என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பராமரிப்பு இல்லாத ஜமாலியா சுரங்கப்பாதை- பொதுமக்கள் வேதனை
- ஜமாலியா சுரங்க நடைபாதை போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது நேரம் பெய்த பலத்த மழைக்கு சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியது.
பெரம்பூர்:
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ஜமாலியா சுரங்க நடைபாதை உள்ளது. இது பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் ஜமாலியா பகுதியை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளது. ஓட்டேரி, பிரிக்ளின்சாலை, ஜமாலியா, பெரம்பூர், வியாசர்பாடி செல்லும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு வருபவர்கள் என தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜமாலியா சுரங்க நடைபாதை போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. ஊற்றெடுக்கும் தண்ணீரால் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த சுரங்கப்பாதையில் மழை பெய்யாத போதும் தண்ணீர் கசிகிறது. இதனால் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகி விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது நேரம் பெய்த பலத்த மழைக்கு சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியது. தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிரமம் உள்ளது. சுரங்கப் பாதைக்குள் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மதுபான பாட்டில்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றன. சுரங்க நடைபாதையை சுத்தமாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றனர்.






