என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
- அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசினார். இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசியதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைகிறேன். இந்த ஐகோர்ட்டில் 9 மாதங்கள் பணியாற்றியுள்ளேன். என் பணியை முழு திருப்தியுடன் செய்துள்ளேன் என்ற மன நிம்மதியுடன் விடை பெறுகிறேன்.
தமிழ்நாடு உயர்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மாநிலம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் வக்கீல் தொழிலுக்கு அதிக அளவில் பெண்கள் வருகின்றனர். அண்மையில்கூட நீதிபதிகள் தேர்வில் 213 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 135 பெண்கள் தேர்வாயுள்ளனர். அந்த அளவுக்கு அருமையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்தார்.
இதில் ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
- இரவில் பெய்த மழை சென்னையில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் பெய்த மழை சென்னையில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டுப் போகிறான்.
- குற்றவாளிக்கு அச்சம் இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த மக்களிடம் உரை நிகழ்த்தினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக அரசு உங்க அரசு, அது உங்க கட்சி. அதிமுக நன்மை செய்யும் கட்சி, திமுக கொள்ளையடிக்கும் கட்சி. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைபொருள், கஞ்சா இல்லாத இடமே இல்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமியை போதை ஆசாமி தூக்கிட்டுப் போகிறான். குற்றவாளிக்கு அச்சம் இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. அப்பா என்று சொல்கிறார். பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? அப்பானு சொன்னால் மட்டும் போதுமா? இதுவரை அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறேன் என்கிறார், நான் பொய் சொல்கிறேனா..? உண்மைதான் பேசுகிறேன். நல்லாட்சியை நாங்கள் மீண்டும் கொடுப்போம். நன்னிலம் தொகுதியில் நிறைய திட்டம் அதிமுக ஆட்சியில் கொடுத்திருக்கிறோம். நன்னிலம் அரசு கலைக்கல்லூரி, குடவாசல் கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம், தூர் வாரும் பணிகள், நெல் சேமிப்பு கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பாலங்கள் என நிறைய கொடுத்திருக்கிறோம். உங்களுக்குதான் ஒண்ணும் தெரியாதே, பொம்மை முதல்வரே.
நன்னிலம் உணவு பதப்படுத்தும் பூங்கா, அரசி ஆலை, புதிய ஊராட்சி ஒன்றியம், புறவழிச்சாலை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல் என நிறைய கோரிக்கைகள் கூறியிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்துகொடுப்போம்.
மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது அதிமுக, மிரண்டு ஓடப்போவது திமுக. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- திமுக கட்சியில் உறுப்பினர்கள் குறைந்து விட்டார்கள்.
- அதனால் ஓர் அணியில் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு ஊர் ஊராக சென்று, வீடு வீடாக சென்று மக்கள் சந்திக்கிறார்கள்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திருவாரூர் மாவட்ட பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்ற கற்பனை உலகத்தில் மு.க. ஸ்டாலின் இருந்து கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.
எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகளில் வெல்வோம் என்கிறாரே.. உங்கள் பதில் என்ன? என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி திமுக.
திமுக கட்சியில் உறுப்பினர்களும் குறைந்து விட்டார்கள். அதனால் ஓர் அணியில் தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு ஊர் ஊராக சென்று, வீடு வீடாக சென்று மக்கள் சந்திக்கிறார்கள். ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக வருகிறார்கள்.
இன்றைய தினம் திமுக-வின் நிலை பரிதாபமான நிலைக்கு வந்துள்ளது. கதவை தட்டி.. தட்டி.. தாயே.. எங்க கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்ற நிலை திமுகவுக்கு வந்துவிட்டது. திமுக-வுக்கு ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்ற நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல மெலிந்து நலிவடைந்து மக்களுடைய கதவை தட்டி உறுப்பினர்களை சேர்க்கின்ற அளவிற்கு தாழ்ந்து போய்விட்டது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- 898 தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவு.
- சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
898 தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ஆம் தேதி (சனி) அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
- ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
நாகர்கோவில்:
செண்பகராமன்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
தக்கலை உபமின்நிலையத்துக்கு உட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், புலியூர் குறிச்சி, குமாரகோவில், வில்லுக்குறி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிக்கோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை, மருந்துக்கோட்டை ஆகிய இடங்களிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், காற்றாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செண்பகராமன்புதூர், தக்கலை, பழவூர் காற்றாலை பண்ணை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மாற்றத்தை எட்டியுள்ளது.
- எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, அவர்கள் சாலையில் பயணிப்பதே இல்லை என்பதை காட்டுகிறது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஓடிய சுந்தரா டிராவல்ஸ் பேருந்துகளுக்கு பதிலாக, தற்போது புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மாற்றத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை பார்க்கும்போது, அவர்கள் சாலையில் பயணிப்பதே இல்லை என்பதை காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
- காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார்.
- அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார். இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதில், கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளார்.
இதை தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில், காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன், அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான காவல் ஆய்வாளர் மற்றும் அவரது தந்தையை பிடிக்க 3 தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- 2019-ல் பூங்காவில் தனது நண்பருடன் 16 வயது பள்ளி மாணவி பேசிக்கொண்டிருந்துள்ளார்.
- அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரை அடித்து தள்ளி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
2019-ல் பூங்காவில் தனது நண்பருடன் 16 வயது பள்ளி மாணவி பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரை அடித்து தள்ளி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேருக்கும் வாழ்நாள் சிறை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
+2
- கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
- சந்தன மலையில் திருமணம் நடைபெற வேண்டியும், சில பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் தொட்டில் கட்டி வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வள்ளி குகை திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுமார் 6 மாத காலமாக அங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. திருப்பணி வேலைகள் முடிவுற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முதல் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அங்குள்ள சந்தன மலையில் திருமணம் நடைபெற வேண்டியும், சில பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் தொட்டில் கட்டி வழிபாடு செய்தனர்.
- உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா?- அண்ணாமலை
- காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வச்சாச்சு- செல்வப்பெருந்தகை
கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை. வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன். இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா?. உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். முதலமைச்சர் சந்தித்தப்பின் காமராஜர் விவகாரம் மற்றும் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்து கூறியதாவது:-
காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வைச்சாச்சு. ஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர் விடுமாம். அதேபோல் எங்களை பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு பெரிய கவலை.
பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்?. அவருடைய மூதாதையர்கள், அவர் (அண்ணாமலை) ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைவாதிகள் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜரை வீட்டோடு வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
செய்து விட்டு வாக்குகளுக்காக அவருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, இறந்த தினம் அனுசரிப்பது என்ற வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ். கோஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.
- வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.
இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






