என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
- பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் புறப்பட்டு சென்றனர். பஸ், ரெயில்கள், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு போனதால் 3 நாட்களாக சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பண்டிகை முடிந்து இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப பயணத்தை தொடங்கிவிட்டனர். கார், இருசக்கர வாகனங்களில் காலையில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள்.
பகல் நேர ரெயில்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்து இரவுக்குள் வீடு வந்து சேர திட்டமிட்டு உள்ளனர். அரசு பஸ், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மாலையில் புறப்பட்டு காலையில் வந்து சேரும் வகையில் பயணத்தை தொடங்குகின்றனர்.
இதற்காக பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஓசூர், பெங்களூர், கோவை, சேலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளன.
வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பஸ்கள் மற்றும் 2000 சிறப்பு பஸ்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.
அதேபோல 1800 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரம் பஸ்கள் இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் அதிகாலையில் இருந்து சென்னைக்கு வரத் தொடங்கும். அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு பஸ்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆம்னி பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

நாளை (18-ந்தேதி) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் இன்று இரவுக்குள் சென்னைக்கு திரும்புகிறார்கள். இதனால் வந்தே பாரத், துரந்தோ, உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இடங்கள் நிரம்பியதால் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கோவை, பெங்களூர், மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களிலும் இடம் இல்லாததால் மக்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், கார்கள் போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கின்றனர்.
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையப் பகுதி, பெருங்களத்தூர், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை அனைத்து அரசு அலுவல் பணிகளும் தொடங்குவதால் விடுமுறையில் சென்றவர்கள் பயணம் செய்தனர். ஒரு சிலர் மேலும் 2 நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு அதாவது 18, 19 விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர் விடுமுறையிலும் இருக்கிறார்கள்.
சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று பயணம் மேற்கொள்வதால் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களை விரைவாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
- மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே காலை 7 மணியளவில் நடைபெறும் சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
இந்த சுடர் தொடர் ஓட்டம் அண்ணாசாலை, பிலால் ஓட்டல், ஸ்பென்சர் சிக்னல், ஆயிரம் விளக்கு மெட்ரோ, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா மேம்பாலம் அமெரிக்க தூதரகம், அண்ணா அறிவாலயம், அன்பகம் சைதாப்பேட்டை, நந்தனம் கலைக் கல்லூரி, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர் மெட்ரோ, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சிங்க பெருமாள் கோவில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல் மருவத்தூர், அச்சரப்பாக்கம், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல் ஆத்தூர் வழியாக பெத்த நாயக்கன் பாளையத்துக்கு 20-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது.
சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைப்பார்கள்.
மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மாநாட்டு சுடர் தொடர் ஓட்டத்தில் பங்கு பெற்று சுடர் ஏந்தி செல்ல மாவட்ட மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
- கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
- மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கல் அன்று இங்கு பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நடைபெறும். இந்தாண்டு கோபலாபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61-வது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று காலை 250 பெண்கள் பால் குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கோபாலபுரம், செங்கப்படை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.
இதில் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து நாட்டாண்மை வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர். பல பெண்கள் சாமியாடினர்.
மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளரும், கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவில் நிர்வாகியுமான ராமமூர்த்தி கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் முனியாண்டி சாமி கோவில் திருவிழாவில் பங்கேற்போம்.
நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்தி அசைவ அன்னதானம் நடைபெறும். எங்கள் ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவோம். எங்கள் தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறோம் என்றார்.
- ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற அரசியல் கட்சியுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுவது தவறு இல்லை.
- விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிர்ப்பான திட்டத்தை மத்திய அரசு திணிக்க கடந்த காலங்களில் செயல்பட்டனர்.
கடலூர்:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் நானும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அரசியலில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்து தற்போது செயல்பட்டு வருகின்றோம்.
ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற அரசியல் கட்சியுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுவது தவறு இல்லை. தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.

விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிர்ப்பான திட்டத்தை மத்திய அரசு திணிக்க கடந்த காலங்களில் செயல்பட்டனர். ஸ்டெர்லைட் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற மக்களுக்கு எதிர்ப்பான திட்டங்களை செயல் படுத்தும் நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு மாறுபட்டதால் தற்போது எதிர்ப்பு காட்ட வில்லை.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் காவி ஆடை அணிந்த திருவள்ளுவர் படத்தை தமிழக கவர்னர் வெளியிட்டதை பார்த்தால் அவர் போல் செயல்படவில்லை. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை திரும்ப பெற வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
- கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம்.
சென்னை:
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்.
"தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...
கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம் என கூறியுள்ளார்.
ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 17, 2024
"தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என @nsitharaman
கூறுகிறார்.
உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...
கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம்.#jallikattu… pic.twitter.com/BFbrA3HtcY
- கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
- பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூஜைகள் இப்போது நடைபெற்று வருகிறது. ஆகமவிதி பூஜையான 'அனுஷ்தான்' எனப்படும் சிறப்பு பூஜைகள் கும்பாபிஷேக நாளான 22-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
நாசிக் நகரில் புனித காலாராம் கோவிலில் 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய அவர் இந்தியாவில் உள்ள ராமர் தொடர்புடைய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
நேற்று ஆந்திர மாநிலம் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இன்று கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

இதேபோல் ஒவ்வொரு முக்கிய வைணவ தலங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிலும் 3 நாட்கள் இருந்து வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் வருகிற 19-ந் தேதி மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பை பெற்றுக் கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் தளத்துக்கு வந்திறங்குகிறார்.
பின்னர் கார் மூலம் நேரு ஸ்டேடியம் சென்று 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள், 1,600 பயிற்சியாளர்கள், 1000 நடுவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு வகை போட்டிகளும் இதில் இடம் பெறுகிறது.
நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
விழா நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். அங்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசுகின்றனர்.
அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டின் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது குறித்து இதில் பேசப்படும் என தெரிகிறது.
மறுநாள் (20-ந்தேதி) காலை பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் செல்கிறார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து காலை 9.25 மணிக்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்கிறார். பின்னர் கார் மூலம் பகல் 11 மணியளவில் ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்.
அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் 11 மணி முதல் 12.40 மணி வரை இருக்கிறார். சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ராமேசுவரம் புறப்படுகிறார்.
ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2.10 மணிக்கு ராமேசுவரம் செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன் பிறகு கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார்.
அன்று இரவு ராமேசுவரத்தில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.
மறுநாள் (21-ந்தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார்.
அதன் பிறகு கார் மூலம் அரிச்சல் முனை பகுதிக்கு செல்கிறார். 10.25 மணியளவில் அங்குள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பூஜையிலும் பங்கேற்கிறார். காலை 11.25 மணி வரை கோவிலில் இருக்கிறார்.
பின்னர் கடலில் புனித தீர்த்தங்களை சேகரிக்கிறார். அந்த புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்து பின்பு மதியம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் மத்திய-மாநில அரசின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் லோவ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர், நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி. உள்பட போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேசுவரத்திலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
- மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
- கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.
சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
முன்னதாக, பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.
இந்த நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காளை முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் மஞ்சு விரட்டில் 75 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வலையபட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன.
- சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.
இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்! என கூறியுள்ளார்.
#StartUp தரவரிசைப் பட்டியலில்,
— M.K.Stalin (@mkstalin) January 17, 2024
கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு,
நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad… https://t.co/hNapJChxvR
- பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
- காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பவானி:
பவானி அருகில் உள்ள காளிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைகட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டில் இருந்து பவானி ஆற்றின் இருந்து வெளியேறும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
காலிங்கராயன் என்ற சிற்றரசரின் மூலம் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு பொதுமக்களால் கொண்டாடப்படும் கரிநாள் மற்றும் காணும் பொங்கல் அன்று பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
இந்த அணைக்கட்டு பகுதியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் துவக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனுக்காக பொதுமக்கள் யாரும் அணைகட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனுமதி கிடைக்கும் என காத்திருந்த பொது மக்களுக்கு 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் பாதுகாப்பு நலன் கருதி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சித்தோடு போலீசார் தெரிவித்துள்ளனர். காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
- திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.
- பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் மாதனூர் அடுத்த கீழ்மிட்டாளம் அ.தி.மு.க. கிளை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை வைத்திருந்தனர்.
இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட அ.தி.மு.க.வினர் வந்தனர். சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதைக்கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அ.தி.மு.க.வினர் நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது எம்.ஜி.ஆர். படத்தை ஒட்டினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினர்.
- ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்களான ஊட்டி, வால்பாறை பகுதிகளுக்கு அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 தினங்களாக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, லேம்ஸ்ராக் அணை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலைசிகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து மலர்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.
தங்கள் குழந்தைகளுடன் புல்வெளியில் ஆடி, பாடி, விளையாடியும் விடுமுறையை கொண்டாடினர்.

ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின. அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.






