என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நவம்பர் மாதம் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி- சென்னை அல்லது திருச்சியில் கூட்டம் நடத்த முடிவு
- இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
- கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் டெல்லி பிரதிநிதி க்ரிஷ் சோடங்கர் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் கிராம கமிட்டிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தவும் அதில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் அவர் தமிழகத்திற்கு வருவதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். இதை அடுத்து இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்காக கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.
இந்த மாநாட்டை சென்னை அல்லது திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராகுல் கொடுக்கும் தேதியை பொறுத்து இடமும் தேதியும் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.






