என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • சென்னையில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேவேளையில் இரவு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது.

    இந்நிலையில் மாலை 4 மணி அளவில் தேனாம்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர், எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    இதனால் வெப்பம் குறைந்து சென்னையில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • மு.க.முத்துவின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

    மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மூத்த சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு மு.க.அழகிரி மாலை அணிவித்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

    • எம்.பி. விஜய் வசந்த் CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.
    • ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

    எம்.பி. விஜய் வசந்த் இதற்காக CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.

    கோவையை சேர்ந்த ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.

     

    இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் இன்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குத்துவிளக்கு ஏற்ற, விஜய் வசந்த் எம்.பி. வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

    மாணவர்கள் பயில இந்த சேவையை செய்ய முன்வந்த ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பிற்கு விஜய் வசந்த் எம்.பி. விழாவில் நன்றி தெரிவித்தார்.

    • ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
    • ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தனது வீட்டில் தனது இருக்கைக்கு கீழ்ப்பகுதியில் விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து பா.ம.க.வினர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி எஸ்.பி தினகரனிடம் புகார் மனு அளித்திருந்தனர் .

    இந்த நிலையில் 6-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கும்போது ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது .

    அதற்கு தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் என்று ஒரு பிரிவு இருக்கிறதா என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். மேலும் 2 நாட்களில் யார் ஒட்டு கேட்கும் கருவி வைத்தார்கள் என்று அம்பலமாகும் என தெரிவித்திருந்தார்.

    உங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா என கேட்ட கேள்விக்கு உங்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என கூறியிருந்தார்.

    இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீடு மற்றும் அருகே உள்ள டவர்களில் யார் யார் தொலைபேசி மூலமாக யார் யாரிடம் பேசி உள்ளனர் என விசாரணை நடத்தினார்கள்.

    அதேபோல டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று 3-வது நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக தனியார் ஏஜென்சியின் முழுமையான ஆய்வறிக்கை வந்த பிறகு அந்த ஆய்வு அறிக்கையை டாக்டர் ராமதாசிடம் தனியார் ஏஜென்சி ஒப்படைப்பார்கள். அதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் இது சம்பந்தமாக போலீசாரிடம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • மு.க.முத்து மரணம் பற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. மூத்த தலைவர்கள் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    பின்னர் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து மு.க.முத்துவின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து வயது மூப்பின் காரணமாக இன்று (19-ந்தேதி) காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்படும்.

    அன்னாரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும். சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மு.க.முத்து கடந்த 2006-ம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான "மாட்டு தாவணி" என்ற படத்துக்காக தேவா இசை அமைப்பில் நாட்டுப்புற பாடல் ஒன்றை பாடி இருந்தார். அதன் பிறகு அவர் எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

    மு.க.முத்து மரணம் பற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. மூத்த தலைவர்கள் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலை அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா எழுதிய "அவரும் நானும்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. அந்த புத்தக வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மு.க.முத்து மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
    • அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

    அன்புச் சகோதரர் மு.க. முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • பக்தர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.
    • மு.க. முத்து அரசியல் வரலாற்றில் தனக்கென தனி இடம் பதித்தவர்.

    கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் - தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

    தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.கழக மேடைகளில் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.

    இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மு.க.முத்து அவர்களின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும் திரைப்பட நடிகருமான மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவரை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், தி.மு.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மூத்த மகன் மு.க. முத்து உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

    மு.க. முத்து அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் திறம்பட நடித்தவர். தொடர்ந்து அவர் நடிக்கவில்லை என்றாலும் திரைத்துறை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்தார். மிகவும் அமைதியானவர், பழகுவதற்கு இனியவர்.

    அன்னாரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, தனது சகோதரனை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது சகோதர, சகோதரிகளுக்கும் மு.க.முத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தி.மு.க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

    மு.க. முத்து தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க. முத்து. பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.

    அவரது மறைவு அவரது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி.மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழ்த் திரைப்பட நடிகரும் மேடை பாடகருமான மு.க.முத்து திரைத்துறையில் சில காலங்கள் இருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்தவர். நாடகங்கள் மூலமாக திராவிட கழகத்திற்கு பெரும் தொண்டாற்றினார். திரைத்துறையில் 1970 ஆம் ஆண்டு நுழைந்து பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து மு.க.முத்து தனது சொந்தக் குரலில் பல்வேறு பாடல்களில் பாடி புகழ்பெற்றவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழக மத்தியிலும், திரையுலகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
    • தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கும் புளியமங்கலம் ரெயில் நிலையம் இடையே மின்சாதன கோளாறு ஏற்பட்டது .

    இதனால் சிக்னல்கள் இயங்க தடைபட்டதால் அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மின் சாதன கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றன.

    குறிப்பாக கோவையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குறித்த நேரத்திற்கு பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்:-

    மின்சார துண்டிப்பு, தண்டவாளம் பழுது, மின்சார கோளாறு என பல்வேறு காரணங்களால் அரக்கோணத்தில் ரெயில்கள் இயக்கம் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் அவதி அடைந்து வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளை மேற்பார்வையிட்டு இது போன்ற தவறை இனி நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்?
    • திமுக அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை அசோக்நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் அசோக் நகர் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் இந்த நவீன இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் இந்தி எழுத்துகளை மட்டும் வெள்ளைக் காகிதத்தை ஒட்டி மறைத்திருக்கிறது. இந்த நவீன இந்தித் திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது.

    சென்னை மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டாலும் கூட, அதன் நிர்வாக அதிகாரம் தமிழக அரசிடம் தான் உள்ளது. தமிழ்நாடு பிரிவு இ.ஆ.ப. அதிகாரி தான் அதன் மேலாண் இயக்குனராக உள்ளார். இத்தகைய சூழலில் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி எழுத்துகள் இடம் பெற்றது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

    மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இந்தி திணிக்கப்பட்டால், அதற்கு எதிராக முழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது அவரது அரசின் இந்தித் திணிப்பைக் கண்டும் காணாமலும் அமைதியாக இருப்பது ஏன்? இரு மொழிக் கொள்கை தான் தங்களின் கொள்கை என்று கூறி வரும் மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்?

    அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததன் காரணமாகத் தான் இந்தி எழுத்துகள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டன. இல்லாவிட்டால் மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் முழுவதும் இந்தி திணிக்கப்பட்டிருக்காது என்பதற்க்கு என்ன உத்தரவாதம்?

    திமுக அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழக மக்கள் மீது தமிழக அரசு நிறுவனம் மூலம் இந்தியை திணிக்க முயன்றதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் தீவிரம் அடைந்து அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணைகள், அருவிகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை பகுதியிலும் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிகளில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 1466 கன அடி. நீர் திறப்பு 969 கன அடி. நீர் இருப்பு 4337 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது. வரத்து 921 கன அடி. திறப்பு 1419 கன அடி. இருப்பு 4654 மி.கன அடி.

    மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகாரிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
    • விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் ஊட்டி பஸ் நிலையம், பிங்கா் போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பியவா்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவா்கள் அவதிக்கு உள்ளாகினர்.

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் மாலை நேரங்களில் மிதமான குளிருடன் கூடிய காலநிலை நிலவியது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட்புரூக், பாண்டியன் பார்க், ஒரசோலை, தாந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது மாலை நேரம் வரை தொடர்ந்து நீடித்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் கடுங்குளிர் நிலவியது. இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்ற சுற்றுலா தலங்கள் வழக்கம் போல திறந்து இருந்தன. அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து, தங்கள் பொழுதை கழித்தனர்.

    ×