என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.

    இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.

    வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.
    • புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும்.

    சென்னை:

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வங்காளதேசம், மேற்கு வங்காள கடற்கரை பகுதியில் வருகிற 24-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    மேலும், இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.
    • ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் ரெயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவது.

    சென்னை:

    முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.

    ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு", "15-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி", "ஒன்றிய அரசும் - மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி" ஆகியவற்றை பாராளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைப்பது.

    தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து ஒன்றிய அரசு மவுனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய ரெயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பது.

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் ரெயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவது.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கிராமங்களில் உள்ள நிலங்களில் அங்குள்ள மக்கள் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.
    • மக்களைக் காக்க வேண்டிய அரசு, தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூரை அடுத்த கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளையும், அவர்கள் வளர்த்த முந்திரி மரங்களையும் அகற்றி விட்டு, தோல் அல்லாத காலனி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதும், அவர்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

    கடலூர் மாவட்டம் கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம், மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி சாகுபடி செய்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறை உதவியுடன் அந்த நிலங்களில் இருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்; அங்கு வளர்க்கப்பட்டிருந்த முந்திரி மரங்களில் பெரும்பாலானவை பிடுங்கி எறியப்பட்டன. அப்போதே, தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காகவே பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்தது. இப்போது அந்த நிலங்கள் காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு உண்மையாகியிருக்கிறது.

    கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம், மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களில் அங்குள்ள மக்கள் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றில் தீர்ப்பு வராத நிலையில், அங்குள்ள நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்க முயல்வது நியாயமல்ல.

    கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் அந்த இடங்களை காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கலாம். அதை விடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலங்களைப் பறித்து தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க முயல்வது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். மக்களைக் காக்க வேண்டிய அரசு, தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல.

    கொடுக்கன்பாளையம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் காலனி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அந்தப் பகுதியில் தலைமுறை தலைமுறைகளாக முந்திரி சாகுபடி செய்து வரும் மக்களுக்கு அங்குள்ள நிலங்களை பட்டா செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,340 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 2,340 ஆசிரியர் பணியிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்குவார். பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். 

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.
    • காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இன்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.முக கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் கருத்து கூற மாட்டேன். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது.

    தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக இருக்கும். அதனை பெரிய தலைவர்கள் பார்த்து கொள்வார்கள். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசிய கருத்து மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய தலைவரை கொச்சைப்படுத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அப்படியே விட்டு விடுங்கள் என்கிறார். முதலமைச்சரும் அவரை கண்டுகொள்ளாமல் இதில் சிலர் குளிர் காய நினைக்கிறார்கள் விட்டு விடுங்கள் என்கிறார்.

    அவர்களுக்கு யாருக்கும் பயம் இல்லை. ஓட்டுக்கு தான் பயம். காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.

    காமராஜர் திருச்சியில் பெல் தொழிற்சாலை ஏற்படுத்தினார். இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதை சிவா எம்.பி. முதலில் சென்று பார்க்க வேண்டும்.

    இந்த பிரச்சனையில் காங்கிரஸ் தி.மு.க.வுடன் ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் மணல் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்த மண்டல தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினரை வீடு, வீடாக சென்று பேசுங்கள். 1½ கோடி உறுப்பினரை சேருங்கள்.

    30 சதவீதம் வாக்காளர்களை சேருங்கள் என்று கூறி வருகிறார். மக்கள் தி.மு.க.வினரை நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
    • 20 மற்றும் 21-ந்தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

    20 மற்றும் 21-ந்தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    • தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போலியான பான் எண் கொடுத்து சொத்து விவரங்களை மறைத்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.

    இந்த வழக்கு, கடந்த ஜூன் 13-ந்தேதி நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில்,

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போலியான பான் எண் கொடுத்து சொத்து விவரங்களை மறைத்தது தெரிய வந்துள்ளது. வேட்புமனுவில் அவர் தெரிவித்த சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் பொய் என விளக்கம் அளித்தது.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்று கே.சி.வீரமணி மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.
    • பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை:

    மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்தவர் தங்கபிரியா, தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், மதுரையை அடுத்த அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 3.7.2017 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    தங்கபிரியா திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மாமனார் செந்தில் குமரன், கணவர் பூபாலன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் சேர்ந்து தங்கபிரியாவை பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் புதிதாக வீடு வாங்குவதற்காக உன் தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி தங்கபிரியாவை அடித்து உதைத்துள்ளனர். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தங்கபிரியா தனது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் தங்கபிரியாவின் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது அப்பன் திருப்பதி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் திருப்பூர் ரிதன்யா, குமரி மாவட்டம் ஜெபிலா போன்ற பல பெண்கள் வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் உலுக்கிய நிலையில், காவல்துறை குடும்பத்தில் இருந்து இவ்வாறான செயல் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றனர்.
    • இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு வழக்கு தொடர்பாக மடப்புரம் கோவில் அலுவலகம், கோவில் கோ சாலை, வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், கோவில் கார் டிரைவர் கார்த்திவேல், ஆட்டோ டிரைவர் அருண்குமார், அஜித் குமாருடன் பணியாற்றிய வினோத்குமார், பிரவீன் ஆகிய 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

    அதில் 5 பேரும் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் உள்பட 5 பேர் ஆஜராகினர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றனர். இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

    இதற்கிடையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் செல்போன்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொழில் நுட்ப அதிகாரிகளின் உதவியோடு, அதில் உள்ள தரவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். சம்பவம் நடந்த சமயங்களில் 5 பேரும் யாருடன் செல்போனில் பேசினார்கள்? இவர்களிடம் பேசியது யார்? என்ன பேசினார்கள்? என்பது குறித்து செல்போன் தரவுகளை சேகரிக்கவும், சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தால் அஜித்குமார் கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    • உலக ஆடை வர்த்தக சந்தையில் இந்தியாவின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மேலும் வலுவடைந்து வருவதை காட்டுகிறது.
    • முந்தைய முதல் காலாண்டை விட தற்போதைய முதல் காலாண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

    திருப்பூர்:

    இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.11 ஆயிரத்து 251 கோடியே 30 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.10 ஆயிரத்து 800 கோடியே 20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

    கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய முதல் காலாண்டில் ரூ.35 ஆயிரத்து 861 கோடியே 10 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.32 ஆயிரத்து 115 கோடியே 50 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது 11.7 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.

    இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 69 சதவீதமாக உள்ளது. இதனால் திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் முன்னேற்றப்பாதையில் பயணிப்பது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறும்போது, '2025-26-ம் முதல் காலாண்டில் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.12 ஆயிரத்து 193 கோடியை எட்டியுள்ளது. இது 2024-25-ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் ரூ.10 ஆயிரத்து 919 கோடிக்கு நடந்துள்ளது. இதை ஒப்பிடுகையில் முந்தைய முதல் காலாண்டை விட தற்போதைய முதல் காலாண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

    உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் ஏற்ற, இறக்கமான தேவைகளுக்கு மத்தியில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நிலையான செயல்பாட்டின் நேர்மறையான வளர்ச்சியின் அறிகுறியாகும். உலக ஆடை வர்த்தக சந்தையில் இந்தியாவின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மேலும் வலுவடைந்து வருவதை காட்டுகிறது.

    இந்தியாவின் ஆடை ஏற்றுமதியின் இலக்கை நோக்கி தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கொள்கை பரிந்துரை, சந்தை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு போன்ற முயற்சிகள் மூலம் வரும் காலங்களில் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி தொடரும்' என்றார்.

    • ஓசூர் அருகே சூளகிரியில் 1,882 ஏக்கரில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
    • சூளகிரியில் புதிதாக அமையும் தொழில் பூங்கா மூலம் 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.

    ஓசூர் அருகே சூளகிரியில் 1,882 ஏக்கரில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சூளகிரியில் புதிதாக அமையும் தொழில் பூங்கா மூலம் 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    ×