என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும்.
    • தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம்.

    ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது

    உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
    • தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

    முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். 

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 810 காளைகள் பங்கேற்றன.
    • ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு.

    உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

    இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது.

    மொத்தம் 810 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    அமைச்சர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி எஞ்சிய காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

    18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இரண்டாம் பரிசு பெற்றார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது.

    சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது முதல் பரிசு பெறும் கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டிலும் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டனர்.
    • வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

    கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வரும் 24ம் தேதி நிறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

    புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

    வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன்.

    தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
    • நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழர் திருநாளான பொங்கல் வந்துவிட்டாலே கிராமங்கள் களை கட்ட தொடங்கிவிடும். 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் பல்வேறு நூதன போட்டிகள் நடத்தி கிராம மக்கள் அசத்துவது வழக்கம்.

    மாடுகளை பிடிக்கும் வீர விளயாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு நூதன போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வார்கள். இந்த மோதலில் உடையும் தேங்காயை, மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் விளையாட்டு திடலில் போர் தேங்காய் உடைக்கும் விளையாட்டு போட்டி நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து முன்பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர்.

    தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் வைத்து மோதி உடைத்தனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். போர் தேங்காய் பரிசுப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாவடுகுறிச்சி முத்துக்குமார் அதிக தேங்காய்களை உடைத்து முதல் பரிசு ரூ.4004 மற்றும் சுழற்கோப்பை பெற்றார்.

    இதேபோல செரியலூரில் நேற்று நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், இது எங்களின் சந்தோசத்துக்காக நடத்தப்படும் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்க போர்காய் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம் என்றனர்.


    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகை மலை ஊராட்சி, கள்ளை தொட்டியப்பட்டியில் கம்பளத்து நாயக்கர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடாந்தோறும் தை மாதம் 1-ந்தேதி கள்ளையில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக ஊர் கவுண்டர் முன்னிலையில் பரிவட்டம் வாங்கி எட்டுப்பட்டி பொதுமக்கள் முன்பாக மாரியம்மன் கோவிலை வலம் வந்து சுற்றி மாடுகளை விரட்டி மறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய கலையான தேவராட்டம், புல்லாங்குழல் வாசித்தல், கோமாளி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது,

    விழாவில் கல்லை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாடு மறித்தல் நிகழ்ச்சியில் 70 களை மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கண்டுகளித்தனர்.

    • கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார்.
    • சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 41).

    இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் திருவாளி முத்து(14) என்ற மகனும், அனிதா(13) என்ற மகளும் உள்ளனர். அனிதா அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார். இதையடுத்து மானூர் போலீசார் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குளத்தில் அதிக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் அதிக அளவு வெளியேறி சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மணல் மூட்டைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக அனிதாவின் உறவினர்கள் பள்ளமடை கிராமத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மானூர் தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
    • பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

    அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 1000 பெண்கள் கலந்து கொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். நொய்யல் நதிக்கரை யோரம் அடுப்புகளை பற்ற வைத்து பொங்கலிட்டனர். பால் பொங்கும் போது குலவையிட்டனர்.


    இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான நொண்டி, பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.

    மேலும் கேரம், செஸ், கைகளில் மெகந்தி வரைதல் , சலங்கையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நொய்யல் பகுதியானது பொதுமக்களின் ஆட்டம் பாட்டத்தால் களை கட்டியது. சமத்துவ பொங்கல் தொடக்க விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர்.

    • ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்களான நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியேற்றினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான முருக்கோடை ராமர், நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் நீங்கள் எப்படி கொடியேற்றலாம்? நீங்கள் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டக்கூடாது, கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அவர்களுடன் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    • கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார்.

    நெல்லை:

    பொங்கலையொட்டி நெல்லை மாநகர பகுதியில் சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் ரோந்து சென்றனர்.

    அப்போது தச்சநல்லூர் பாலபாக்யா நகர் பகுதியில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதை அறிந்த உதவி கமிஷனர், அதனை பின் தொடருமாறு ஜீப் டிரைவரான ஏட்டு சரவண பிரகாஷிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கும்பலை பின்னால் மோட்டார் சைக்கிளில் ரோந்து வந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணணும் பின்தொடர்ந்துள்ளார்.

    போலீசார் பின் தொடர்வதை அறிந்த அந்த கும்பலை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் போலீசார் 2 பேரையும் இரும்பு கம்பி மற்றும் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. அந்த கும்பலை பிடிக்க கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேரில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக தெரிந்தது. அந்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.

    அந்த புகைப்படங்களை தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அனுப்பி வைத்து தேடி வந்தனர். தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடி 2-ம் கேட் சத்திரம் தெருவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக்கில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற நிலையில் அந்த கடையில் நேற்று அதிகாலை கடை முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இதில் 5 பேர் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று இரவு வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 5 வடமாநில வாலிபர்களை பிடிக்க முயன்றபோது அந்த கும்பல் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றது.

    உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து பிடிபட்டவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராய்சிங்(வயது 30) என்பதும், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த டாஸ்மாக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே நெல்லை சந்திப்பு போலீசாரை தாக்கிவிட்டு சென்றதாக நெல்லை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட 3 பேர் கும்பலின் புகைப் படங்களை தூத்துக்குடி போலீசார் பார்த்தபோது அதில் ஒருவரின் புகைப்படம், டாஸ்மாக் கொள்ளையில் வடபாகம் போலீசார் கைது செய்த ராய்சிங்கின் புகைப்படமாக இருந்தது.

    அவர்கள் நெல்லை மாநகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கைதான ராய்சிங் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நான் நெல்லைக்கு வந்தேன். என்னை எனது நண்பர் பரத் அழைத்து வந்தார்.

    தமிழகத்தில் ஏராளமான இடங்களில் கொள்ளையடிக்கலாம். அதனை வைத்து சொகுசாக வாழலாம் என்று கூறி அழைத்து வந்தார். இதையடுத்து நாங்கள் நேற்று முன்தினம் ரெயிலில் நெல்லை வந்துவிட்டு அங்கிருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சந்திப்பு போலீசார் எங்களை பிடிக்க முயன்றதால் அவர்களை தாக்கிவிட்டு தூத்துக்குடிக்கு வந்துவிட்டோம்.

    பின்னர் இங்குள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த நிலையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்றார். இதையடுத்து அவரிடம் சக கூட்டாளிகள் யார்? யார் ? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மற்ற 4 பேர் சென்னைக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    • பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேசிய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் நடப்பு உலகச் சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இளம் வயதிலேயே சதுரங்க உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி அதில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா அவர்கள், உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
    • விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் பாபநாசத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

    பின்னர் நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர். காரை ரமேஷ் ஓட்டி வந்துள்ளார்.

    பாபநாசத்தை அடுத்த வடமலை சமுத்திரம் பகுதியில் இருந்து கருத்தப்பிள்ளையூர் கிராமம் வழியாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது.

    தொடர்ந்து அந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராத அந்த கார் அடுத்ததாக இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.
    • மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா தளமானது குற்றாலம்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

    தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையை கழிக்க வெளியூர் மட்டும் தென்காசி சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.

    மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தற்போது குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் குடும்பமாக வந்து உற்சாக குவிந்து வருகின்றனர். மேலும் குற்றாலம் பேரூராட்சி பூங்கா, குண்டார் அணை, அடவி நயினார் அணை பகுதி, பண்பொழி குமாரசாமி கோவில், தோரணமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    ×