என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு - எடப்பாடி பழனிசாமி
- விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
- மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கீழ்வேளூர்:
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் மற்றும் திருவாரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அமோக வரவேற்பு கொடுத்த கீழ்வேளூர் தொகுதி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், '
'விவசாயத்தை நம்பித்தான் உங்கள் வாழ்க்கை உள்ளது. உங்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டுவந்தோம். பார்த்து பார்த்து செய்துகொடுத்தோம். ஆனால், ஸ்டாலின் அரசோ மீத்தேன் எடுப்பதற்கு விளை நிலங்களை பறிக்க கையெழுத்து போட்டது. அப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம். இனி எவராலும் உங்கள் நிலத்தைப் பறிக்க முடியாது. விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
எல்லா துறையிலும் ஊழல். டாஸ்மாக்கில் ஊழல் முதலில் 1000 கோடி என்றார்கள். இப்போது 40 ஆயிரம் கோடி என்கிறார்கள். இந்த ஆட்சியின் ஒரே சாதனை கொள்ளை அடித்ததுதான். சபரீசனும் உதயநிதியும் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்ததாக திமுக அமைச்சரே சொன்னார். உண்மைதான். டாஸ்மாக்கில் மட்டும் வருஷத்துக்கு 5,400 கோடி ஊழல், யாரு வாங்குறது செந்தில் பாலாஜி, இப்பவும் கூட வாங்குறார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் பல பேர் எங்கே இருக்கணுமோ அங்கே இருப்பாங்க. அதிமுகவை அவதூறாக பேசுறீங்க, எம்ஜிஆர் தொடங்கிய அம்மா கட்டிக்காத்த புனிதமான இயக்கம். எங்க கட்சியில் வாரிசு அரசியல் இல்லை. இந்தியாவில் மன்னராட்சி ஒழித்தாச்சு, திமுகவில் கொண்டுவந்துட்டாங்க. பதவியை உங்களுக்கு யாரும் பட்டா போட்டு கொடுத்தாங்களா? அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி. விசுவாசமாக உள்ள யார் வேண்டுமானலும் வரலாம். திமுகவிலும் அப்படி யாராக இருந்தாலும் முதல்வராக முடியும் என்று ஒருவார்த்தை சொல்லுங்கள் பார்ப்போம். குடும்பம்தான் கட்சி, கட்சிதான் குடும்பம்.
ஸ்டாலினே இதனை ஒப்புக்கொண்டார். திமுகவில் இருக்கும் எல்லோரும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திடுவாங்க, இன்பநிதி வந்தாலும் ஏத்துபாங்க அப்படி இருந்தாத்தான் பதவி கொடுப்பாங்க. திமுக கம்பெனியில் கோடி கோடியா பணம் குவியுது.
அதிமுக ஆட்சியில் ஆடு, மாடு, கோழி இலவசமாகக் கொடுத்தோம். பசுமை வீடு கொடுத்தோம். ஆனால், எங்களை எப்படியெல்லாம் எங்களை துன்பப்படுத்தினீங்க..? சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது என்னுடைய டேபிளில் வந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகர் இருக்கையில் அவரை எழுப்பிவிட்டு திமுகவினர் அமர்ந்தனர். ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே போனார்.
அடுத்த ஆண்டு அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். முன்பு சட்டையை கிழிச்சீங்க… அடுத்து எதை கிழிப்பீங்கனு தெரியலை. எங்க கட்சி நல்லாத்தான் இருக்கு, இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. எங்க ஆளுங்களை எட்டப்பன் மாதிரி விலைக்கு வாங்கி தொல்லை கொடுத்தீர்கள்.
டிஎன்பிஎஸ்சியில் ஊழல். இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் ஊழல். 5.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். ஆனால் வெறுமனே 50 ஆயிரம் பேர் தான் நிரப்பினாங்க. ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் ஓய்வு, 4 வருடத்தில் 70 ஆயிரம் பேர் ஓய்வு. 5 லட்சத்து 75 ஆயிரம் பணியிடம் இன்னும் காலியாக இருக்கு. சொல்வதெல்லாம் பொய். அதிமுக ஆட்சியில் நிச்சயம் விசாரணை நடத்தப்படும். அதிகாரிகள் தவறு செய்தால் அவ்வளவுதான்.
விலைவாசி ஒப்பிட்டுப் பாருங்க. பச்சரிசி அரிசி 77, புழுங்கல் அரிசி 72, இட்லி அரிசி 48, கடலை எண்ணெய் 190, நல்லெண்ணை 400, துபருப்பு 130, உபருப்பு 120, ஆக இப்படி விலைவாசி அதிகமாக இருந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? கட்டுமானப் பொருள்கள் விலையும் விண்ணைத் தொட்டுவிட்டது. கனவில்தான் வீடு கட்ட முடியும். இத்தொழில் ஈடுபட்டவங்க வேலையில்லாமல் இருக்காங்க.
அதுமட்டுமல்ல, கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி ஆரம்பிச்சாங்க, இதுவரை கட்டடமே கட்டலை, அதனால் மாணவர்கள் வெவ்வேறு இடத்துல படிக்கிறாங்க. அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செய்தோம். மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், சட்டக் கல்லூரி என நிறைய கொடுத்தோம். கிராம மக்கள் ஆங்காங்கே சிகிச்சை பெற அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம், அது பொறுக்க முடியலை. மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கல்வித்துறை அமைச்சர் சொல்றார், எடப்பாடி நிறைய மேல்நிலைப் பள்ளி திறந்துவிட்டார் என்கிறார். மாணவர் குறைவாக இருந்தாலும் மேல்நிலை பள்ளி துவக்கினோம். கல்வி கற்கத் தானே திறந்தோம், மக்களுக்குத் தேவை, கேட்டாங்க கொடுத்தோம் இதுல என்ன தப்பு? கிராம மாணவர்கள் பயன்பெறுவதற்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்தோம், 2818 பேர் மருத்துவர் ஆகிட்டாங்க. ஏழைகளுக்காக கொடுத்தோம். முதல் செட் மாணவர்கள் மருத்துவர் ஆகிட்டாங்க, அவங்க என்கிட்ட வந்து நன்றி சொன்னார்கள்.
நிறைய விவசாயக் கருவிகள் கொடுத்தோம், அதிலேயும் இந்த ஆட்சியில் ஊழல். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு டிராக்டர் கொடுக்குறாங்க. இதையெல்லாம் விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி வயிற்றில் அடிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். 20 துறைகளில் இருந்து எடுத்து வேளாண் என்று தனி பட்ஜெட் படிக்கிறார். மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இன்று உங்களுடன் ஸ்டாலின் என்று வருகிறார். 46 திட்டங்களை 45 நாட்களில் நிவர்த்தி செய்வாராம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து, மனுக்களை வாங்கி ஆட்சிக்கு வந்து தீர்ப்பேன் என்றார். நாலு வருஷம் ஏன் தீர்க்கவில்லை? அப்புறம் எதுக்கு இந்த புதிய திட்டம்? ஸ்டாலின் ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்.
ஒரு முதல்வரே நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். இப்படி ஒரு முதல்வர் தேவையா? கீழ்வேளூர் அதிமுகவுக்கு கொடுக்கச் சொல்கிறார் ஓ.எஸ்.மணியன், உங்கள் எண்ணம் நிறைவேறும். அதிமுகவை நேசிக்கும் மக்கள் இருக்கிறீர்கள்.
கீழ்வேளூர் தொகுதியில், தடுப்பணைகள், குடிமராமத்து திட்டம், பிரமாண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே ஆர்டரில் 11 மருத்துவக் கல்லூரி கொடுத்த ஆட்சி அதிமுகதான். இப்ப அந்த மருத்துவமனைகள் சரியில்லை, மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அப்போலோ மருத்துவமனையின் சிகிச்சை இதிலும் அளிக்கப்படும்.
அதிமுக அரசு மக்கள் அரசு. முடியட்டும் திமுக ஆட்சி, மலரட்டும் மக்கள் ஆட்சி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்".
இவ்வாறு அவர் பேசினார்.






