search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    உவரி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டியபோது எடுத்த படம்

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
    • வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திசையன்விளை:

    தமிழகத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி சந்திரசேகரர்-மனோன்மணி அம்மாள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மேளதாளம் முழங்க கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    விழாவில் தேர் கமிட்டி தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் உதய மார்த்தாண்ட அபிஷேகம், விநாயகர் வீதி உலா, இரவு சாய ரட்சை பூஜை, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்மாள் அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில், சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி வீதி உலா நடக்கிறது. மேலும் இரவில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்தவாரியும், மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜையும், உச்சிகால பூஜை, உற்சவர் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 26-ந் தேதி காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார்.

    Next Story
    ×