என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.
    • வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 10 காட்டு யானைகளில் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.

    இந்த யானைகள் நேராக டபுள் ரோடு அருகே உள்ள மயான பகுதிக்குள் சென்று அங்குள்ள குழி மேடுகளை துவம்சம் செய்து மயான பகுதி முழுவதையும் சேதப்படுத்தியது.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த யானை கூட்டம், அங்கிருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.

    • தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.
    • சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    சென்னிமலை:

    தை மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் திருவிழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தைத்திருநாள் விழாவிற்கு பல பெயர்கள் இருந்தாலும் தைப் பொங்கல் என கூறி கிராமத்தில் இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புது துணி எடுப்பதில் ஆரம்பித்து வீடுகளை வெள்ளையடிப்பது, காப்பு கட்டுவது என விழா களைகட்ட தொடங்கி விடும்.

    நூற்றாண்டுகளாக தமிழர்களின் பண்பாட்டினையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் பாறை சாட்டும் விதமாக இது நடந்து வருகிறது. இந்த தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.

    குறிப்பாக சென்னிமலை பகுதியில் தை பொங்கல் விழா பெண்கள் திருவிழாவாக தான் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு தை 2-ம் நாள் நடக்கும் பூப்பறிக்கும் விழா நூற்றாண்டுகள் கடந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறிக்கின்றனர். சென்னிமலை சுற்று வட்டாரத்தை பொறுத்த வரை தை 2-ம் நாள் தான் பொங்கல் விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை முன்னிட்டு சென்னிமலை பகுதியில் நேற்று பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள் சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நேற்று 50-க்கும் குறைவான பெண்கள் தான் கலந்து கொண்டனர். சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    ஆனால், கிராம பகுதிகளில் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோயில் பகுதியிலும் தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் திண்பண்ட ங்களை உண்டு மகிழ்ந்து அப்பகுதியில் பூத்துக்குழுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வரும் போது இளம் பெண்கள் தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில் பாட்டு பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.

    பின்பு மாலை வீடு திரும்பி வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். பல நூற்றாண்டு பழமையான விழா ஆனாலும் இன்று கிராம பகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் படித்து பல்வேறு துறைகளில் வேறு ஊர்களில் பணியாற்றினாலும் இந்த பெண்கள் இன்றும் இந்த பூப்பறிக்கும் விழாவினை பழமை மாறாமல் சிறப்பாக கொண்டாடினர்.

    ஆனால் சென்னிமலை நகர பகுதியில் பூப்பறிக்கும் விழா இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 60 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.40-க்கும் பார் வெள்ளி ரூ.77,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5810-க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 60 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.40-க்கும் பார் வெள்ளி ரூ.77,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.
    • அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    சேலம்:

    சேலம் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.

    மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வருவார்கள். சிறியவர்களுக்கு கட்டணமாக 10 ரூபாயும், பெரியவர்களுக்கு கட்டணமாக 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.

    காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றி பார்த்ததுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள் மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை பூங்காவுக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.

    பின்னர் சமைத்து எடுத்து வந்த உணவை குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வழக்கமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வ ராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கடைகளிலும் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டதால் கூட்டம் அலை மோதியது.

    • பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர்.

    மாரண்டஅள்ளி:

    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் சத்திரம் தெரு மெயின் ரோட்டில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் வேங்கு கவுண்டர் தெரு, ஆணங்கிணறு தெரு, பைபாஸ் ரோடு சந்தை வீதி, செவத்தம்பட்டி முகமதியர் தெரு என பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் ஆனா சத்திரம் தெரு, மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதியில் காளைகளை அவிழ்த்து விட்டனர்.


    சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர். இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காய் மேற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர்.

    விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு விழாவை காண மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
    • நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு மற்றும் சிறுவன் ஹரி ஆகிய மூவரும் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பும் வழியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் தெற்கு கிராமம், மதுரை நெடுஞ்சாலை அபூர்வா ஹோட்டல் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதிய ஆற்றுப் பாலம் அருகே நேற்று மாலை குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

    நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார்.
    • எம்.ஜி.ஆரின் பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார். தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர் தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    • குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூர் 4-வது வார்டு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ரெங்கன் (வயது56). இவருக்கு மீனா என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர்.

    ரெங்கன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    ரெங்கன் குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இவரும் அவரது மூத்த மகன் மணிகண்டன் (31) என்பவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    போதையில் இவர்கள் தங்கள் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசிக்கொள்வதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் 2 பேரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.

    அதன்பின் வீட்டிற்கு தூங்க சென்ற தனது மகனை ரெங்கன் துரத்தி சென்று அரிவாளால் வெட்டினார். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    போதையில் கொலை செய்ததை அறிந்ததும் ரெங்கன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மீனா சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரெங்கனை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார்.
    • ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற்ற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இப்போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

    அதன்படி, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். வருகிற 19-ந்தேதி நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பின்னர், 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். மேலும் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசல் திடலில் அரசு வழிகாட்டுதல்படி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, எம்.எல். ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி கோவில் காளை, அருவிமலை கெங்கையம் மன், கருப்பசாமி கோவில் காளை, வலசை கருப்பு சாமி கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1,000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதேபோல் தகுதி பெற்ற 600 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டுவரப்பட்டு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை போட்டி தொடங்கியதும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. கழுத்தில் மாலை, பட்டுத்துணி சகிதமாக சீறிப்பாய்ந்து வந்த நாட்டின காளைகள் துள்ளிக்குதித்து வீரத்தை காட்டியது. பெரும்பாலான காளைகள் தேங்காய் நார் பரப்பப்பட்ட களத்தில் கால்களை வாரி இறைத்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை பறை சாற்றியது.

    யாருக்கும் பிடிபடாமல் வளர்ப்பாளர்களின் அழைப்புக்கு செவி சாய்த்து அவர்களுடன் வெற்றியுடன் புறப்பட்டு சென்றது மேடையில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களை வியப்படைய செய்தது. களத்தில் இறங்கி விட்டால் போட்டிதான் என்ற உணர்வில் காளையும், காளையர்களும் மல்லுக்கட்டிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.

    சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. முதல் சுற்றில் 2 காளைகளை அடக்கிய மதுரை ஊர்சேரியை சேர்ந்த சரவணக்குமார் முதலிடம் பிடித்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசு களைப் பெற்றனர்.

    அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளை, மற்றும் மாடுபிடி வீரருக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்க உள்ளனர்.

    சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம், அண்டா, மிக்ஸி, சைக்கிள், டி.வி., மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. காயம் அடைந்த வீரர்களை ஏற்றிச் செல்ல 10-க்கும் ஆம்புலன்ஸ் வசதி வாடிவாசல் அருகிலேயே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் அலங்காநல்லூர் பேரூராட்சி பணியாளர்கள் வாடிவாசலை தூய்மைப்படுத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் 10 கூடுதல் சூப்பிரண்டுகள், 55 துணை சூப்பிரண்டுகள், 10 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள், 185 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
    • 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    "40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

    தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்" என தெரிவித்துள்ளார்.

    • மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
    • இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

    திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

    ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.

    இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.

    எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

    ×