search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்
    X

    கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்

    • மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
    • காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரைக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை 11 மணியில் இருந்தே பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.


    அவர்கள் கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து பொழுதை போக்கினார்கள். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

    மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் மெரினா கடற்கரை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்தனர்.


    மெரினாவில் இன்று கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்றுபோலீசார் கண்காணித்தனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியையும் கண்டுகளித்தனர். அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். தனியார் அரங்குகளையும் சுற்றிப்பார்த்தனர். மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் உண்டனர்.

    மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரம் நகருக்குள் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் 3 கி.மீ தூரம் நடந்து சென்றே புராதன சின்னங்களை பார்க்க வேண்டியது இருப்பதால், அனுமதி பெற்ற உள்ளூர் ஆட்டோக்கள் சிலவற்றை நகருக்குள் இயக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர், போதை ஆசாமிகளை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 37 ஆயிரம் பேர் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துள்ளனர்.

    இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர். சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், மனித குரங்கு, ஒட்டகச்ச்சிவிங்கி, குதிரைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை பார்த்தனர். உயிரியல் பூங்காவில் புதிதாக வந்துள்ள உயிரினங்களான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருத்து கொண்டு வரப்பட்ட இமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.

    காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். பழவேற்காட்டில் டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை கண்டு கழித்தனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சமைத்து கொண்டு வந்த உணவுகளை கடற்கரையில் அமர்ந்து உண்டனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பழவேற்காடு கடலில் குளிப்பதற்கும், படகு சவாரிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×