என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை- டி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டம்
- வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.
- மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு பிறகு வெற்றி பெறும் கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே பேசும் பொருளாகி விட்டது.
ஆளும் கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயித்து உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்று தி.மு.க. தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் காங்கிரசார் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்றும் பேசி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேசும் போது, 'நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள்' என்று கூறினார்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் மலரும். கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால்தான் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் பேசி இருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவிக்கையில், 'திருச்சி வேலுச்சாமி ஒரு மூத்த தலைவர். அவரது கூற்றுகள் எப்போதும் சரியானவை' என்று கூறி இருந்தார்.
இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை சாத்தியம் இல்லை. மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல் வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள். எனவே கூட்டணி அரசாங் கங்களுக்கு ஏற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இது குறித்தும் விவாதிக்கலாமே தவிர இப்போது அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.






