என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க.வுடன் இருப்பவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டோம் - த.வெ.க. திட்டவட்டம்
    X

    பா.ஜ.க.வுடன் இருப்பவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டோம் - த.வெ.க. திட்டவட்டம்

    • மதவாத சக்திகளை வீழ்த்த, விஜய் தலைமையில் சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
    • மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பா.ஜ.க., குடும்பப்பற்று தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம்.

    சென்னை:

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே தேர்தல் கூட்டணி பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. யார், யாருடன் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கூடி வருகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பிரமாண்டமான கட்சி இணைய உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பேசியது, அரசியல் அரங்கில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டது த.வெ.க.வை தான் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

    இந்தநிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு, த.வெ.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதில் அளித்து கூறியதாவது:-

    தமிழகத்தின் முதன்மை சக்தியான த.வெ.க. தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்குகிறார்கள். ஏனென்றால், ஆண்ட கட்சிக்கும் (அ.தி.மு.க.), ஆளும் கட்சிக்கும் (தி.மு.க.) எங்கள் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.

    தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எங்களது முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான்.

    மதவாத சக்திகளை வீழ்த்த, விஜய் தலைமையில் சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் நிரந்தர எதிரியான பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக்கொள்ளமாட்டோம்.

    மாற்றிப்பேசுவதும், ஏற்றிப்பேசுவதும், ஆள் வைத்து தூற்றிப்பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம். எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர். தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை.

    மண்ணுக்கும், மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பா.ஜ.க., குடும்பப்பற்று தி.மு.க. இருவரையும் தோற்கடிப்போம். பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம். வீண் கற்பனைகளை புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×