என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
    • பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    சென்னை:

    சென்னை மாதவரம் பகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீசின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது.

    இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் பூர்ணஜோதி கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இதன்படி குறிப்பிட்ட இடத்தில் 274 வீடுகளை கட்டுவது என்றும் இதில் 75 வீடுகளை சுதீசின் மனைவியான பூர்ணஜோதியிடம் ஒப்படைத்து விடுவது என்றும் குறிப்பிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    கட்டுமான நிறுவனத்துடன் முறைப்படி போடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை மீறி கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

    இதன்மூலம் பூர்ணஜோதியை ஏமாற்றி ரூ.43 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுபற்றி பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கட்டுமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுப்புவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்.
    • எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுப்புவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்; வனப்பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும். கோடைக்காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் ஊர்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் மனித மற்றும் விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
    • தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்கள் மீது மோதி நின்றது.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    மேலும் ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே பாலங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • கோடைகாலம் தொடங்கப்போவதற்கான அறிகுறியாகவே வெயிலின் தாக்கம் தற்போது உணரப்பட்டு வருகிறது.

    சென்னை:

    குளிர்காலம் முடிவுக்கு வந்து கோடைகாலம் தொடங்குவதற்கான அறிகுறியாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    சென்னை வானிலை மையம் சார்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று பகலில் வெயில் வாட்டி எடுத்தது.

    இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளானார்கள்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை நிமித்தமாக வெளியில் சென்றவர்கள் வியர்வை மழையில் நனைந்தனர். கோடைகாலம் தொடங்குவதை உணர்த்தும் வகையிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் கூறியதாவது:-

    இனிவரும் காலங்களில் பனிப்பொழிவு குறைய தொடங்கிவிடும். அதிகாலை நேரத்தில் காணப்பட்ட அதிக அளவிலான பனியின் தாக்கம் இனி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்.

    கோடைகாலம் தொடங்கப்போவதற்கான அறிகுறியாகவே வெயிலின் தாக்கம் தற்போது உணரப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் கூடுதலாக வெயிலின் தாக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.29 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 85 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.58 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.32 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.43 அடியாகவும் குறைந்து உள்ளது.

    • சூரிய ஒளி சிவலிங்கத்தின் நெற்றியில் படும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
    • சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் நெற்றியில் படும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த நிகழ்வை காணவும், பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளவும் நேற்று மாலை திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலை வரை சென்று மறைந்தது. மேற்கொண்டு ஒளி கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று மாலை சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் என எதிர்ப்பார்ப்பில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

    • தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் காரில் இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி புதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான 4 பேரும் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
    • அம்மன் கண்களில் வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 21 நாட்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா நடந்தது. அதன்பின்னர் தினமும் காலையில் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவில் பூசாரியான தர்மராஜ், கோவில் நடையை திறந்து பூஜை செய்தார். அப்போது அம்மன் கண்களில் இருந்து வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது. அதை அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து வியந்துள்ளனர். இந்த தகவல் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது.

    உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டது.

     இந்த அதிசய நிகழ்வு குறித்து கோவில் பூசாரி தர்மராஜ் கூறியதாவது:-

    தினமும் காலை 9 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை செய்வேன். அதன்படி நேற்றும் காலையில் வந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் உள்ளிட்டவற்றை செய்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அம்மனே வந்து நேரடியாக என்னை சந்தித்தது போல் உணர்ந்தேன். அம்மன் கண்ணை திறந்து என்னை பார்த்தது போல் இருந்தது.

    அம்மனுடைய இடது கண் மனிதர்களின் கண் போல் 2 புறமும் வெள்ளையாகவும், நடுவில் கருவிழியும் இருப்பது போல் இருந்தது.

    என்னை பார்த்து அம்பாள் கேள்வி கேட்பது போல் உணர்ந்தேன். அந்த நேரம் தரிசனம் செய்ய வந்த ஒருவர் வந்தார். அவரை அம்மனை பார்க்க சொன்னேன். உடனே அம்மனை பார்த்த அந்த பக்தர், வலது கண் மனித கண் போல் காட்சியளிப்பதாக தெரிவித்தார். இது உண்மைதானா என்பது குறித்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்து காண்பித்தேன்.

    என்னுடைய 50-வது வயதில் நான் தற்போது பூஜை செய்து வருகிறேன். வீடுகளில், கோவில்களில் பூஜை செய்துள்ளேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீனேஷ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 16) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீனேஷ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

     அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.

    இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.

    பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.

    ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.

    • பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகிறார்.
    • நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார்.

    சென்னை:

    இந்தியாவில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார்.

    நாளை காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார். மதியம் 1 மணி வரை இந்த கருத்து கேட்பு நடைபெறுகிறது.

    மதியம் 2 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.

    மறுநாள் (24-ந் தேதி) தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். மதியத்துக்கு பிறகு தலைமைச் செயலாளர் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவரிக்கிறார்.

    அதன் பிறகு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டோன்மெண்ட் அண்ணாசிலை அருகில் நாளை காலை 9 மணியளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    • கண்டோன்மெண்ட் பட்ரோடு, அண்ணாசாலை அருகில் மேள, தாளம், பேண்டு வாத்தியம் முழங்க பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆலந்தூர் தொகுதி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கூட்ட அரங்கில் யூ-இமேஜின், தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் துவக்க விழா நாளை (23-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தகவல் தொழில்நுட்ப கருத் தரங்கத்தை துவக்கி வைக்கிறார்.

    இவ்விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டோன்மெண்ட் அண்ணாசிலை அருகில் நாளை காலை 9 மணியளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இக்கருத்தரங்கினை துவக்கி வைக்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டோன்மெண்ட் பட்ரோடு, அண்ணாசாலை அருகில் மேள, தாளம், பேண்டு வாத்தியம் முழங்க பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வரவேற்பில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட-மாநகர-பகுதி-ஒன்றிய-நகர-பேரூர்-கழக நிர்வாகிகள்-தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், கழக அணிகளின் நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள கழகத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×