search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னிமலையில் களையிழந்த பூப்பறிக்கும் திருவிழா
    X

    சென்னிமலையில் களையிழந்த பூப்பறிக்கும் திருவிழா

    • தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.
    • சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    சென்னிமலை:

    தை மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் திருவிழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தைத்திருநாள் விழாவிற்கு பல பெயர்கள் இருந்தாலும் தைப் பொங்கல் என கூறி கிராமத்தில் இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புது துணி எடுப்பதில் ஆரம்பித்து வீடுகளை வெள்ளையடிப்பது, காப்பு கட்டுவது என விழா களைகட்ட தொடங்கி விடும்.

    நூற்றாண்டுகளாக தமிழர்களின் பண்பாட்டினையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் பாறை சாட்டும் விதமாக இது நடந்து வருகிறது. இந்த தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.

    குறிப்பாக சென்னிமலை பகுதியில் தை பொங்கல் விழா பெண்கள் திருவிழாவாக தான் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு தை 2-ம் நாள் நடக்கும் பூப்பறிக்கும் விழா நூற்றாண்டுகள் கடந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறிக்கின்றனர். சென்னிமலை சுற்று வட்டாரத்தை பொறுத்த வரை தை 2-ம் நாள் தான் பொங்கல் விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை முன்னிட்டு சென்னிமலை பகுதியில் நேற்று பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள் சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நேற்று 50-க்கும் குறைவான பெண்கள் தான் கலந்து கொண்டனர். சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    ஆனால், கிராம பகுதிகளில் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோயில் பகுதியிலும் தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் திண்பண்ட ங்களை உண்டு மகிழ்ந்து அப்பகுதியில் பூத்துக்குழுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வரும் போது இளம் பெண்கள் தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில் பாட்டு பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.

    பின்பு மாலை வீடு திரும்பி வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். பல நூற்றாண்டு பழமையான விழா ஆனாலும் இன்று கிராம பகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் படித்து பல்வேறு துறைகளில் வேறு ஊர்களில் பணியாற்றினாலும் இந்த பெண்கள் இன்றும் இந்த பூப்பறிக்கும் விழாவினை பழமை மாறாமல் சிறப்பாக கொண்டாடினர்.

    ஆனால் சென்னிமலை நகர பகுதியில் பூப்பறிக்கும் விழா இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    Next Story
    ×