என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அரியலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
- ஏற்கனவே திருச்சியில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அரியலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி கீழப்பாவூர், வாரணாசி, கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரப்புரையை முடித்து அண்ணா சிலை, கல்லங்குறிச்சி ரவுண்டானா வழியாக குன்னம் செல்கிறார் தவெக தலைவர் விஜய்.
ஏற்கனவே திருச்சியில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கியது குறிப்பிடதக்கது.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவமழை வட தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது.
வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
நேற்று தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
- வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.
திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், அன்புமணியை நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் டாக்டர் அன்புமணி கலந்து கொள்வதாகவும் இருந்தது.
இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தை திறக்க கூறினர்.
இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தெருவில் திரியும் அனைத்து பன்றிகளையும் பூங்காவில் இருந்து அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும்.
- பன்றிகள் சிக்கியவுடன், நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி கருணை கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கிண்டி தேசிய பூங்காவிற்குள் கடந்த ஜூன் மாதம் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பூங்கா பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஜூன் மாதத்தில் பூங்காவிற்குள், தெருவில் திரியும் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இது வனவிலங்கு ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கால்நடை பராமரிப்பு துறையினர், இறந்த பன்றிகளின் உடல்களில் இருந்து சேகரித்த மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் வீட்டு மற்றும் காட்டு பன்றிகளை பாதிக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தெருவில் திரியும் 40-க்கும் மேற்பட்ட பன்றிகளை பூங்கா வளாகத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் தொடங்கினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கிண்டி தேசிய பூங்காவிற்குள் கடந்த ஜூன் மாதம் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. அதன்பிறகு மேலும் 8 பன்றிகளை நாங்கள் கொன்றுள்ளோம். தெருவில் திரியும் அனைத்து பன்றிகளையும் பூங்காவில் இருந்து அகற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும். பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பன்றிகளை கண்டறிவது சவாலானது. பன்றிகளை கவரும் வகையில் தீவனத்துடன் கூடிய கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிகள் சிக்கியவுடன், நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி கருணை கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல், பன்றிகளுக்கு ஆபத்தானது என்றாலும், பூங்காவிற்குள் உள்ள மற்ற வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த வைரஸ் பன்றிகளை மட்டுமே பாதிக்கிறது. காட்டுப்பன்றிகள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் பரவக்கூடும். ஆனால் மற்ற விலங்குகளுக்கு பரவக்கூடியது அல்ல.
இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றாலும், வைரஸ் பிறழ்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி உலக அளவில் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர். கிண்டி தேசிய பூங்காவை பொறுத்தவரை, பூங்காவின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்கவும், கிண்டி தேசிய பூங்காவில் தெருக்களில் திரியும் பன்றிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஜமாலியா சுரங்க நடைபாதை போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது நேரம் பெய்த பலத்த மழைக்கு சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியது.
பெரம்பூர்:
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ஜமாலியா சுரங்க நடைபாதை உள்ளது. இது பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் ஜமாலியா பகுதியை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளது. ஓட்டேரி, பிரிக்ளின்சாலை, ஜமாலியா, பெரம்பூர், வியாசர்பாடி செல்லும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு வருபவர்கள் என தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜமாலியா சுரங்க நடைபாதை போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. ஊற்றெடுக்கும் தண்ணீரால் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த சுரங்கப்பாதையில் மழை பெய்யாத போதும் தண்ணீர் கசிகிறது. இதனால் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகி விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது நேரம் பெய்த பலத்த மழைக்கு சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியது. தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிரமம் உள்ளது. சுரங்கப் பாதைக்குள் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மதுபான பாட்டில்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றன. சுரங்க நடைபாதையை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றனர்.
- திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
- நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.
திருப்பூர்:
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் இன்று பனியன் உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், விவசாயிகள் , பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மனுக்கள் அளித்தனர்.
அதனைப்பெற்றுக்கொண்ட அவர் தொழில்துறையினர் மத்தியில் பேசியதாவது:-
டாலர்சிட்டியான திருப்பூர் தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரின் நிலைமை எனக்கு கவலைஅளிக்கிறது. தமிழக அரசின் மின்கட்டணம், மாநகராட்சி வரி உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.
யாருக்கும் இழப்பு இல்லாமல் ஆட்சி நடத்தினோம். 27 சங்கங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் என்னிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். எல்லாவற்றிற்கும் நிதி தேவை. இப்போதைய தி.மு.க. அரசு இதுவரை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இன்னும் 1 லட்சம் கோடி வாங்குவார்கள். இதன் மூலம் ரூ.5 லட்சம் கோடியாக உயரும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். தொழிலும் வளர வேண்டும். விவசாயமும் செழிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் தொழில் தானாக வந்து விடும். வெளிமாநில முதலமைச்சர்கள் திருப்பூர் வந்து சலுகைகள் வழங்குவதாக கூறி தொழில் துறையினரை அவர்களது மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை ஏற்படாதவாறு பார்த்து கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- ரெயில்களில் உள்ள இருக்கைகள் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சென்னை:
சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் ரெயில் பயணத்தின் போது சிலர் செய்யும் அநாகரீகமான செயல்கள் மற்றவர்களுக்கு ஆபத்தையும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறி உள்ளது. மேலும் புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் எதிரே உள்ள இருக்கைகளில் கால்களை வைப்பதால், அந்த இருக்கைகள் அசுத்தமாவதுடன், மற்றவர்களுக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்துகிறது.
ரெயிலில் பயணிக்கும் ஒருவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்காக இருக்கைகளை பிடித்து வைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால், முதலில் வரும் மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை.
ஒரு சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமராமல் ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்பதற்கு முன்பே இருக்கைகளை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் ஏறுவதும், இறங்குவோருக்கு இடையூறு செய்வதும் விபத்துகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களுக்கும் அது ஆபத்தாக முடிய சாத்தியமுள்ளது.
எனவே ரெயில்களில் உள்ள இருக்கைகள் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், காலியாக உள்ள இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ரெயில் பெட்டியின் வாசல்களில் அமர்வதும், மற்ற பயணிகள் ஏறவும், இறங்கவும், வழியை மறிப்பதும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர்.
- வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஜெயராஜ். அரசு மற்றும் தனியார் ஒப்பந்த தொழில் செய்து வருவகிறார். இவர் இரிடியம் விற்பனை செய்வதாக புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர். அப்பகுதியில் ஜெயராஜுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திடீரென்று சோதனை நடத்தினர்.
வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
- நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
- அணை பகுதியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி நீர்வரத்து 1697 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.15 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2195 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் சீறி பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் கே.ஆர்.பி. அணை போலீசார் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அணை பகுதியை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஆற்றங்கரை யோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன்.
- இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம்.
சென்னை:
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது.
1. இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் We the Leaders' அறக்கட்டளை. இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.
ஆம். கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி திருமதி. அகிலா அவர்களுக்கு எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம்.
மேலும், நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்
2. நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.
தமிழகத்தில், பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை என் குடும்பத்துடன் செலவிட எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்.
இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.
- இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
- கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் டெல்லி பிரதிநிதி க்ரிஷ் சோடங்கர் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் கிராம கமிட்டிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தவும் அதில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் அவர் தமிழகத்திற்கு வருவதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். இதை அடுத்து இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்காக கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.
இந்த மாநாட்டை சென்னை அல்லது திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராகுல் கொடுக்கும் தேதியை பொறுத்து இடமும் தேதியும் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
- பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வருகிற 16-ந்தேதி சென்னையில் கூட்டம் நடைபெற உள்ளது.
- பா.ஜ.க. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் பா.ஜ.க. அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசிக்க உள்ளார்.
தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் 2026 தேர்தலுக்கான வியூகம், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் பா.ஜ.க. அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசிக்க உள்ளார்.
கூட்டணி முரண்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என்றும், பா.ஜ.க. தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.






