என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பஸ்கள் 24-ந் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த வார இறுதியில் இன்று 9,523 பயணிகளும், நாளை 6,187 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7,701 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும், இன்று (வெள்ளிக்கிழமை) நாளை (சனிக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (ஞாயிறு பவுர்ணமி, முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 305 பஸ்களும், நாளை 390 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 65 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பஸ்கள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட மற்றும் குளிர்சாதனமில்லா 20 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் 24-ந் தேதிகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த வார இறுதியில் இன்று 9,523 பயணிகளும், நாளை 6,187 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7,701 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோபி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 656 பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதியை சேர்ந்த வெள்ளையங்கிரி (59) என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபி அருகே உள்ள சிறுவலூர் மணியக்காரன் புதூர் என்ற இடத்தில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.64,000 பணம் இருந்தது.

    சிவகிரியில் இருந்து வந்த விவசாயி துரைசாமி என்பவர் கவுந்தப்பாடியில் டிராக்டர் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு நிலை குழுவினர் கோவில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபி அருகே உள்ள கோவை பிரிவில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் ரூ.98 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தவிட்டுபரம்பில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பதும், ஈரோட்டில் இருந்து வாழைத்தார் வாங்கி செல்வதற்காக பணத்துடன் வந்திருப்பதும் தெரிய வந்தது.

    எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
    • திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா,மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிடுகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் தேவதாஸ், சேலம் தொகுதியில் அண்ணாதுரை, திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா,

    மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான்,

    அரக்கோணம் தொகுதியில் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி தொகுதியில் கணேஷ்குமார், விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் பெயரை பாமக அறிவிக்கவில்லை.

     

    • ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
    • 15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அந்தவகையில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான அவரது முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    அதன் விவரம் வருமாறு:-

    அரக்கோணம், கிருஷ்ணகிரி

    ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் (பாண்டியநல்லூர்) நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா கந்தனேரி கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

    2-ந்தேதி மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட கார்னேஷன் திடல் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோடு வள்ளலார் மைதானம் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். 3-ந்தேதி மாலை 4 மணிக்கு கரூர் தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாமக்கல் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.

    நீலகிரி, கள்ளக்குறிச்சி

    4-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீலகிரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் மார்க்கெட் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 4 மணிக்கு காரமடை மேட்டுப்பாளையம் ரோடு காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு கோவை தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா மைதானம் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

    5-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 5.30 மணி தியாகதுருகம் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசிகிறார். இரவு 7.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

    தேனி, பொள்ளாச்சி

    6-ந்தேதி மாலை 4 மணிக்கு தஞ்சை தொகுதிக்குட்பட்ட திலகர் திடர் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாகை (தனி) தொகுதிக்கு உட்பட்ட அவுரி திடல் பொதுக்கூட்டத்திலும், 7-ந்தேதி மாலை 4 மணிக்கு திருவள்ளூர் (தனி) தொகுதியிலும், இரவு 7 மணிக்கு வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பெரவலூர் சந்திப்பு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

    8-ந்தேதி மாலை 4 மணிக்கு சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு மதுரை தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

    9-ந்தேதி மாலை 4 மணிக்கு தேனி தொகுதிக்குட்பட்ட பங்களாமேடு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

    10-ந்தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், இரவு 7 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகர் அம்மா திடல் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

    மத்திய சென்னை, தென்சென்னை

    11-ந்தேதி ஆரணி தொகுதிக்குட்பட்ட சேவூர் பைபாஸ் ராஜ்பிரியா திருமண மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட அண்ணாசிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

    12-ந்தேதி மாலை 4 மணிக்கு நாமக்கல் தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு பரமத்தி வேலூர் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு சேலம் தொகுதிக்குட்பட்ட கோட்டை மைதானம் பொதுக்கூட்டத்திலும்,

    13-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு ஈரோடு தொகுதிக்குட்பட்ட கனிராவுத்தர்குளம் பொதுக்கூட்டத்திலும்,

    14-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் (தனி) தொகுதிக்குட்பட்ட அரியலூர் காமராஜர் திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் துறையூர் சாலை மற்றும் இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

    15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சின்னமலை வேளச்சேரி சாலை பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

    • கையேடு, பூத் சிலிப் வழங்கும்போதோ அல்லது தனியாகவோ, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுவீடாக வழங்கப்படும்.
    • ஓட்டுபோடும்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை.

    சென்னை:

    பொதுத் தேர்தல்களில் அதிக அளவில் வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதில் ஒவ்வொரு முறையும் இந்திய தேர்தல் கமிஷன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான புதிய உத்திகளையும் வகுத்து செயல்பட்டு வருகிறது.

    இந்த பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய நடவடிக்கையாக, வாக்காளர் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வாக்காளர் கையேடு என்ற 8 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகத்தை வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

    இந்த கையேடு, பூத் சிலிப் வழங்கும்போதோ அல்லது தனியாகவோ, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுவீடாக வழங்கப்படும். அந்த புத்தகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை; அதற்கான விண்ணப்பப் படிவங்களின் விவரங்கள்; வாக்காளர் பட்டியலில் பெயரை ஆன்லைனில் தேடும் முறை; வாக்குச்சாவடி இருக்கும் இடத்தை அறியும் முறை;

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் மாற்று ஆவணங்கள் பற்றிய விவரங்கள்; வரிசையில் நிற்பதில் இருந்து ஓட்டு போடுவதுவரை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்; ஓட்டுபோடும்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை;

    இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ள வழிகாட்டி சேவை செயலிகள் பற்றிய விவரங்கள்; வீட்டில் இருந்தே வாக்களிக்கும் தபால் ஓட்டு வசதி; உறுதியாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி போன்ற தகவல்கள் அதில் உள்ளன.

    • ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
    • தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    தேனி:

    தமிழக பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தேனியில் தொடங்குகிறார். இதற்காக நாளை இரவு தேனிக்கு வரும் அவர் ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    அன்று இரவு தேனியில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுநாள் (24-ந் தேதி) தேனி அல்லிநகரம், பெரியகுளம், மூன்றாந்தல் ஆகிய இடங்களில் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கும், பார் வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்து தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.49,600-க்கும் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கும் பார் வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது.
    • வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நகர கட்டமைப்புகளை மேம்படுத்த என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன். பல ஆண்டுகளாக நிறைவேறாத இந்த திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    அரசியலை பொறுத்தவரை என்னால் முடியாததை செய்து தருவேன் என்று கூறமாட்டேன். தேர்தல் பிரசாரத்திற்காக நான் செல்லும்போது சில திட்டங்கள், கோரிக்கைகள் எனது ககவனத்திற்கு வந்தால் அதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்.

    நான் நேரடி அரசியலுக்கு வந்து 4 ஆண்டுகள்தான் ஆகிறது. பலவற்றை நான் கற்றுக்கொள்ளவேண்டி உள்ளது. அரசியலை பொருத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி எனலாம். மக்களிடம் எப்படி பேசுவது? சக அரசியல் பிரமுகர்களிடம் எப்படி நடந்துகொள்வது என பல விவரங்களை நான் அறிந்துகொள்ளவேண்டி உள்ளது. வைகோ போல என்னால் செயல்பட முடியாது.

    ஆனால் முயற்சி செய்வேன். என்னை வேட்பாளராக அறிவித்ததுமே என்னிடம் இது முதல் தேர்தல் களம். உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று கேட்டார்கள். அப்போது நான், என் மனதில் பெரிய சந்தோஷமும் கிடையாது, வருத்தமும் கிடையாது என்றேன்.

    ஆனால் நான் வெற்றி பெற்றால் லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது என்ற கேள்வி என் மனதில் உள்ளது. வைகோ மற்றும் தலைவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்தால்தான் வளர்ந்துள்ளதா என்பது தெரிய வரும்.

    இந்திய அளவில் பாரதிய ஜனதாவில் தற்போது இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர் முத்த தலைவர்களின் மகன்கள் தான். எனவே வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.

    எங்கள் கட்சி நிர்வாக குழுவில் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு நிர்வாகிகள் பேசுகையில் நான் மறுத்தேன். ஆனாலும் நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலால் நான் சம்மதித்தேன். எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
    • உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலை அருகே சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள ஒரு தையற் கடையில், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராம்குமார் ஆகிய இருவரும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில், ரூ. 1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.

    பின்னர், அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து, சப்- கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரியங்கா அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், எந்தவித அனுமதியின்றியும் மத்திய அரசின் திட்டத்தில் கடனுதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு விநியோகித்த விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள், கணினிகளை பறிமுதல் செய்தும், மேலும், அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறுகையில்:-

    "தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம், ஆனால் இங்கு உரிய அனுமதி பெறாமல் தையற் கடையில் வைத்து சிலர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி டோக்கன் வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது போன்ற செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பொது மக்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறினார்.

    உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    • பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளிகளுக்கு முன் கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. ஏப்ரல் 12-ந்தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வு முடிவதால் 13-ந்தேதி முதல் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பஸ் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 800 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 1000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறை வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலால் முன் கூட்டியே விடுமுறை விடப்படுகிறது.

    இதன் காரணமாக வெளியூர் செல்லும்போது போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் ஏ.சி. பஸ் பயணம் அதிகரிக்கிறது. தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற நாட்களில் அதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயரும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 67 ஸ்பேர் பஸ்கள் உள்ளன. அவற்றையும் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்தாண்டு கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதனால் சிறப்பு பஸ்களை இயக்குகிறோம். மேலும் அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளதால் முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மாநகர பஸ்சில் செல்வதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வதற்கும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வீடுகளுக்கு செல்ல மாநகர பஸ் வசதியை பயன்படுத்தும் வகையில் ரூ.40 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது.
    • தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜனதாவும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை வாயிலாக தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், தி.மு.க. அரசை விமர்சித்தும் பிரசாரம் செய்தார்.

    இந்த சூழலில், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தொடர்ந்து, நெல்லையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். நெல்லையில் பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில், பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக சாடினார். அதன்பிறகு, சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது. இதே உற்சாகத்துடன் பிரதமர் மோடி மீண்டும் தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 15-ந்தேதியும், கோவைக்கு 18-ந்தேதியும், சேலத்துக்கு 19-ந்தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதா தொண்டர்களை சந்தித்தார். பிரதமரின் தொடர் வருகை பா.ஜனதா தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

    இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.

    இதற்காக, மீண்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், கோவை, வேலூர் ஆகிய 4 இடங்கள் அல்லது கூடுதலாக ஒரு இடம் என 5 இடங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்ய இருப்பது உற்சாகத்தை அளிப்பதாக, பா.ஜனதா தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
    • கள நடுவர்கள் முடிவுகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து குஷிப்படுத்துவதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் ஒரு அணி, குறிப்பிட்ட 5 அணிகளுடன் தலா 2 முறையும், எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இப்படி ஒரு அணி மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.

    ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐ.பி.எல். நிர்வாகம் இந்த முறை கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு 2-வது பவுன்சர் வீசினால் நோ-பாலாக அறிவிக்கப்படும். இனி 3-வதாக வீசப்படும் பவுன்சரே நோ-பால் ஆகும். இது பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்.

    கள நடுவர்கள் முடிவுகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக 'ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி மைதானத்தில் உள்ள நவீன 8 ஹாக்-ஐ கேமராவின் காட்சிகள் டி.வி. நடுவருக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்காக அந்த ஒளிப்பதிவு காட்சிகளை கையாளுவதற்கு இரு நிபுணர்கள் டி.வி. நடுவர் அறையிலேயே இருப்பார்கள். இதனால் நடுவரால் சீக்கிரமாக முடிவுகளை எடுக்க முடியும். மேலும் கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறை (இம்பேக்ட் விதி) நடப்பு தொடரிலும் தொடருகிறது. இன்னிங்சின் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை இறக்கி விளையாட வைக்கும் இம்பேக்ட் விதி இந்த ஆண்டும் பரபரப்புக்கு தீனி போடும் என்பதில் சந்தேகமில்லை.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுக்கட்டுகின்றன.

    6-வது பட்டத்திற்கு குறி வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் திடீர் திருப்பமாக கடைசி நேரத்தில் டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்து இருப்பதால் அவரது கேப்டன்ஷிப் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

    ருதுராஜ், புதுமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, மொயீன் அலி, ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், சான்ட்னெர், தீக்ஷனா, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், துஷர் தேஷ் பாண்ேட, முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சிலும் சென்னை அணிக்கு வலு சேர்க்கிறார்கள். டோனி விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார். ரசிகர்களின் ஆரவாரம், உள்ளூர் ஆடுகளம் இவை எல்லாம் சென்னை அணிக்கு சாதகமான அம்சமாகும். 'குட்டி மலிங்கா' என்று அழைக்கப்படும் பதிரானா தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் சில ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மேக்ஸ்வெல், 2 மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள விராட் கோலி, கேப்டன் பிளிஸ்சிஸ், கேமரூன் கிரீன், ரஜத் படிதார் என்று அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. பந்துவீச்சில் முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், ரீஸ் டாப்லே மிரட்டக்கூடியவர்கள்.

    2008-ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடிக்க முடியாமல் தவிக்கும் பெங்களூரு அணி அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வரிந்து கட்டுகிறது.

    இவ்விரு அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் சென்னையும், 10-ல் பெங்களூருவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கினாலும் அதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

    போட்டிக்கான் இரு அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டோனி, டிவான் கான்வே, ரஹானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், டேரில் மிட்செல், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, முஸ்தாபிஜூர் ரகுமான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், சவுரவ் சவுகான், மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், கரண் ஷர்மா, கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், மயங்க் தாகர், மனோஜ் பண்டாகே, ஆகாஷ் தீப், அல்ஜாரி ஜோசப், லோக்கி பெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள், டாம் கர்ரன், ரீஸ் டாப்லே, ஹிமான்ஷூ ஷர்மா, வைஷாக் விஜய் குமார், ராஜன் குமார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ சினிமா செயலியிலும் போட்டியை பார்க்கலாம்.

    ×