என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு: மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் சகோதரர் உள்பட 5 பேர் நேரில் ஆஜராகி விளக்கம்
- ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றனர்.
- இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு வழக்கு தொடர்பாக மடப்புரம் கோவில் அலுவலகம், கோவில் கோ சாலை, வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், கோவில் கார் டிரைவர் கார்த்திவேல், ஆட்டோ டிரைவர் அருண்குமார், அஜித் குமாருடன் பணியாற்றிய வினோத்குமார், பிரவீன் ஆகிய 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
அதில் 5 பேரும் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் உள்பட 5 பேர் ஆஜராகினர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றனர். இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
இதற்கிடையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் செல்போன்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொழில் நுட்ப அதிகாரிகளின் உதவியோடு, அதில் உள்ள தரவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். சம்பவம் நடந்த சமயங்களில் 5 பேரும் யாருடன் செல்போனில் பேசினார்கள்? இவர்களிடம் பேசியது யார்? என்ன பேசினார்கள்? என்பது குறித்து செல்போன் தரவுகளை சேகரிக்கவும், சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தால் அஜித்குமார் கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






