என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் - தைலாபுரம் தோட்டத்தில் 3-வது நாளாக விசாரணை
- ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
- ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, தனது வீட்டில் தனது இருக்கைக்கு கீழ்ப்பகுதியில் விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பா.ம.க.வினர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி எஸ்.பி தினகரனிடம் புகார் மனு அளித்திருந்தனர் .
இந்த நிலையில் 6-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கும்போது ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது .
அதற்கு தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் என்று ஒரு பிரிவு இருக்கிறதா என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். மேலும் 2 நாட்களில் யார் ஒட்டு கேட்கும் கருவி வைத்தார்கள் என்று அம்பலமாகும் என தெரிவித்திருந்தார்.
உங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா என கேட்ட கேள்விக்கு உங்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என கூறியிருந்தார்.
இது தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலீசார் டாக்டர் ராமதாஸ் வீடு மற்றும் அருகே உள்ள டவர்களில் யார் யார் தொலைபேசி மூலமாக யார் யாரிடம் பேசி உள்ளனர் என விசாரணை நடத்தினார்கள்.
அதேபோல டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று 3-வது நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாக்டர் ராமதாஸ் வீட்டில் இருக்கும் ஊழியர்கள் அவரது பாதுகாவலர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக தனியார் ஏஜென்சியின் முழுமையான ஆய்வறிக்கை வந்த பிறகு அந்த ஆய்வு அறிக்கையை டாக்டர் ராமதாசிடம் தனியார் ஏஜென்சி ஒப்படைப்பார்கள். அதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் இது சம்பந்தமாக போலீசாரிடம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.






