என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது.
நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தின் நின்றவாறு காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ரசித்து பார்த்தனர். மெயின் அருவியில் ஆனந்தமாக அவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- அண்ணன் முத்து அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.
- என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.
தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து அவர்கள்.
நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.
பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள்.
பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.
என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக்கோரி தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அ.தி.மு.க. கடிதம் எழுதி உள்ளது. அதில்,
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2022-2025 வரை நடந்த வன்கொடுமைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
- மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது.
- விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுந்து வந்தது. இந்த நிலையில் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் தடுப்புக் கம்பிகள் வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மு.க.முத்துவின் உடலுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
- நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது.
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880
17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
16-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
15-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,160
14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-07-2025- ஒரு கிராம் ரூ.125
17-07-2025- ஒரு கிராம் ரூ.124
16-07-2025- ஒரு கிராம் ரூ.124
15-07-2025- ஒரு கிராம் ரூ.125
14-07-2025- ஒரு கிராம் ரூ.127
- நடிப்பு மட்டுமில்லாமல் சில படங்களில் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார்.
- மு.க.முத்து மரணம் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. வயது 77. இவரது தாயார் பத்மாவதி. இவர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார்.
மு.க.முத்துவை கருணாநிதி தனது கலையுலக வாரிசாக சினிமா படங்களில் நடிக்க வைத்தார். முதல் முதலாக மு.க.முத்து "பிள்ளையோ பிள்ளை" என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு "பூக்காரி", "சமையல்காரன்", "அணையா விளக்கு" ஆகிய படங்களிலும் தொடர்ந்து நடித்தார்.
நடிப்பு மட்டுமில்லாமல் சில படங்களில் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். இவர் பாடிய "சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க" என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது.
மு.க.முத்து சில படங்களில் நடித்த பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்படவில்லை.
இதன் காரணமாக இவர் யாரிடமும் அதிக தொடர்பு இன்றி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஈஞ்சம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
வயது மூப்பு காரணமாக அவர் வெளியில் எங்கும் வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருந்து வந்தார். அவருக்கு தேவையான உதவிகளை அவரது மனைவி சிவகாம சுந்தரி செய்து வந்தார். இன்று (சனிக்கிழமை) காலை எழுந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.
7.30 மணியளவில் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. 8 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு அறிவுநிதி என்ற ஒரே மகனும், தேன்மொழி என்ற மகளும் இருக்கிறார்கள்.
மு.க.முத்து மரணம் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் கீழ்ப்பாக்கம் மற்றும் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.
அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஞ்சம்பாக்கத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மு.க.முத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
- திருமணத்தின்போது 60 பவுன் நகை கொடுத்த போதிலும், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை.
- மனைவியை தாக்கியதை சகோதரிடம் சிரித்துக் கொண்டு கூறும் ஆடியோ வெளியானது.
மதுரை அப்பன்திருப்பதி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பூபாலன் (வயது 38). இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.
திருமணத்தின்போது 60 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை உள்ளிட்டவைகளை வழங்கினோம். ஆனால், மேலும் வரதட்சணை வேண்டும் என்று கூறி 2 தினங்களுக்கு முன்பு போலீஸ்காரர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கினார் எனவும் அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.
கணவர் தாக்கியதில் காயம் அடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, ஆசிரியையின் குடும்பத்தினர், அப்பன் திருப்பதி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக சாத்தூரில் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே, வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியது குறித்து, தனது சகோதரியிடம் போலீஸ்காரர் பூபாலன் சிரித்து சிரித்து பேசுவது போன்ற ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் மனைவியை கடுமையாக தாக்கியது பற்றி சிறிதும் கவலை இல்லாமல், நகத்தால் கடுமையாக கீறியதாகவும், முகத்தில் காயம் ஏற்படுத்தியதாகவும், தொண்டையை இறுக்கினேன் என்றும், கால்களில் தாக்கி நடக்க முடியாமல் செய்தேன், உதட்டில் காயம் ஏற்படுத்தினேன் எனவும் பேசி இருப்பது போன்று அந்த ஆடியோ உள்ளது.
இந்த ஆடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து அது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, பூபாலன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதி அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் உத்தரவிட்டார்.
இதேபோல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரையும், தலைமை காவலர் பூபாலனையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மதவாத சக்திகளை வீழ்த்த, விஜய் தலைமையில் சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
- மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பா.ஜ.க., குடும்பப்பற்று தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம்.
சென்னை:
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே தேர்தல் கூட்டணி பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. யார், யாருடன் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கூடி வருகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பிரமாண்டமான கட்சி இணைய உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பேசியது, அரசியல் அரங்கில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டது த.வெ.க.வை தான் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்தநிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு, த.வெ.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதில் அளித்து கூறியதாவது:-
தமிழகத்தின் முதன்மை சக்தியான த.வெ.க. தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்குகிறார்கள். ஏனென்றால், ஆண்ட கட்சிக்கும் (அ.தி.மு.க.), ஆளும் கட்சிக்கும் (தி.மு.க.) எங்கள் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.
தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எங்களது முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான்.
மதவாத சக்திகளை வீழ்த்த, விஜய் தலைமையில் சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் நிரந்தர எதிரியான பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக்கொள்ளமாட்டோம்.
மாற்றிப்பேசுவதும், ஏற்றிப்பேசுவதும், ஆள் வைத்து தூற்றிப்பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம். எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர். தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை.
மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பா.ஜ.க., குடும்பப்பற்று தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம். பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம். வீண் கற்பனைகளை புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து சில நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் தி.மு.க. அரசின் கூட்டணி எந்தவித மாற்றமும் இன்றி நிலைத்து வருகிறது.
அதேநேரம், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிபட தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாவட்டங்கள்தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று, தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியும் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து சில நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் வருகிற 27-ந் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, ஆடித் திருவாதிரை விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதுகுறித்து பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகையில், 'கேரளாவில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 27-ந் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான, ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவானது, ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற இருக்கிறது. விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
மேலும், இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும், பல்வேறு தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். பிரதமர் மோடி வருகையையொட்டி, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தன.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுவிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. மறுநாள் (28-ந் தேதி) தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
- மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கீழ்வேளூர்:
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் மற்றும் திருவாரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அமோக வரவேற்பு கொடுத்த கீழ்வேளூர் தொகுதி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், '
'விவசாயத்தை நம்பித்தான் உங்கள் வாழ்க்கை உள்ளது. உங்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டுவந்தோம். பார்த்து பார்த்து செய்துகொடுத்தோம். ஆனால், ஸ்டாலின் அரசோ மீத்தேன் எடுப்பதற்கு விளை நிலங்களை பறிக்க கையெழுத்து போட்டது. அப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம். இனி எவராலும் உங்கள் நிலத்தைப் பறிக்க முடியாது. விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
எல்லா துறையிலும் ஊழல். டாஸ்மாக்கில் ஊழல் முதலில் 1000 கோடி என்றார்கள். இப்போது 40 ஆயிரம் கோடி என்கிறார்கள். இந்த ஆட்சியின் ஒரே சாதனை கொள்ளை அடித்ததுதான். சபரீசனும் உதயநிதியும் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்ததாக திமுக அமைச்சரே சொன்னார். உண்மைதான். டாஸ்மாக்கில் மட்டும் வருஷத்துக்கு 5,400 கோடி ஊழல், யாரு வாங்குறது செந்தில் பாலாஜி, இப்பவும் கூட வாங்குறார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் பல பேர் எங்கே இருக்கணுமோ அங்கே இருப்பாங்க. அதிமுகவை அவதூறாக பேசுறீங்க, எம்ஜிஆர் தொடங்கிய அம்மா கட்டிக்காத்த புனிதமான இயக்கம். எங்க கட்சியில் வாரிசு அரசியல் இல்லை. இந்தியாவில் மன்னராட்சி ஒழித்தாச்சு, திமுகவில் கொண்டுவந்துட்டாங்க. பதவியை உங்களுக்கு யாரும் பட்டா போட்டு கொடுத்தாங்களா? அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி. விசுவாசமாக உள்ள யார் வேண்டுமானலும் வரலாம். திமுகவிலும் அப்படி யாராக இருந்தாலும் முதல்வராக முடியும் என்று ஒருவார்த்தை சொல்லுங்கள் பார்ப்போம். குடும்பம்தான் கட்சி, கட்சிதான் குடும்பம்.
ஸ்டாலினே இதனை ஒப்புக்கொண்டார். திமுகவில் இருக்கும் எல்லோரும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திடுவாங்க, இன்பநிதி வந்தாலும் ஏத்துபாங்க அப்படி இருந்தாத்தான் பதவி கொடுப்பாங்க. திமுக கம்பெனியில் கோடி கோடியா பணம் குவியுது.
அதிமுக ஆட்சியில் ஆடு, மாடு, கோழி இலவசமாகக் கொடுத்தோம். பசுமை வீடு கொடுத்தோம். ஆனால், எங்களை எப்படியெல்லாம் எங்களை துன்பப்படுத்தினீங்க..? சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது என்னுடைய டேபிளில் வந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகர் இருக்கையில் அவரை எழுப்பிவிட்டு திமுகவினர் அமர்ந்தனர். ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே போனார்.
அடுத்த ஆண்டு அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். முன்பு சட்டையை கிழிச்சீங்க… அடுத்து எதை கிழிப்பீங்கனு தெரியலை. எங்க கட்சி நல்லாத்தான் இருக்கு, இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. எங்க ஆளுங்களை எட்டப்பன் மாதிரி விலைக்கு வாங்கி தொல்லை கொடுத்தீர்கள்.
டிஎன்பிஎஸ்சியில் ஊழல். இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் ஊழல். 5.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். ஆனால் வெறுமனே 50 ஆயிரம் பேர் தான் நிரப்பினாங்க. ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் ஓய்வு, 4 வருடத்தில் 70 ஆயிரம் பேர் ஓய்வு. 5 லட்சத்து 75 ஆயிரம் பணியிடம் இன்னும் காலியாக இருக்கு. சொல்வதெல்லாம் பொய். அதிமுக ஆட்சியில் நிச்சயம் விசாரணை நடத்தப்படும். அதிகாரிகள் தவறு செய்தால் அவ்வளவுதான்.
விலைவாசி ஒப்பிட்டுப் பாருங்க. பச்சரிசி அரிசி 77, புழுங்கல் அரிசி 72, இட்லி அரிசி 48, கடலை எண்ணெய் 190, நல்லெண்ணை 400, துபருப்பு 130, உபருப்பு 120, ஆக இப்படி விலைவாசி அதிகமாக இருந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? கட்டுமானப் பொருள்கள் விலையும் விண்ணைத் தொட்டுவிட்டது. கனவில்தான் வீடு கட்ட முடியும். இத்தொழில் ஈடுபட்டவங்க வேலையில்லாமல் இருக்காங்க.
அதுமட்டுமல்ல, கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி ஆரம்பிச்சாங்க, இதுவரை கட்டடமே கட்டலை, அதனால் மாணவர்கள் வெவ்வேறு இடத்துல படிக்கிறாங்க. அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செய்தோம். மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், சட்டக் கல்லூரி என நிறைய கொடுத்தோம். கிராம மக்கள் ஆங்காங்கே சிகிச்சை பெற அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம், அது பொறுக்க முடியலை. மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கல்வித்துறை அமைச்சர் சொல்றார், எடப்பாடி நிறைய மேல்நிலைப் பள்ளி திறந்துவிட்டார் என்கிறார். மாணவர் குறைவாக இருந்தாலும் மேல்நிலை பள்ளி துவக்கினோம். கல்வி கற்கத் தானே திறந்தோம், மக்களுக்குத் தேவை, கேட்டாங்க கொடுத்தோம் இதுல என்ன தப்பு? கிராம மாணவர்கள் பயன்பெறுவதற்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்தோம், 2818 பேர் மருத்துவர் ஆகிட்டாங்க. ஏழைகளுக்காக கொடுத்தோம். முதல் செட் மாணவர்கள் மருத்துவர் ஆகிட்டாங்க, அவங்க என்கிட்ட வந்து நன்றி சொன்னார்கள்.
நிறைய விவசாயக் கருவிகள் கொடுத்தோம், அதிலேயும் இந்த ஆட்சியில் ஊழல். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு டிராக்டர் கொடுக்குறாங்க. இதையெல்லாம் விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி வயிற்றில் அடிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். 20 துறைகளில் இருந்து எடுத்து வேளாண் என்று தனி பட்ஜெட் படிக்கிறார். மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இன்று உங்களுடன் ஸ்டாலின் என்று வருகிறார். 46 திட்டங்களை 45 நாட்களில் நிவர்த்தி செய்வாராம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து, மனுக்களை வாங்கி ஆட்சிக்கு வந்து தீர்ப்பேன் என்றார். நாலு வருஷம் ஏன் தீர்க்கவில்லை? அப்புறம் எதுக்கு இந்த புதிய திட்டம்? ஸ்டாலின் ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்.
ஒரு முதல்வரே நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். இப்படி ஒரு முதல்வர் தேவையா? கீழ்வேளூர் அதிமுகவுக்கு கொடுக்கச் சொல்கிறார் ஓ.எஸ்.மணியன், உங்கள் எண்ணம் நிறைவேறும். அதிமுகவை நேசிக்கும் மக்கள் இருக்கிறீர்கள்.
கீழ்வேளூர் தொகுதியில், தடுப்பணைகள், குடிமராமத்து திட்டம், பிரமாண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே ஆர்டரில் 11 மருத்துவக் கல்லூரி கொடுத்த ஆட்சி அதிமுகதான். இப்ப அந்த மருத்துவமனைகள் சரியில்லை, மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அப்போலோ மருத்துவமனையின் சிகிச்சை இதிலும் அளிக்கப்படும்.
அதிமுக அரசு மக்கள் அரசு. முடியட்டும் திமுக ஆட்சி, மலரட்டும் மக்கள் ஆட்சி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்".
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
- சில இடங்களில் காலை 10 மணி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேவேளையில் இரவு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.
நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கன்னியாகுமரி, திருவள்ளூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சாலைகளில் வழுக்கும் வகையில் மழை பெய்யவும், சில இடங்களில் போக்கவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.






