என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
- திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.
- பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் மாதனூர் அடுத்த கீழ்மிட்டாளம் அ.தி.மு.க. கிளை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை வைத்திருந்தனர்.
இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட அ.தி.மு.க.வினர் வந்தனர். சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதைக்கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அ.தி.மு.க.வினர் நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது எம்.ஜி.ஆர். படத்தை ஒட்டினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினர்.
- ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்களான ஊட்டி, வால்பாறை பகுதிகளுக்கு அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 தினங்களாக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, லேம்ஸ்ராக் அணை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலைசிகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து மலர்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.
தங்கள் குழந்தைகளுடன் புல்வெளியில் ஆடி, பாடி, விளையாடியும் விடுமுறையை கொண்டாடினர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின. அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது.
- தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
திருச்சி:
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கவர்னர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும்.
அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது. காலணியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து கவர்னர் ஆர்,என்.ரவி கார் மூலமாக மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
- பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
- வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திசையன்விளை:
தமிழகத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி சந்திரசேகரர்-மனோன்மணி அம்மாள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மேளதாளம் முழங்க கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
விழாவில் தேர் கமிட்டி தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் உதய மார்த்தாண்ட அபிஷேகம், விநாயகர் வீதி உலா, இரவு சாய ரட்சை பூஜை, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்மாள் அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில், சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி வீதி உலா நடக்கிறது. மேலும் இரவில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்தவாரியும், மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜையும், உச்சிகால பூஜை, உற்சவர் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 26-ந் தேதி காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார்.
- தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர்.
- ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.
சென்னை :
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்."
தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல் போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் "புரட்சித் தலைவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர்.
தமிழக முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, தெய்வத்திரு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்! என கூறியுள்ளார்.
"இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்."
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 17, 2024
தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின்… pic.twitter.com/tRUr41DxEI
- மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
- அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். காலை 10.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி காரில் அங்கு வந்து இறங்கினார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர்.
தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.
பின்னர் அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனையடுத்து 107 கிலோ எடை கொண்ட கேக் அங்கு தயார் செய்யப்பட்டிருந்தது. அதனை எடப்பாடி பழனிசாமி வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் மகளிர்களுக்கு சேலை வழங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, பா.பென்ஜமின், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், நா.பால கங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆதிராஜாராம், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன்,
சிறுபான்மை பிரிவு சேவியர், சிவராஜ், இலக்கிய அணி செயலாளர் இ.சி.சேகர், மாவட்ட துணை செயலாளர் வளசை டில்லி, பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், டாக்டர் சுனில், வடபழனி சத்தியநாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வேளச்சேரி மூர்த்திவேல் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெருக்களிலும், மக்கள் சந்திக்கும் இடங்களிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர். சினிமா பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தன.
- தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.
- வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 10 காட்டு யானைகளில் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.
இந்த யானைகள் நேராக டபுள் ரோடு அருகே உள்ள மயான பகுதிக்குள் சென்று அங்குள்ள குழி மேடுகளை துவம்சம் செய்து மயான பகுதி முழுவதையும் சேதப்படுத்தியது.
தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த யானை கூட்டம், அங்கிருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.
- தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.
- சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.
சென்னிமலை:
தை மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் திருவிழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தைத்திருநாள் விழாவிற்கு பல பெயர்கள் இருந்தாலும் தைப் பொங்கல் என கூறி கிராமத்தில் இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புது துணி எடுப்பதில் ஆரம்பித்து வீடுகளை வெள்ளையடிப்பது, காப்பு கட்டுவது என விழா களைகட்ட தொடங்கி விடும்.
நூற்றாண்டுகளாக தமிழர்களின் பண்பாட்டினையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் பாறை சாட்டும் விதமாக இது நடந்து வருகிறது. இந்த தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.
குறிப்பாக சென்னிமலை பகுதியில் தை பொங்கல் விழா பெண்கள் திருவிழாவாக தான் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு தை 2-ம் நாள் நடக்கும் பூப்பறிக்கும் விழா நூற்றாண்டுகள் கடந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறிக்கின்றனர். சென்னிமலை சுற்று வட்டாரத்தை பொறுத்த வரை தை 2-ம் நாள் தான் பொங்கல் விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை முன்னிட்டு சென்னிமலை பகுதியில் நேற்று பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டது.
சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள் சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நேற்று 50-க்கும் குறைவான பெண்கள் தான் கலந்து கொண்டனர். சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.
ஆனால், கிராம பகுதிகளில் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோயில் பகுதியிலும் தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் திண்பண்ட ங்களை உண்டு மகிழ்ந்து அப்பகுதியில் பூத்துக்குழுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வரும் போது இளம் பெண்கள் தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில் பாட்டு பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.
பின்பு மாலை வீடு திரும்பி வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். பல நூற்றாண்டு பழமையான விழா ஆனாலும் இன்று கிராம பகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் படித்து பல்வேறு துறைகளில் வேறு ஊர்களில் பணியாற்றினாலும் இந்த பெண்கள் இன்றும் இந்த பூப்பறிக்கும் விழாவினை பழமை மாறாமல் சிறப்பாக கொண்டாடினர்.
ஆனால் சென்னிமலை நகர பகுதியில் பூப்பறிக்கும் விழா இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்பட்டது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- கிராமுக்கு 60 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.40-க்கும் பார் வெள்ளி ரூ.77,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5810-க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 60 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.40-க்கும் பார் வெள்ளி ரூ.77,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.
- அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.
சேலம்:
சேலம் குரும்பப்பட்டியில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்வையிட்டு செல்கிறார்கள்.
மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வருவார்கள். சிறியவர்களுக்கு கட்டணமாக 10 ரூபாயும், பெரியவர்களுக்கு கட்டணமாக 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.
காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றி பார்த்ததுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள் மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணை பூங்காவுக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.
பின்னர் சமைத்து எடுத்து வந்த உணவை குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வழக்கமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.
தொடர்ந்து அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வ ராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கடைகளிலும் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு திரண்டதால் கூட்டம் அலை மோதியது.
- பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
- சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர்.
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் சத்திரம் தெரு மெயின் ரோட்டில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் வேங்கு கவுண்டர் தெரு, ஆணங்கிணறு தெரு, பைபாஸ் ரோடு சந்தை வீதி, செவத்தம்பட்டி முகமதியர் தெரு என பல்வேறு பகுதியில் இருந்து 150- க்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் ஆனா சத்திரம் தெரு, மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதியில் காளைகளை அவிழ்த்து விட்டனர்.

சீறிவரும் காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் என திரண்டு வந்து காளைகளை அடக்கினர். இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காய் மேற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர்.
விழாவையொட்டி மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு விழாவை காண மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






