என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது.
    • புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது.

    வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளுதலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது.

    புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று ஆண் புலி உயிரிழந்துள்ளது.

    • தமிழக அரசு 2022ம் ஆண்டு அக்டோபரில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
    • விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ மேல் விசாரணை நடத்தி வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இந்த வழக்கில், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு மனுதாரர் தடை விதிக்க வேண்டும் எனவும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

    அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    • விருதுநகர் அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் இறந்தனர்.
    • வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், வெடி விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை
    • பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    பட்டியல் பிரிவைச் சேர்ந்த பாஞ்சாலை என்கிற மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்டதால் அடுத்த பேருந்து நிலையம் வரை நடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை

    இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட கொள்கை வெளியீடு.
    • சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப்பகிர்வை பற்றி எடுத்துரைக்கும்.

    மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்தும்.

    பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக மகளிர் கொள்கை 2024 .

    சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப்பகிர்வை பற்றி எடுத்துரைக்கும் மகளிர் கொள்கை 2024.

    • 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்ததை நினைவு கூறும் விதமாக கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன.

    இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26- ந் தேதி திறந்து வைக்கிறார்.

    • ஏற்காடு டவுண் பகுதியில் குடிநீர் தட்டுபாடு அதிகமாக உள்ளது.
    • காபி செடிகளுக்கு இடையே காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தும் வருகிறது.

    ஏற்காடு:

    ஏற்காட்டிற்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ஏரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளது.

    இங்குள்ள மலை பகுதியில் வானுயுர்ந்த மரங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் காபி, ஆரஞ்சு, மிளகு, அத்தி பழம், ஆட்டுக்கால் கிழங்கு, மலை வாழை உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது.

    குறிப்பாக ஏற்காடு தட்டவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதால் இங்கு காட்டெருமைகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. இந்த காட்டெருமைகள் சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து காட்டெருமை 2 பேரை தாக்கியது.

    இந்நிலையில் தற்போது இரவு நேரங்களில் அதிக பனிபொழிவும் பகல் நேரங்களில் அதிக வெயிலும் காணப்படுகிறது. மேலும் கோடைகாலத்திற்கு முன்பாகவே ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

    மேலும் ஏற்காடு டவுண் பகுதியில் குடிநீர் தட்டுபாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் குடிருப்பு பகுதிகளில் படையெடுக்க தொடங்கியுள்ளது. காபி தோட்டங்களில் காபி செடிகளுக்கு இடையே காட்டெருமைகள் புகுந்து செடிகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்தும் வருகிறது. இதனல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • த.மா.கா.வுக்கு மீண்டும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும் படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
    • அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம்.

    சென்னை:

    ஜி.கே.மூப்பனார் கடந்த 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இதையொட்டி அவரது கட்சிக்கு கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னமே ஒதுக்கப்பட்டது.

    மூப்பனார் மறைவுக்கு பிறகு ஜி.வா.வாசன் த.மா.கா.வை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன்பிறகு அவர் 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா.வை தொடங்கினார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி த.மா.கா.வுக்கு மீண்டும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும் படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார். ஆனால் இதுவரை த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

    இதையடுத்து த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ஜி.கே.வாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கு மனுவில், 'வருகிற பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். அடுத்த 4 வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், என்னுடைய மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபீக் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

    • ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது.
    • கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவையில் இருந்து நேற்று நீலகிரி மாவட்டம் மஞ்சூர் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அப்போது கோவை- மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் 2 குட்டிகளுடன் வந்திருந்த 3 காட்டுயானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் அந்த பஸ்சில் பயணித்தவர்கள் அச்சத்தில் அலறினர். மேலும் கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்த தகவலின்பேரில் குந்தா வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கையடக்க சைரன் மூலம் பெரியஅளவில் ஒலி எழுப்பி, நடுரோட்டில் முகாமிட்டு நின்ற காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சாலையில் முகாமிட்டு நின்ற யானைகள், அடர்ந்த காட்டுக்கு திரும்ப தொடங்கின.

    இதற்கிடையே ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக தங்களின் வாகனங்களை பின்னோக்கி இயக்கினர்.

    மேலும் தொடர்ந்து சைரன் ஒலியை எழுப்பி வந்ததால், ஊழியர்களை விரட்டி வந்த காட்டு யானை பின்னர் ஒருவழியாக அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
    • நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி, செக்கடி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஆவன செய்வேன் என உறுதி அளித்தார்.


    கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் மற்றும் திங்கள் நகரில் நடைபெற்றது.

    மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம் தலைமையில் நடந்த இந்த கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள் பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.


    இதனிடையே சவுதி அரேபியாவில் உடல் நல குறைவால் காலமான குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்த சகாய சுபீன் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவரது உடலை விரைவாக கொண்டு வர மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

    • வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    23-ந்தேதி தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    24 மற்றும் 25-ந்தேதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    26 மற்றும் 27-ந்தேதி: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    ×