என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் கவர்னரின் நடவடிக்கையை பார்த்து சுப்ரீம் கோர்ட் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
- பொன்முடியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த பிறகு அவர் குற்றவாளியா? இல்லையா? என கவர்னர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது.
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
இந்த வழக்கில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ந்தேதி நிறுத்தி வைத்தது.
இதனால் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அதை பொருட்படுத்தவில்லை.
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் நிரபராதி என்று கோர்ட்டு கூறவில்லை என்பதால் பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி விட்டார்.
கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். கவர்னர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரானார்.
தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக கவர்னரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, கவர்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக அப்போது கண்டனம் தெரிவித்தார்.
குற்றவாளி என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்த பிறகு பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது என கவர்னர் எப்படி கூற முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் கவர்னரின் நடவடிக்கையை பார்த்து சுப்ரீம் கோர்ட் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது அட்டர்னி ஜெனரலிடம் தலைமை நீதிபதி கூறும்போது, கவர்னரிடம் இருந்து சாதகமான தகவல் கிடைக்கப்பெறாவிட்டால், அரசமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடும். ஆனால் அந்த சூழலை தவிர்க்க விரும்புகிறோம்.
எனவே கவர்னருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று (நேற்று) அவகாசத்தை அளித்து அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்த விரும்புகிறோம். எனவே கவர்னர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. அவர் சுப்ரீம் கோர்ட்டை அவமதித்துள்ளார். பொன்முடியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த பிறகு அவர் குற்றவாளியா? இல்லையா? என கவர்னர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது.
எனவே கவர்னருக்கு இன்று (நேற்று) இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம். இல்லையென்றால் நாளை (இன்று) தீர்ப்பு அளிக்கிறோம் என்று தலைமை நீதிபதி கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து நேற்று முதல் எந்த அழைப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை.

இந்நிலையில், இன்று பிற்பகலில் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்க வருமாறு கவர்னர் ஆர்.என். ரவி அழைத்து விடுத்துள்ளார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடி அமைச்சராக பதவியேற்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
- 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது
கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கடந்த 1998-ல் வெற்றி பெற்றது.
பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி. ஆனார். தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். சுப்பையனை எதிர்த்து 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது.
இதையடுத்து 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
2004 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார். 2014-ல் 4-வது முறையாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து 2-ம் இடத்தை பிடித்தார்.
பின்னர் 2019-ல் பா.ஜ.க. சார்பில் 5-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவை தொகுதியில் பா.ஜ.க. வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது. ஆனால் இந்த முறை தி.மு.க., அ.தி.மு.க.வும் தனித்தனியாக களம் காண்கின்றன. இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. இதில் அண்ணாமலை வெற்றிக்கணக்கை தொடங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- பறக்கும் படையினர் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
- பணத்தை கொண்டு வந்த கணேசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
மரக்காணம்:
வானூர் சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரவரன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை அய்யப்பன் தாங்கல் சீனிவாசபுரம் எம்.ஜி.ஆர் நகர் எட்டியப்பன் மகன் கணேஷ் என்பவர் தனக்கு சொந்தமான காரில் புதுச்சேரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரது காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை எதற்காக எங்கிருந்து கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரிடம் எவ்வித பதிலும் இல்லை மேலும் இந்த பணத்திற்கு எவ்வித ஆவணமும் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வானூர் தேர்தல் அலுவலர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பணத்தை கொண்டு வந்த கணேசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
- முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது.
- கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.
சென்னை:
தேர்தல் வந்தால் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது பல காட்சிகள் ஒவ்வொரு கட்சியிலும் திரைமறைவில் நடப்பது வழக்கமானதுதான்.
முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது. இதில் பலர் எதிர்பார்க்கப்பட்டவர்கள். சிலர் புதுமுகங்கள் ஆவார்கள்.
ஆனால் பா.ஜனதா ஓசையின்றி தொகுதிகளையும் அதில் பிரபலங்களையும் தேர்வு செய்து வந்துள்ளது.
தெலுங்கானா கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்து தென்சென்னையில் களம் இறக்கி உள்ளது.
அதே போல் மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட போதும் நீலகிரியில் தி.மு.க.வின் ஆ.ராசாவை எதிர்த்து களம் இறக்கி உள்ளது.
அண்ணாமலை போட்டியிடுவாரா? என்று எதிர்பார்த்த நிலையில் அவரை கோவை தொகுதியில் களம் இறக்கி இருக்கிறது. எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரனை நெல்லை தொகுதியில் போட்டியிட வைத்துள்ளது.
கன்னியாகுமரியில் நன்கு அறிமுகமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை மீண்டும் களம் இறக்கி உள்ளது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை வேலூரிலும் பாரிவேந்தரை பெரம்பலூரிலும் களத்தில் இறக்கி உள்ளது.
அதே போல் கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி.யான நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.
- கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
- அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.
அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள க.செல்வம், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
- பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ப.ராஜ்குமார் எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக எஞ்சியுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
தி.மு.க. போட்டியிடும் 21 வேட்பாளர்களில் 10 பேர் ஏற்கனவே களம் கண்ட அனுபவசாலிகள். 11 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 21 பேரில் 3 பெண்கள், 19 பட்டதாரிகள், 3 முதுநிலை பட்டதாரிகள், 2 டாக்டர்கள், 6 வக்கீல்கள், முனைவர் பட்டம் பெற்ற 2 பேரும் அடங்கியுள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர்களின் கல்வி மற்றும் இதர பின்னணி பற்றிய விவரம் வருமாறு:-
1. வடசென்னை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு வயது 54. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான இவர், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் இதே தொகுதியில் 2-வது முறையாக களம் காண்கிறார்.
2. தென் சென்னை வேட்பாளரான சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் (61), கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத்தன்மைக்கு சொந்தக்காரர். எம்.ஏ., எம்.பில் படித்துள்ளார். முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருடைய தந்தை தங்கபாண்டியன் முன்னாள் அமைச்சர் என்பதும், தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இவரது சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 2-வது முறையாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
3. மத்திய சென்னையில் களம் இறங்கும் தயாநிதி மாறன் (57), பி.ஏ. படித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் மகன். இவரும் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் இதே தொகுதியில் 2004 பாராளுமன்ற தேர்தல் முதல் தொடர்ந்து 6-வது முறையாக போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
4. ஸ்ரீபெரும்புதூரில் களம் காணும் டி.ஆர்.பாலு (83), பி.எஸ்சி. படித்துள்ளார். வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், 1986-ம் ஆண்டு பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக இருந்தார். 1996 பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மத்திய இணை மந்திரி ஆனார்.
தொடர்ந்து 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர். 2009 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2019 தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
5. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள க.செல்வம் (50), விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். எம்.காம். எம்.பில் மற்றும் வக்கீலுக்கு படித்துள்ளார். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தற்போது இவருக்கு 2-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
6. அரக்கோணம் தொகுதியில் களம் இறங்கும் எஸ்.ஜெகத்ரட்சகன் (76), எம்.ஏ. படித்துள்ளார். என்ஜினீயரிங் கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் (1999, 2009 மற்றும் 2019) 3 முறை வெற்றி பெற்றுள்ளார். மத்திய இணை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். 2014 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது 4-வது முறையாக அரக்கோணம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
7. வேலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கதிர் ஆனந்த் (49), பி.காம்., எம்.பி.ஏ. படித்துள்ளார். கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் துரைமுருகனின் மகன். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கி, வெற்றி வாகை சூடிய அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
8. தர்மபுரி வேட்பாளரான ஆ.மணி (55), வக்கீல் ஆவார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவருக்கு தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
9. திருவண்ணாமலையில் களம் காணும் சி.என். அண்ணாதுரை (51), விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பி.காம் பட்டதாரியான இவர், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2014-ம் சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது அதே தொகுதியில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
10. ஆரணி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.தரணிவேந்தன் (58), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாய தொழில் செய்கிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், தேர்தல் களத்தை சந்திப்பது முதல் முறை ஆகும்.
11. கள்ளக்குறிச்சி வேட்பாளரான தே.மலையரசன் (49) பி.காம் படித்துள்ளார். வணிகம் செய்கிறார். உடையார் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார்.
12. சேலம் தொகுதியில் களம் இறங்கும் டி.எம்.செல்வ கணபதி (65), எம்.ஏ. மற்றும் வக்கீலுக்கு படித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். 1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சேலம் தொகுதி எம்.பி.ஆனார். 2008-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். 2010-ம் ஆண்டு பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக இருந்தார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.
13. ஈரோடு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கே.இ.பிரகாஷ் (48) பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். 'டைல்ஸ்' விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார். தி.மு.க.வில் இளைஞரணி மாநில துணை செயலாளராக உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
14. நீலகிரி (தனி) தொகுதியில் களம் இறங்கும் ஆ.ராசா (60) பி.எஸ்.சி., பி.எல். படித்துள்ளார். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த இவர், பெரம்பலூர் தொகுதியில் 1999 மற்றும் 2004-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நீலகிரி தொகுதியில் 2009, 2014, 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதில் 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார். 2 முறை மத்திய மந்திரியாக இருந்தவர். தற்போது 4-வது முறையாக நீலகிரி தொகுதியில் களம் காண்கிறார்.
15. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ப.ராஜ்குமார் (59) எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். விவசாய தொழில் செய்கிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். கோவை மாநகராட்சி மேயராக (அ.தி.மு.க.) 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார். இவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
16. பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான கே.ஈஸ்வரசாமி (47), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். நூற்பாலை நடத்தி வருகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இவர், முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
17. பெரம்பலூர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள கே.என்.அருண் நேரு (40), ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். அரிசி ஆலை நடத்தி வருகிறார். ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் கே.என்.நேருவின் மகன் ஆவார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டது. அப்போது வழங்கப்படாத வாய்ப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளது. இவரும் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
18. தஞ்சை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி (45), வக்கீல் ஆவார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், தஞ்சை தொகுதியில் 6 முறை வெற்றி வாகை சூடிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு பதிலாக களம் இறக்கப்பட்டுள்ளார்.
19. தேனி தொகுதியில் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் (62), எம்.ஏ. படித்தவர். விவசாய தொழில் செய்கிறார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்தவர். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவரை பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக்கினார் ஜெயலலிதா. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது அவருக்கு தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
20. நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்கும் கனிமொழி (56), மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் ஆவார். எம்.ஏ. படித்துள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்டவர். பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாக இருந்த அவர், கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக களமிறங்கி மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது தூத்துக்குடி தொகுதியில் 2-வது முறையாக களம் காண்கிறார்.
21. தென்காசி (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் ராணிஸ்ரீகுமார் (40), சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றியவர். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் புதுமுக வேட்பாளர் ஆவார்.
- ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.
- என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.
வேலூர்:
வேலூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்க அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து மக்களிடையே ஒட்டு கேட்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குறுதி என்று எதுவும் குறிப்பிடாத பிரதமர் மோடி நான் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்கிறார்.
எதற்காக எங்களை அழிக்க வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம். மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இனியும் செய்யப் போகிறோம்.
இது போன்ற மக்கள் சேவைக்காக எங்களை அழிக்க போகிறார்களா? வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்றும் பிரதமர் சொல்கிறார்.
நாங்கள் கட்சிக்காக பல தியாகங்கள் செய்துள்ளோம். சிறை சென்று இருக்கிறோம். எங்களைப் பார்த்து எங்கள் வாரிசுகளும் அரசியலுக்கு வருவது வாரிசு அரசியலா? பிரதமர் ஒரு சந்தேக வழக்கிலாவது சிறை சென்றுள்ளாரா? முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.

இது சர்வாதிகாரி நாடு அல்ல. சமதர்ம நாடு. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. கடந்த முறை நடந்த சோதனையின் போது என் வீட்டில் இருந்தோ எனக்கு சொந்தமான இடங்களில் இருந்தோ ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்தீர்களா? எங்கேயோ எடுத்த பணத்தை வைத்து என் மீது பழி சுமத்தினீர்கள். இதனால் அந்த தேர்தல் நின்றது. மறுபடியும் தேர்தல் நடந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி சத்தியமும் வென்றது.
இப்போதும் சொல்கிறேன். இதே போன்ற செயலுக்கான ஆயத்தங்களே நடக்கின்றன. எப்படியாவது கதிர் ஆனந்தை கைது செய்யுங்கள் என்று சில வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். என் மகனை சிறைக்கு அனுப்புவதற்கும் தயாராக இருக்கிறேன். இதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.
நான் ஒழுக்கமாகவும் நாணயமாகவும் இருந்ததால்தான் ஒரே தொகுதியில் 12 முறை நின்றாலும் எனக்கு மக்கள் ஓட்டு போட்டனர். அது போல தான் என் மகனையும் வளர்த்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
சென்னை :
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* கவர்னர் பதவி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்.
* உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
* மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.
* பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்துவோம்.
* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
* வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
* நீட் தேர்வுக்கு மாற்றாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை.
* தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
* தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
* சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
* 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படும்.
* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம்.
* நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை.
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பஸ்கள் 24-ந் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த வார இறுதியில் இன்று 9,523 பயணிகளும், நாளை 6,187 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7,701 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும், இன்று (வெள்ளிக்கிழமை) நாளை (சனிக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (ஞாயிறு பவுர்ணமி, முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 305 பஸ்களும், நாளை 390 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 65 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பஸ்கள் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட மற்றும் குளிர்சாதனமில்லா 20 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் 24-ந் தேதிகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் இன்று 9,523 பயணிகளும், நாளை 6,187 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7,701 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோபி:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பிரிவில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 656 பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதியை சேர்ந்த வெள்ளையங்கிரி (59) என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோபி அருகே உள்ள சிறுவலூர் மணியக்காரன் புதூர் என்ற இடத்தில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.64,000 பணம் இருந்தது.
சிவகிரியில் இருந்து வந்த விவசாயி துரைசாமி என்பவர் கவுந்தப்பாடியில் டிராக்டர் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு நிலை குழுவினர் கோவில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோபி அருகே உள்ள கோவை பிரிவில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் ரூ.98 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தவிட்டுபரம்பில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பதும், ஈரோட்டில் இருந்து வாழைத்தார் வாங்கி செல்வதற்காக பணத்துடன் வந்திருப்பதும் தெரிய வந்தது.
எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து கோபி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கோபி பகுதியில் ஒரு நாளில் மட்டும் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
- திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா,மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிடுகின்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேவதாஸ், சேலம் தொகுதியில் அண்ணாதுரை, திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா,
மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான்,
அரக்கோணம் தொகுதியில் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி தொகுதியில் கணேஷ்குமார், விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் பெயரை பாமக அறிவிக்கவில்லை.

- ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
- 15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அந்தவகையில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான அவரது முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன் விவரம் வருமாறு:-
அரக்கோணம், கிருஷ்ணகிரி
ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் (பாண்டியநல்லூர்) நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா கந்தனேரி கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.
2-ந்தேதி மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட கார்னேஷன் திடல் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோடு வள்ளலார் மைதானம் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். 3-ந்தேதி மாலை 4 மணிக்கு கரூர் தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாமக்கல் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
நீலகிரி, கள்ளக்குறிச்சி
4-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீலகிரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் மார்க்கெட் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 4 மணிக்கு காரமடை மேட்டுப்பாளையம் ரோடு காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு கோவை தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா மைதானம் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
5-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 5.30 மணி தியாகதுருகம் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசிகிறார். இரவு 7.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தேனி, பொள்ளாச்சி
6-ந்தேதி மாலை 4 மணிக்கு தஞ்சை தொகுதிக்குட்பட்ட திலகர் திடர் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாகை (தனி) தொகுதிக்கு உட்பட்ட அவுரி திடல் பொதுக்கூட்டத்திலும், 7-ந்தேதி மாலை 4 மணிக்கு திருவள்ளூர் (தனி) தொகுதியிலும், இரவு 7 மணிக்கு வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பெரவலூர் சந்திப்பு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
8-ந்தேதி மாலை 4 மணிக்கு சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு மதுரை தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
9-ந்தேதி மாலை 4 மணிக்கு தேனி தொகுதிக்குட்பட்ட பங்களாமேடு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
10-ந்தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், இரவு 7 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகர் அம்மா திடல் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
மத்திய சென்னை, தென்சென்னை
11-ந்தேதி ஆரணி தொகுதிக்குட்பட்ட சேவூர் பைபாஸ் ராஜ்பிரியா திருமண மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட அண்ணாசிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
12-ந்தேதி மாலை 4 மணிக்கு நாமக்கல் தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு பரமத்தி வேலூர் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு சேலம் தொகுதிக்குட்பட்ட கோட்டை மைதானம் பொதுக்கூட்டத்திலும்,
13-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு ஈரோடு தொகுதிக்குட்பட்ட கனிராவுத்தர்குளம் பொதுக்கூட்டத்திலும்,
14-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் (தனி) தொகுதிக்குட்பட்ட அரியலூர் காமராஜர் திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் துறையூர் சாலை மற்றும் இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சின்னமலை வேளச்சேரி சாலை பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.






