என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்த குடும்பத்தில் இதுவரை அரசு வேலை சேரவில்லையோ அந்த குடும்பத்திற்கு அரசு வேலை எட்டிப் பார்க்கும்.
    • தி.மு.க.வை போல ஆண்டு தோறும் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்துவதாக பொய் சொல்லி அடிக்கடி நிதியை ஒதுக்க மாட்டோம்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் 100-வது நாளாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்ற 'என் மண், என் மக்கள்' நடை பயணம் நேற்று மாலை நடை பெற்றது. சின்னதாராபுரம் நேரு நகரில் கரூர் மெயின் சாலையில் தொடங்கிய இந்த நடை பயணத்திற்கு வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு கரூர் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதி இணை அமைப்பாளரும், கரூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.வி.எஸ்.செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.பி.யும், மாநில துணைத் தலைவருமான கேபி.ராமலிங்கம், மாநில நிர்வாகி சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழகம், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளையும் வெல்வோம். அரசியலில் நல்ல மனிதர்கள் சேவை செய்வதற்காக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பை இந்த யாத்திரை உருவாக்கியிருக்கிறது.

     

    தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசியலில் இருந்து தமிழகம் வெளியே வரவேண்டும். ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி, தனி மனிதனை போற்றி போற்றி கடவுளாக உயர்த்தி, சாமானிய மக்கள் எல்லாம் அரசியலில் இருந்து ஒதுக்கும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    செந்தில் பாலாஜி 280 நாட்களை தாண்டி சிறைச் சாலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து கொண்டு, அவருக்கு மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் போய்க் கொண்டிருந்தது. அண்மையில்தான் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்.

    அவரது சகோதரர் இன்னும் பிடிபடவில்லை. இது தமிழகத்தினுடைய காவல்துறைக்கு தலைகுனிவா அல்லது ஊழல்வாதிகளுக்கு காவல்துறை ஒத்துழைக்கிறதா என தெரியவில்லை. அரவக் குறிச்சி தொகுதியில் தொழிற் சாலைகள் கிடையாது, தண்ணீர் கிடையாது, நீர் மேலாண்மை கிடையாது.

    மூன்று நதிகள் அருகில் பாய்ந்தும் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. இந்த நிலை பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது மாறும். வளர்ச்சி மட்டுமே தன்னுடைய ஒற்றை குறிக்கோளாக இருந்து ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்.

    மத்தியில் 76 மந்திரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு குண்டூசியை திருடிவிட்டார்கள், மக்களுடைய வரிப்பணத்தை ஒரு ரூபாய் சாப்பிட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதா என்பதை சிந்தித்து பாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்த குடும்பத்தில் இதுவரை அரசு வேலை சேரவில்லையோ அந்த குடும்பத்திற்கு அரசு வேலை எட்டிப் பார்க்கும்.

     

    எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்விக்கொடுப்போம். டாஸ்மாக்கிற்கு தடை விதித்து, கள் விற்பனையை கொண்டுவருவோம். தி.மு.க.வை போல ஆண்டு தோறும் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்துவதாக பொய் சொல்லி அடிக்கடி நிதியை ஒதுக்க மாட்டோம். கமிஷன் அடிப்பதற்கே பட்ஜெட் அவர்கள் போடுகிறார்கள்.

    மேலும் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 நவோதயா பள்ளிகளை கொண்டு வருவோம். இந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரை வைப்போம். காவல் துறையை மறுசீரமைப்போம்.

    2 கட்சிகளும் வேண்டாம் என்கின்ற நிலைப்பாட்டில் பா.ஜ.க. நின்று கொண்டிருக்கிறது. ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 2024-ல் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு, 2026 தேர்தலை முடிவு செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி வேல்முருகன் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர். 

    • தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தீ விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று நேற்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் கற்பகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த கிளீனர் முருகேசன் என்பவர் இருந்தார்.

    லாரி இன்று அதிகாலையில் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதியது.

    இதில் லாரியின் முன்பக்க டயர் ஒன்று ஸ்டிரியங் உடன் துண்டானது மட்டுமின்றி, மோதிய வேகத்தில் டீசல் டேங்க்கும் உடைந்தது. இதனால் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் கற்பகராஜா மற்றும் கிளீனர் முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்த அப்பகுதியினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் நிலக்கரி இருந்ததால் லாரி மட்டுமின்றி அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நிலக்கரியும் எரிந்து சாம்பலானது.

    இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.
    • 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகை:

    தமிழக மீனவர்களின் வலைகளை புதுச்சேரி மீனவர்கள் சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

    30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள், நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

    • குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

    இந்த கடையினால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் மதுகுடித்து விட்டு சிலர் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதாலும், பெண்கள் தனியாக நடந்து கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடம் குற்றம்சாட்டி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிகிறது.

    இந்த நிலையில் சென்னானூர் கிராமத்தில் பூமி பூஜைக்காக கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் வந்தார்.

    அப்போது , குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் எம்.பி.யிடம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறினர்.

    அதன்பின்னர் தங்களது கோரிக்கை மனுவை எம்.பி.யிடம் பொதுமக்கள் கொடுத்தனர். உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக டாக்டர் செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
    • வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
    • பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    8-ம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தொடர்ந்து மேலக்கோவிலில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சைநிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சைநிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. 11-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடை பெற்றது.

    இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்த செல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய் குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண் டார். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ''தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான். கடந்த 70 ஆண்டுகளாக அவர்களிடம் நிறைய வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் குறைவாகவே செய்துஇருக்கிறோம். இன்று செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை நான் மனமார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

    நான் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பதவியை பெற்றபோது மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சியோடு இந்த பதவியை செல்வப் பெருந்தகைக்கு வழங்குகிறேன்'' என்றார். நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. நாட்டை காப்பாற்ற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கிறார். இந்த நாட்டை காக்க முடியும் என்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும். அழகிரியின் பணி பாராட்டுக்குரியது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். 18 எம்.எல்.ஏ.க்கள், 8 எம்.பி.க்களை பெற்றுத்தந்தார்.


    காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கமாட்டார்கள். அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும் ஒருநாள் நடந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் சிவ.ராஜ சேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திரு நாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணி சங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாநில சிறு பான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல் போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகர், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், முத்தழகன், டில்லி பாபு, மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் தலா 3302 மையங்களில் நடக்கிறது.
    • எவ்வித முறைகேடுக்கும் வழிவகுக்காமல் தேர்வை நடத்த வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வில் எவ்வித குழப்பமும் இல்லாமல் முறையாக நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    எவ்வித முறைகேடுக்கும் வழிவகுக்காமல் தேர்வை நடத்த வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்விற்கு தலா 3200 பறக்கும் படை வீரர்களும், பத்தாம் வகுப்பு தேர்விற்கு 3350 வீரர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதேபோல பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் தலா 3302 மையங்களில் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 4107 மையங்களில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் வினாத்தாள்களை பாதுகாக்க 154 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு வினாத்தாள்களை பாதுகாக்க 304 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தேர்வு முடிந்து விடைத்தாள்களை சேகரித்து பாதுகாக்க பிளஸ்-2 தேர்விற்கு 101 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 10-ம் வகுப்பிற்கு 118 மையங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களும் இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள்கள் தலா 83 மையங்களிலும், 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் 88-ம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திட்டமிட்டப்படி நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா செய்துள்ளார்.

    தேர்வு கூடங்களில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி, குடிநீர், கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது.
    • டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் இன்று ஜெயலலிதா முழு உருவ சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க. மற்றும் என்.எல்.சி.அண்ணா தொழிலாளர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    இதற்கு கடலூர் தெற்கு மாவட்டசெயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட, நகர ஒன்றிய, சார்பு பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    சிலை திறப்பு விழாவுக்காக வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு கடலூர் தெற்கு மாவட்ட எல்லையான பணிக்கன்குப்பத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வழி நெடுகிலும் விளம்பர பேனர் கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்கள், கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டு சாலையின் இருபுறத்திலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். மேலும் நெய்வேலி டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.

    இது தவிர விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்துவைத்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி விழா மேடை யில் பேச உள்ளார்.

    • சென்ட்ரலில் இருந்து நாளை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் மாற்றுப்பாதை வழியாக நாகர்கோவில் சென்றடையும்.
    • மேற்குவங்காள மாநிலம் அவுராவில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதை வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை), 25-ந்தேதி மற்றும் 27-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20683) மாற்றுப்பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை), 26-ந்தேதி மற்றும் 28-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684) தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் வந்தடையும்.

    மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (12689) மாற்றுப்பாதையாக சேலம், ஈரோடு, திருச்சூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 25-ந்தேதி இரவு 7.35 புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12690) மாற்றுப்பாதையாக திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை சென்டிரல் வந்தடையும். இதேபோல குருவாயூரில் இருந்து 27-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) மாற்றுப்பாதையாக திருச்சூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.

    மேலும், மேற்குவங்காள மாநிலம் அவுராவில் இருந்து 26-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12665) மாற்றுப்பாதையாக திருச்சி, கரூர், ஈரோடு, போடனூர், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
    • மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் 23-ந் தேதி (நாளை) காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது.
    • கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது.

    நெல்லை:

    ககன்யான் திட்டத்தின் மூலம் வருகிற 2025-ம் ஆண்டில், 3 இந்திய விண்வெளி ஆய்வாளர்கள், விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் செல்லும் ராக்கெட் ஏவும் வாகனம் மார்க்-3 (எல், வி.எம்-3) வகையை சேர்ந்தது. இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.

    இந்த ராக்கெட்டுக்கான சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அந்தவகையில் இதில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை, நெல்லை மாவட்டம் மகேந்திரிகிரியில் இஸ்ரோ வளாகத்தில் நேற்று நடந்தது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 (எல்.வி.எம்.3) என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது. இது கிரையோஜெனிக் என்ஜின் மூலம் விண்வெளிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது. என்ஜின் சகிப்புத்தன்மை சோதனைகள், செயல்திறன் மதிப்பீடு, கலவை விகிதம் மற்றும் உந்து சக்தி தொட்டி அழுத்தம் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன.

    தற்போது, மனித மதிப்பீடுகளின் தரநிலைகளுக்கு சிஇ-20 என்ஜின் தகுதி பெற, 4 என்ஜின்கள் வெவ்வேறு இயக்க நிலைமைகளின் கீழ் 8 ஆயிரத்து 810 வினாடிகளுக்கு 39 முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. குறைந்தபட்ச மனித மதிப்பீடு தகுதித் தேவையான 6 ஆயிரத்து 350 வினாடிகள் நடந்தது. இதன் மூலம் தரைத் தகுதிச்சோதனைகள் நிறைவடைந்துள்ளன.

    ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. ககன்யான் பணியின் வளர்ச்சியை நோக்கிய ஒரு பெரிய நகர்வில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது பெருமிதம் அளிக்கிறது என்றனர்.

    ×