- த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என கேள்வி எழுப்பினார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது.
த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், சிவப்பு, மஞ்சள்- சிவப்பு நிறம் பதிவு செய்யப்பட்ட சபை முதன்மை அதிகாரிகள், ஊழியர்கள், ஆண்கள், முகவர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், வர்த்தக முத்திரை என்பது சரக்குக்கு மட்டும் இல்லாமல் சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று த.வெ.க. மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.
- மாணவர்களின் புரிதல் திறனை அறியவே, அடைவு தேர்வு நடத்தப்படுகிறது.
- போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள பகுதி நேர ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மவாட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
தேசிய கல்வி கொள்கை பின்பற்றப்படும் மாநிலங்களில் மத்திய அரசால் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய, தேசிய அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு இணையாக தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட அடைவு தேர்வில் செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் 36-வது இடத்தை பிடித்தது.
மாணவர்களின் புரிதல் திறனை அறியவே, அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வி கேட்கும் அளவிற்கு மாணவர்களை உருவாக்க வேண்டும். அதுபோல், தான் கற்றதை, பிற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும் அவர்களை உருவாக்க வேண்டும்.
சில மாவட்டங்களில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் உயர்ந்திருந்தாலும், அடைவுத்திறன் தேர்வில் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய மாணவர்களுடன் ஆசிரியர்கள் உரையாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறும்போது, "போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள பகுதி நேர ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். முதலமைச்சர் இது தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பார்.
தற்போது 'ப' வடிவிலான வகுப்பறை அமைப்பது, சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை" என்றார்.
- பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்.
- நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுக.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மனது வேதனை அடைகிறது... எளிமையின் சிகரமாகவே வாழ்ந்த மாபெரும் தலைவனான காமராஜருக்கு ஏசி வைத்து கொடுத்தோம் என்றும் ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கலைஞரைப் பார்த்து சொன்னார் என்றும்.. கருத்துக்களை திருச்சி சிவா திருச்சி கூறியது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியது..
இன்று பெருந்தலைவர் காமராஜ் சேர்த்து வைத்த "சொத்துக்களை" தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அவர் மீதான பழி "சொற்களை" சரியாக எதிர்க்கவில்லை என்பதே மக்கள் கருத்து.. எல்லாவற்றையும் விட மனதை ரணப்படுத்துவது... அவரின் அறையில் ஏசி இருந்தது என்று திமுக 200 உடன்பிறப்புகள்.. அவர் இருந்த எளிய அறையில் ஏசியை வட்டமிட்டு போடுவதும்... கடைசி நாள்.. அவர் படுத்து இருக்கும்போது கூட ஏசி ஓடிக் கொண்டிருந்தது.. என்று கொச்சையாக.. பதிவு போடுவதும்.. மிகவும் கண்டிக்கத்தக்கது...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் நேரான இயக்க உடன்பிறப்புகளையும்.. 200க்கான இணைய உடன்பிறப்புகளையும்.. கட்டுப்படுத்த வேண்டும்.
நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும்.. திமுகவுடன்.. ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும்... காங்கிரசின் மென்மையான எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது.
பெருந்தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதை காங்கிரஸ் எதிர்ப்பதும் வெறும் பெயரளவில் தான் இருக்கிறது என்பதும் வேதனை...
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.
- அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
சென்னை:
தாய் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த விழா நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நம் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான விழா சென்னை அடையாறில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவையில் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேரறிஞர் அண்ணாவும் தமிழும்' என்ற தலைப்பில் வக்கீல் த.ராம லிங்கம், 'இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.
தொடர்ந்து அவர், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வரவேற்புரையாற்றுகிறார். செயலர் வே.ராஜாராமன் முன்னிலை வகித்துப்பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
- தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் காமராஜர் இன்றைக்கும் அவரது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றுகிறோம். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டான தலைவராக தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர். பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
வருங்கால சமுதாயத்தினர் முன் மாதிரியான, நல்வழிகாட்டியான தலைவராக பெருந்தலைவரை ஏற்றுக்கொள்வது 100 சதவீதம் பொருத்தமானது. அப்பேற்பட்ட ஓர் உயர்ந்த தலைவரைப் பற்றி தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தவறான தகவலை பொதுவெளியில் தெரிவித்தது மிகுந்த வருத்தத்துக்குரியது, வேதனைக்குரியது. அவரது பேச்சு ஏற்புடையதல்ல. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இது போன்ற உத்தம தலைவரை, தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு டாடா... பை பை காட்டி வரும் தமிழக மக்கள், வரும் தேர்தலில் “Good Bye" சொல்ல தயாராகிவிட்டனர்.
- ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகும் மக்களின் நம்பிக்கை டிராவல்ஸை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
மயிலாடுதுறையில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
எடப்பாடி பழனிசாமிக்கு டாடா... பை பை காட்டி வரும் தமிழக மக்கள், வரும் தேர்தலில் "Good Bye" சொல்ல தயாராகிவிட்டனர்.
சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது என்று விமர்சித்து இருந்தார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,
இது சுந்தரா டிராவல்ஸ் அல்ல... ஸ்டாலின் அவர்களே இது மக்களின் டிராவல்ஸ். ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகும் மக்களின் நம்பிக்கை டிராவல்ஸை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வந்துள்ளது.
- ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
திண்டிவனம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் பா.ம.க.வினர் கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் ராமதாசிடம் ஒட்டு கேட்பு கருவி பற்றி அவர்கள் கேட்டு வருகின்றனர். இதையடுத்து அங்குள்ள ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






