search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு
    X

    வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்பு

    • ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார்.
    • பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து, களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தின் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், ஒரே ஜல்லிக்கட்டில் அதிக எண்ணிக்கையிலான காளைகள் (2,000) கலந்துகொண்ட மாவட்டமாகவும், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் அமைந்துள்ள மாயன் பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று வன்னியர் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதே போல் 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் காளையை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. வீரர்களும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன், மோட்டார் சைக்கிள், கட்டில், பீரோ, எவர் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கினார்.

    காயமடைந்த வீரர்களுக்கு மருத்து உதவி செய்ய மருத்துவகுழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

    ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Next Story
    ×