search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய வடமாநில கொள்ளையன் கைது
    X

    டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய வடமாநில கொள்ளையன் கைது

    • கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார்.

    நெல்லை:

    பொங்கலையொட்டி நெல்லை மாநகர பகுதியில் சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் ரோந்து சென்றனர்.

    அப்போது தச்சநல்லூர் பாலபாக்யா நகர் பகுதியில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதை அறிந்த உதவி கமிஷனர், அதனை பின் தொடருமாறு ஜீப் டிரைவரான ஏட்டு சரவண பிரகாஷிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கும்பலை பின்னால் மோட்டார் சைக்கிளில் ரோந்து வந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணணும் பின்தொடர்ந்துள்ளார்.

    போலீசார் பின் தொடர்வதை அறிந்த அந்த கும்பலை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் போலீசார் 2 பேரையும் இரும்பு கம்பி மற்றும் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. அந்த கும்பலை பிடிக்க கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேரில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக தெரிந்தது. அந்த கும்பல் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதை போலீசார் அறிந்தனர்.

    அந்த புகைப்படங்களை தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அனுப்பி வைத்து தேடி வந்தனர். தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தூத்துக்குடி 2-ம் கேட் சத்திரம் தெருவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக்கில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற நிலையில் அந்த கடையில் நேற்று அதிகாலை கடை முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இதில் 5 பேர் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று இரவு வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 5 வடமாநில வாலிபர்களை பிடிக்க முயன்றபோது அந்த கும்பல் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றது.

    உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து பிடிபட்டவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராய்சிங்(வயது 30) என்பதும், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த டாஸ்மாக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே நெல்லை சந்திப்பு போலீசாரை தாக்கிவிட்டு சென்றதாக நெல்லை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட 3 பேர் கும்பலின் புகைப் படங்களை தூத்துக்குடி போலீசார் பார்த்தபோது அதில் ஒருவரின் புகைப்படம், டாஸ்மாக் கொள்ளையில் வடபாகம் போலீசார் கைது செய்த ராய்சிங்கின் புகைப்படமாக இருந்தது.

    அவர்கள் நெல்லை மாநகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் கைதான ராய்சிங் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நான் நெல்லைக்கு வந்தேன். என்னை எனது நண்பர் பரத் அழைத்து வந்தார்.

    தமிழகத்தில் ஏராளமான இடங்களில் கொள்ளையடிக்கலாம். அதனை வைத்து சொகுசாக வாழலாம் என்று கூறி அழைத்து வந்தார். இதையடுத்து நாங்கள் நேற்று முன்தினம் ரெயிலில் நெல்லை வந்துவிட்டு அங்கிருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சந்திப்பு போலீசார் எங்களை பிடிக்க முயன்றதால் அவர்களை தாக்கிவிட்டு தூத்துக்குடிக்கு வந்துவிட்டோம்.

    பின்னர் இங்குள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த நிலையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்றார். இதையடுத்து அவரிடம் சக கூட்டாளிகள் யார்? யார் ? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மற்ற 4 பேர் சென்னைக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    Next Story
    ×