என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கிராம நிர்வாக அலுவலர் கூறினார்.
- அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ளது அம்மனேரி. இங்கு மண்டு மாரியம்மன் கோவில் அருகில் அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெறுவதாக தகவல் அறிந்து கூலியம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அங்கு சென்றார். அவர் மாவட்ட நிர்வாக அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தக்கூடாது என கூறினார்.
அந்த நேரம் அங்கிருந்தவர்கள் எருது விடும் விழாவை நிறுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அதே ஊரை சேர்ந்த முனிராஜ் (39), உள்பட மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பபிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி சீறிவரும் காளைகளை மல்லுக்கட்டி மடக்கும் காளையர்கள் கூட்டமும் ஆர்ப்பரித்து வருகிறது.
போட்டியில் ஜெயிக்கும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளை வரிசைப்படுத்துவதிலும், அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் மீது திடீரென ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாய்ந்தது. இதில் நிலை குலைந்துபோன போலீஸ்காரர் மைதானத்துக்குள் கீழே விழ... காளையும் அவரை நோக்கி முன்னேறி முட்டியது. இதில் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ குழுவினரிடம் அழைத்துச் சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். ஜல்லிக்கட்டு மைதானத்துக்குள் காளை முட்டியதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதியம் வரை 2 போலீஸ்காரர்கள் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.
- ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
- ஆயி அம்மாளுக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தோம்.
சென்னை:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம்.
ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும் என கூறியுள்ளார்.
அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
— Udhay (@Udhaystalin) January 17, 2024
மறைந்த… pic.twitter.com/E990obibTz
- மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
- காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை 11 மணியில் இருந்தே பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.

அவர்கள் கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து பொழுதை போக்கினார்கள். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் மெரினா கடற்கரை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்தனர்.

மெரினாவில் இன்று கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்றுபோலீசார் கண்காணித்தனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியையும் கண்டுகளித்தனர். அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். தனியார் அரங்குகளையும் சுற்றிப்பார்த்தனர். மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் உண்டனர்.
மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரம் நகருக்குள் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் 3 கி.மீ தூரம் நடந்து சென்றே புராதன சின்னங்களை பார்க்க வேண்டியது இருப்பதால், அனுமதி பெற்ற உள்ளூர் ஆட்டோக்கள் சிலவற்றை நகருக்குள் இயக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர், போதை ஆசாமிகளை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 37 ஆயிரம் பேர் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர். சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், மனித குரங்கு, ஒட்டகச்ச்சிவிங்கி, குதிரைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை பார்த்தனர். உயிரியல் பூங்காவில் புதிதாக வந்துள்ள உயிரினங்களான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருத்து கொண்டு வரப்பட்ட இமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.
காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். பழவேற்காட்டில் டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை கண்டு கழித்தனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சமைத்து கொண்டு வந்த உணவுகளை கடற்கரையில் அமர்ந்து உண்டனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பழவேற்காடு கடலில் குளிப்பதற்கும், படகு சவாரிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
ஜெயங்கொண்டம்:
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.
ஜெயங்கொண்டம் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக அவர்கள் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு சந்திப்பில் திரண்டனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் கருப்பு கொடி காட்ட திரண்டிருப்பது, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார்.
- பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து, களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், ஒரே ஜல்லிக்கட்டில் அதிக எண்ணிக்கையிலான காளைகள் (2,000) கலந்துகொண்ட மாவட்டமாகவும், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் அமைந்துள்ள மாயன் பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று வன்னியர் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதே போல் 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் காளையை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. வீரர்களும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன், மோட்டார் சைக்கிள், கட்டில், பீரோ, எவர் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கினார்.
காயமடைந்த வீரர்களுக்கு மருத்து உதவி செய்ய மருத்துவகுழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
- கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
புதுக்கோட்டை:
தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் அவ்வபோது தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அவர்களை வழிமறித்தனர்.
பின்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து 18 மீனவர்களிடமும் நடுக்கடலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின்னர் கைதான 18 மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து மீனவர்கள் 18 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். கடந்த ஒரு வாரத்தில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணா மூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.
இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப் பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
போட்டியில 650 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் தட்சிணா மூர்த்தி மேற்பார்வையில் வருவாய்துறையினர். பொதுப்பணித்துறையினர், கால்நடை மருத்து வக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். இதே போல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
- கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
- பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 16 ரூபாயும் என்ற அளவில் அந்த வரி குறைப்பு இருந்தது.
இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இருந்து தப்பின. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தவில்லை.
கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-2024-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்து இருக்கிறது.
இதுபற்றி தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன. கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்து இருக்கிறது.
இதையடுத்து தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த மாத இறுதியில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும். இதுபற்றி விவரங்கள் இந்த மாத இறுதியில் தெரிய வரும்.
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கருதுகிறது.
- சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
- பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் புறப்பட்டு சென்றனர். பஸ், ரெயில்கள், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு போனதால் 3 நாட்களாக சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பண்டிகை முடிந்து இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப பயணத்தை தொடங்கிவிட்டனர். கார், இருசக்கர வாகனங்களில் காலையில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள்.
பகல் நேர ரெயில்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்து இரவுக்குள் வீடு வந்து சேர திட்டமிட்டு உள்ளனர். அரசு பஸ், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மாலையில் புறப்பட்டு காலையில் வந்து சேரும் வகையில் பயணத்தை தொடங்குகின்றனர்.
இதற்காக பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஓசூர், பெங்களூர், கோவை, சேலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளன.
வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பஸ்கள் மற்றும் 2000 சிறப்பு பஸ்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.
அதேபோல 1800 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரம் பஸ்கள் இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் அதிகாலையில் இருந்து சென்னைக்கு வரத் தொடங்கும். அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு பஸ்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆம்னி பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

நாளை (18-ந்தேதி) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் இன்று இரவுக்குள் சென்னைக்கு திரும்புகிறார்கள். இதனால் வந்தே பாரத், துரந்தோ, உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இடங்கள் நிரம்பியதால் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கோவை, பெங்களூர், மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களிலும் இடம் இல்லாததால் மக்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், கார்கள் போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கின்றனர்.
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையப் பகுதி, பெருங்களத்தூர், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை அனைத்து அரசு அலுவல் பணிகளும் தொடங்குவதால் விடுமுறையில் சென்றவர்கள் பயணம் செய்தனர். ஒரு சிலர் மேலும் 2 நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு அதாவது 18, 19 விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர் விடுமுறையிலும் இருக்கிறார்கள்.
சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று பயணம் மேற்கொள்வதால் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களை விரைவாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
- மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே காலை 7 மணியளவில் நடைபெறும் சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
இந்த சுடர் தொடர் ஓட்டம் அண்ணாசாலை, பிலால் ஓட்டல், ஸ்பென்சர் சிக்னல், ஆயிரம் விளக்கு மெட்ரோ, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா மேம்பாலம் அமெரிக்க தூதரகம், அண்ணா அறிவாலயம், அன்பகம் சைதாப்பேட்டை, நந்தனம் கலைக் கல்லூரி, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர் மெட்ரோ, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சிங்க பெருமாள் கோவில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல் மருவத்தூர், அச்சரப்பாக்கம், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல் ஆத்தூர் வழியாக பெத்த நாயக்கன் பாளையத்துக்கு 20-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது.
சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைப்பார்கள்.
மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மாநாட்டு சுடர் தொடர் ஓட்டத்தில் பங்கு பெற்று சுடர் ஏந்தி செல்ல மாவட்ட மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
- கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
- மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கல் அன்று இங்கு பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நடைபெறும். இந்தாண்டு கோபலாபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61-வது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று காலை 250 பெண்கள் பால் குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கோபாலபுரம், செங்கப்படை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.
இதில் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து நாட்டாண்மை வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர். பல பெண்கள் சாமியாடினர்.
மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளரும், கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவில் நிர்வாகியுமான ராமமூர்த்தி கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் முனியாண்டி சாமி கோவில் திருவிழாவில் பங்கேற்போம்.
நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்தி அசைவ அன்னதானம் நடைபெறும். எங்கள் ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவோம். எங்கள் தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறோம் என்றார்.






