என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
    • முதலமைச்சர் நலமுடன் உள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

    மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி கூறுகையில், முதலமைச்சர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றார். 

    • வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அர்திகா பலத்த காயம் அடைந்தார்.
    • சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உழவன்கொட்டாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அர்திகா பலத்த காயம் அடைந்தார். அப்போது சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த அவரது தாய் சோனியா அலறியடித்து வந்து பார்த்தபோது மகள் அர்திகா பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக சிறுமி அர்திகாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமி அர்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுமி சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகலறிந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உழவன்கொட்டாய் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த வந்த அதியமான்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது அரசு பஸ் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்சி தொண்டர்களிடம் விஜய் என்ற பெயரையே கூறக்கூடாது புஸ்சி ஆனந்த் பேசியது சர்ச்சையானது.
    • விஜய் என்று கூறாமல் தளபதி என்று தான் கூற வேண்டும் என்று புஸ்சி ஆனந்த் பேசியிருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு JV தளபதி" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோசப் விஜய் என்பதை தான் சுருக்கி JV என்று புஸ்சி ஆனந்த் கூறுகிறார். ஏற்கனவே அவர் கட்சி தொண்டர்களிடம் விஜய் என்ற பெயரையே கூறக்கூடாது தளபதி என்று தான் கூற வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    இப்போது ஜோசப் விஜய் என்பதை சுருக்கி JV என்று பேசியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
    • தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.

    அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவிருகிறேன். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

    இந்த பயணத்திற்காக 'உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக அந்த இலட்சினையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    • மாலையில் ராஜேந்திரசோழன் நாடகம், மயில் காவடி, கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள, மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவரின் பிறந்தநாளை ஆடி மாத திருவாதிரை விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது.

    இந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழா, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு இன்று காலை பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் யாழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாட்டிய நாடகம், கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதியம் "சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் நிர்வாகத்திறனே! போர் வெற்றிகளே!" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மக்களிசைப் பாடல்கள் நடைபெற்றன. மாலையில் ராஜேந்திரசோழன் நாடகம், மயில் காவடி, கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அங்கு சுமார் 3 மணி நேரம் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இந்த விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும், தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்படும் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.

    அதன் பின்னர், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கிறார். இளையராஜா சமீபத்தில் லண்டனில் நிகழ்த்தி சாதனை படைத்த சிம்பொனி இசையை கங்கைகொண்ட சோழபுரத்தில் அரங்கேற்றுகிறார். அதனை பிரதமர் மோடி 20 நிமிடங்கள் கேட்டு ரசிக்கிறார்.

    விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்குள் அவர் நுழையும்போது 50 ஓதுவார்கள் மூலம் திருவாசகம் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த விழாவில் தமிழ்நாட்டில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் வளாகத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அரியலூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து கங்கைகொண்ட சோழ புரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    • தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
    • ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நகர் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறில் 4 மில்லிமீட்டரும், கன்னடியனில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 115.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1496 கனஅடி நீர்வரும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வெயில் தலைகாட்டவில்லை. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. களக்காடு சுற்றுவட்டாரத்தில் 1.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கார் பருவ சாகுபடி பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கடனா அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து இன்று 65 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 125 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 3 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 71 அடியாக இருந்த ராமநதி இன்று 2 அடி உயர்ந்து 73 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 129 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று காலை நிரம்பியது. அணை இந்த ஆண்டு 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    இந்த வருடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடவிநயினார் கோவில் அணையானது கார் சாகுபடி காலங்களில் 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்ததாலும், அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தினாலும் நீர்மட்டமானது வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக அணையானது 2-வது முறையாக நிரம்பி உள்ளது.

    தற்போது 100 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவை அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் அனுமன்நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • போலி ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
    • பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பணத்துக்காக சிறுநீரகம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இவர்களின் வறுமையை தெரிந்து கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறுநீரக மோசடியில் தொடர்புடைய புரோக்கர்கள், டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தது.

    இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஓய்ந்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிபாளையத்தை சேர்ந்த ஒரு பெண் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டார்.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் கவுசல்யா என்பது தெரியவந்தது. மேலும் அவர் புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக தனக்கு ரூ.6 லட்சம் தந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயா என்ற பெண்ணும் தனது சிறுநீரகத்தை ரூ.6 லட்சத்துக்கு கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் திருச்சி, பெரம்பலூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று ஆய்வு செய்தனர். அதில் திருச்சி ஆஸ்பத்திரியில் நடத்திய சோதனையில் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 6 பெண்களின் சிறுநீரகம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த முகவரிக்கு வந்து ஆய்வு செய்த போது அது போலியானது என்று தெரியவந்தது.

    எனவே போலி ஆவணங்கள், போலி முகவரி கொடுத்து இந்த சிறுநீரக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே இவர்களை அழைத்து சென்ற புரோக்கர் ஆனந்தன் என்பவரை தேடி சென்ற போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

    பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பணத்துக்காக சிறுநீரகம் எடுக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. வழக்கமாக ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய வேண்டும் என்றால் அவரிடம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்பார்கள். அதற்கு ஏற்றாற் போல் சிறுநீரகம் கொடுக்கும் பெண்களை புரோக்கர்கள் தயார் செய்துஅழைத்து சென்று உள்ளனர்.

    பள்ளிபாளையம் பகுதியில் இதுவரை ஏராளமான பெண்களிடம் சிறுநீரகம் எடுத்து மோசடி நடந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோக்கர் ஆனந்தன் பிடிபட்டால் தான் எத்தனை பேரிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்டது என்ற முழுவிபரமும் தெரியவரும்.

    இதற்கிடையே திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் திட்ட இயக்குனர் வினீத், மருத்துவ சட்ட துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசன், மருத்துவ சட்ட பிரிவு டி.எஸ்.பி. சீத்தாராமன் மற்றும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் கைப்பற்றப்பட்ட போலி ஆவணங்களில் கையெழுத்து போட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் திருச்சி, பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிந்ததும் அவர்கள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது.
    • முதலமைச்சரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலை சுற்றலை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் சில மருத்துவ பரிசோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பணிகளை தொடர்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது. முதலமைச்சரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.

    மு.க.முத்து இறப்பின் போது நாள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டதால் சோர்வடைந்தார் என்று கூறினார். 

    • டிஎஸ்பி சுந்தரேசன் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
    • லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.

    மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கார் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

    அவரது அலுவலக வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வி.ஐ.பி. பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை அவருக்கு கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்துவிட்டு பணிகளை கவனிக்க வீட்டில் இருந்து நடந்து வந்ததாகவும் வீடியோ வைரல் ஆனது.

    இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்டு செய்யப்படுவேன் என்று தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.

    மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்ததையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நெஞ்சு வலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுந்தரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை;
    • குறைந்தபட்சம் இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது கையூட்டு வாங்காமலாவது நடவடிக்கை எடுத்திருந்திருக்கலாம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த வழக்கறிஞர் ஒருவரிடம் நகராட்சி ஊழியர் ரகுபதி என்பவர் கையூட்டு கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். திமுக ஆட்சியில் எங்கும் கையூட்டு, எதிலும் கையூட்டு என்ற சூழல் நிலவும் நிலையில் அரசின் சேவைக்காக அரசு ஊழியர் கையூட்டு கேட்டிருப்பது எந்த வகையிலும் அதிர்ச்சி அளிக்கவில்லை; மாறாக, தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுக ஆட்சி என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை; அரசு அலுவலகங்களில் இயல்பாக வழங்கப்பட வேண்டிய சேவைகளை, முகாம்களை நடத்தி காலதாமதமாக வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்று தொடக்கத்திலிருந்தே குற்றஞ்சாட்டி வருகிறேன். குறைந்தபட்சம் இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது கையூட்டு வாங்காமலாவது நடவடிக்கை எடுத்திருந்திருக்கலாம்.

    ஆனால், அதைக் கூட செய்யாமல், குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக்கோரி விண்ணப்பித்த ஒருவரின் மனுவில் இருந்த அவரது செல்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து தொடர்பு கொண்டு கையூட்டு வழங்கும்படி அரசு ஊழியர் கட்டாயப்படுத்துகிறார் என்றால் தமிழக அரசால் நடத்தப்படுவது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களா அல்லது 'ஊழலுடன் ஸ்டாலின்' முகாம்களா? என்ற வினா தான் எழுகிறது.

    மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்... பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு விளம்பரப்படுத்தி நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் தங்களுக்கு விளம்பரம் கிடைத்ததாக ஆளும் திமுக வேண்டுமானால் திருப்தி அடையலாமே தவிர, மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக, இத்தகைய விளம்பரத் திட்டங்களுக்கு மாற்றாக சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அரசின் அனைத்து சேவைகளும் கையூட்டு இல்லாமல் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். எனவே, அதை உடனடியாகச் செய்து திமுக அரசு பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

    2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இது தொடர்பாக அவர் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டே உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த கூட்டணி அழைப்பு பற்றி சீமானிடம் இதற்கு முன்பு நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது என்றே கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சீமானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது போல தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பு பற்றி கடந்த 2 நாட்களாக கருத்து தெரிவித்து வரும் சீமான் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இதன் மூலம் சீமான் தனித்து போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடன் சீமான் கூட்டணி அமைத்தால் அது நிச்சயம் அ.தி.மு.க. அணிக்கு பலமாகவே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி பரவலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள், கண்மாய்கள், குளங்கள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 1 வாரமாக மீண்டும் பரவலாக தீவிரமடைந்து வருகிறது.

    தற்போது தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க இன்று 5ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுருளி அருவிக்கு அமாவாசை நாட்களில் அதிக அளவு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இந்நிலையில் 5-வது நாளாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே மேகமலை அடுத்துள்ள சின்னச்சுருளி அருவியில் 4 நாட்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமானோர் ஆனந்தமாக நீராடிச் சென்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 64.80 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும் 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4586 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது. நீர் வரத்து 2132 கன அடி. திறப்பு 1861 கன அடி. இருப்பு 4720 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையில் 34.4, தேக்கடி 26.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×