என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை - பந்தலூரில் மின் கம்பிகள் மீது மரம் விழுந்தது
    X

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை - பந்தலூரில் மின் கம்பிகள் மீது மரம் விழுந்தது

    • மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
    • கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அதனை தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், ஓட்டுப்பட்டறை, அருவங்காடு, கொலகொம்பை, காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கி சென்றனர். விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.

    இதேபோல் கோத்தகிரி மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவிலும் மழைநீடித்தது அங்குள்ள முக்கிய சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல் அம்பலமூலா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இந்த மழைக்கு அய்யன்கொல்லியில் இருந்து காரக்கொல்லி வழியாக கையுன்னி செல்லும் சாலையில் மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் மரம் விழுந்ததால் போக்குவரத்தும் தடைபட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரியத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்தனர். கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×