என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
- நடிப்பு மட்டுமில்லாமல் சில படங்களில் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார்.
- மு.க.முத்து மரணம் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. வயது 77. இவரது தாயார் பத்மாவதி. இவர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார்.
மு.க.முத்துவை கருணாநிதி தனது கலையுலக வாரிசாக சினிமா படங்களில் நடிக்க வைத்தார். முதல் முதலாக மு.க.முத்து "பிள்ளையோ பிள்ளை" என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு "பூக்காரி", "சமையல்காரன்", "அணையா விளக்கு" ஆகிய படங்களிலும் தொடர்ந்து நடித்தார்.
நடிப்பு மட்டுமில்லாமல் சில படங்களில் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். இவர் பாடிய "சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க" என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது.
மு.க.முத்து சில படங்களில் நடித்த பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்படவில்லை.
இதன் காரணமாக இவர் யாரிடமும் அதிக தொடர்பு இன்றி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஈஞ்சம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
வயது மூப்பு காரணமாக அவர் வெளியில் எங்கும் வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருந்து வந்தார். அவருக்கு தேவையான உதவிகளை அவரது மனைவி சிவகாம சுந்தரி செய்து வந்தார். இன்று (சனிக்கிழமை) காலை எழுந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.
7.30 மணியளவில் அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. 8 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு அறிவுநிதி என்ற ஒரே மகனும், தேன்மொழி என்ற மகளும் இருக்கிறார்கள்.
மு.க.முத்து மரணம் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் கீழ்ப்பாக்கம் மற்றும் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.
அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈஞ்சம்பாக்கத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மு.க.முத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.






