என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
- காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் அடிக்கும் காமெடி கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.
மன்சூர் அலிகான் என்றாலே மக்கள் தானாக சிரிக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக மன்சூர் அலிகான் காரில் சென்றார்.
மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மன்சூர் அலிகான் காரை வழிமடக்கி சோதனையிட்டனர்.
காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் முகத்துக்கு போட்டுக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது.. பூசி கொள்கிறீர்களா... என அதிகாரிகளை பார்த்து கேட்டார்.
அதனை கேட்டதும் சிரித்துக்கொண்டே அதிகாரிகள் அவரது காரை விடுவித்தனர்.
- பலியானவர்கள் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டது.
- விடுதி உரிமையாளர் அசோக்குமார் தலைமறைவானார்.
சென்னை:
சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த விடுதி நேற்று வழக்கம் போல் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் சிலர் உற்சாக மிகுதியில் இருந்தனர்.
இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால் கேளிக்கை விடுதிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்து வெளியேற முயன்றுள்ளனர். எனினும் கட்டிட இடிபாடுகளில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் சிக்கி கொண்டதாக தெரிகிறது.
இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
எனினும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியானவர்கள் மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (வயது 22), திருநங்கை லல்லி (22), சைக்கோள் ராஜ் (48) என்பது அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் மதுபான கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விடுதி மேலாளர் சதீஷை அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர். விடுதி உரிமையாளர் அசோக்குமார் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
- பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெரு விழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசித்தனர்.
இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப்பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.
தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வரம் பிடித்து இழுத்து சுவா மியை தரிசனம் செய்தார்கள்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சேலம்:
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதனால் தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் தருமபுரி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தருமபுரியில் இன்று மாலை நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் காமலாபுரத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் தருமபுரி தடங்கம் பகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து இரவில் சேலம் வரும் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
நாளை (30-ந்தேதி) காலையில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் செய்துள்ளனர்.
சேலம் பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி சேலம் விமான நிலையம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் சேலத்தில் அவர் தங்கும் மாமாங்கம் பகுதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
- உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.
சென்னை:
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்வது வழக்கம். இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு திறக்கும் நேரமான மாலை நேரத்தில் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இங்கு நோன்பு கஞ்சியுடன், வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், வாழைப்பழம், திராட்டைப்பழம், குளிர்ந்த ரோஸ்மில்க், தண்ணீர் ஆகியவையும் சேர்த்து வழங்கப்படுகிறது. நோன்பு கஞ்சியை பொறுத்தமட்டில் பள்ளிவாசலில் இருந்து வழங்கப்படுகிறது.
இதை தவிர்த்து நோன்பு திறப்புக்கான மற்ற அனைத்து உணவு பொருட்களையும் கடந்த 36 ஆண்டுகளாக இந்துக்கள் வழங்கி வருகிறார்கள்.
இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள். அகதிகளாக சென்னைக்கு வந்த இச்சமூகத்தின் மூதாதையர்கள் 'கடவுளுக்கு சேவை செய்வோம்... சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு சக மனிதர்களுக்கு சேவை செய்வோம்' என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு சென்னை மயிலாப்பூரில் சுபிதர் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி உள்ளனர்.
இவர்கள் வகுத்துள்ள குறிக்கோளுக்கு எடுத்துக்காட்டாக தங்களது அறக்கட்டளை வளாகத்தில் இந்து சாமிகள் மட்டுமல்லாமல் ஏசு கிறிஸ்து, மாதா, அந்தோணியார் சொரூபங்களையும் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
சுபிதர் அறக்கட்டளை மூலம் தான் 36 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் இவர்கள் நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்கி வருகிறார்கள்.
இவர்களது மயிலாப்பூர் அறக்கட்டளையில் தயாராகும் நோன்பு திறப்புக்கான உணவு பொருட்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு மாலை 5.30 மணிக்கு பெரிய பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.
நோன்பு திறப்பு நேரம் தொடங்கியதும் அல்லாவை வணங்கி நோன்பு திறப்புக்கான உணவு பொருட்களை அருந்துகிறார்கள். ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இந்த சேவை ஓசையில்லாமல் நடந்து வருகிறது.
மதத்துக்கு அப்பாற்பட்டு இந்த சேவையில் ஈடுபட்டு வரும் சுபிதர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராம்தேவ் நானி கூறும்போது, 'இந்த சேவையில் 36 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உள்ளார்ந்த அன்போடு இந்த பணியை அனைவரும் செய்து வருகிறோம். இது, எங்களுக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. முஸ்லிம்கள் அணியும் குல்லாவை அணிந்து கொண்டு இந்த சேவையில் ஈடுபடுகிறோம்' என்றார்.
36 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் 86 வயதான நாராயண் என்பவர் கூறும்போது, இந்த சேவை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தவறாமல் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் தண்ணீர் தொட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செவ்வந்தி வீரன் (வயது 60). இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஒச்சம்மாள் (வயது 57). இவர்களது மகன் ராஜேஷ் (வயது 30). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை வாங்கி அதனை மாத தவணையாக கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. நேற்று வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு ஒச்சம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பார்த்ததால் அவர் மிகுந்த வேதனையடைந்தார். இரவு வீட்டுக்கு வந்த தனது கணவர் மற்றும் மகனிடம் இது குறித்து அவர் கூறி கதறி அழுதார். பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமானமாக பேசியதால் இனிமேல் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து 3 பேரும் விஷ மருந்தை குடித்தனர்.
இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களது உடல்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
- 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 1-ந்தேதி தூத்துக்குடி, நெல்லை தொகுதிகளிலும், 2-ந்தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
4-ந்தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர் தொகுதிகளிலும், 6-ந்தேதி கோயம்புத்தூர் தொகுதியிலும், 7-ந்தேதி வேலூர் தொகுதியிலும், 8-ந்தேதி திருச்சி தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.
- ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாகனியாகவே போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் ஏற்பட்டபோது தங்கம் விலை உயர ஆரம்பித்தது. ரஷியா-உக்ரைன் இடையிலான போரும் தீவிரம் அடைந்ததால் சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் தலைமை வங்கியான மத்திய பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாமல் இருக்கிறது. மேலும் வரும் காலங்களில் அந்த வட்டி தொகையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இது மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்களும், வங்கிகளில் பணத்தை அதிகளவு இருப்பு வைத்திருந்தவர்களும் அவற்றை எடுத்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் மும்பை பங்கு வர்த்தகத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. இதனால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் அதற்கு பதில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். பொருளாதாரம் பாதிக்கப்படும் போது பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கி விடும்.
இத்தகைய காரணங்களால் கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. கடந்த 21-ந்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்தது. அதன் பிறகு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது.
நேற்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,250-க்கு விற்பனையானது. ஒரு பவுன் விலை 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக தங்கத்தின் விலை மிக பயங்கரமாக அதிகரித்தது. மக்களை கதிகலங்க வைக்கும் வகையில் இன்றைய தங்கம் விலை உயர்வு இருந்தது. ஒரு கிராம் 140 ரூபாய் அதிகரித்தது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையானது.
தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக பவுன் ரூ.51,120-ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் கிராம் ரூ. 190-ம், பவுனுக்கு ரூ. 1,520-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி நகை வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி திருமணம் போன்ற விசேஷ நாட்களில் தங்க நகைகளை வாங்க முடியுமா? என்ற ஏக்கத்தையும் அவர்கள் மனதில் எழுந்துள்ளது.
பொதுவாக உறவினர் விட்டு நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் ஒரு கிராம் அல்லது 2 கிராமில் கம்மல் மூக்குத்தி, மோதிரம் போன்றவற்றை வாங்கி பரிசாக கொடுப்பது உண்டு. 2 கிராம் வாங்கினாலும் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் கொடுக்க வேண்டி இருப்பதால் நடுத்தர மக்கள் இத்தகைய நகைகளை வாங்குவதற்கு தயங்குவார்கள் என்று நகை வியாபாரிகள் கருதுகிறார்கள்.
மேலும் ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாகனியாகவே போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். அதே சமயத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் நகை வியாபாரிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தும் நிலவுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.80.80-க்கும், கிலோ 300 ரூபாய் அதிகரித்து ரூ. 80,800-க்கும் விற்பனை ஆகிறது.
- அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீர வசனம் பேசி வருகிறார்.
மதுரை:
மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அ.தி.மு.க. அலையாக வீசுகிறது. அ.தி.மு.க. இதுவரை என்னென்ன சாதனைகள் செய்துள்ளோம், இனி என்னென்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார்கள்.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது அவதூறு பரப்பி வருகிறது.
தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அ.தி.மு.க.வை பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தோம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது? தி.மு.க. மாதிரி நாங்கள் அல்ல, அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம். கூட்டணியில் இருக்கும்போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம்.
கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது தி.மு.க.விற்கு கைவந்த கலை. கூட்டணி கட்சியினருக்கு அ.தி.மு.க. என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழ் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க.விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கு உள்ளது. அதனால் 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.
தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்சனை. இதுகுறித்து அவர் தான் கருத்து கூற வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரும் பெரியவர்கள் இல்லை, அனைவரும் சமமாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக்கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள்.
அ.தி.மு.க.வில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் எடுத்த முடிவு. ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.விலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு அல்ல.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக் குடை பிடிக்கிறார். தமிழ் நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். பிரதமரிடத்தில் சரணாகதி அடைந்து விட்டு வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை விடும் போடுகிறார்கள். தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
- இருவர் மணிப்பூரை சேர்ந்தர்கள் என்று தகவல்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் முதல் தளத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் மதுபான விடுதியில் ஏராளமானோர் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் மதுபான விடுதியில் பணியாற்றி வந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் மணிப்பூரை சேர்ந்தர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மதுபான விடுதிக்கு அருகே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனிடையே விபத்து களத்தில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணம் இல்லை என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு 240 அடி தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் எந்த அதிர்வும் கண்டறியப்படவில்லை.
மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளது.
- ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை.
பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம் பூனாம்பாளையம் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், "பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளதாக" குறிப்பிட்டார்.
மேலும் அவர், "பெரம்பலூர் எம்பி தொகுதியில் ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும், மேலும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் வழங்கப்படும்.
தத்தமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது டாக்டர் பாரிவேந்தர், தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தளு தாளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தாமரை சின்னத்தை தவிர, வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை" என கூறினார்.
- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
- பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கான கட்சிகளின் களப் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. முதற்கட்டமாக அதுவும் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் கட்சிகளும் அதன் கூட்டணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் அதன் எம்.பிக்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்.
அந்த வகையில், பெரம்பலூர் தொகுதி எம்பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் தனது தொகுதி மக்களுக்கு செய்துள்ள நற்பணிகளை பட்டியலிட்டு இருக்கின்றனர். அப்படி என்ன திட்டங்களை தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
தமது ஏழ்மை நிலையால் உயர்கல்வி படிக்க வழியில்லாமல் சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த, கடலூர் மாவட்டம்
வேப்பூர் ஒன்றியம் வி.சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த, சத்யாதேவி என்ற மாணவிக்கு எஸ்.ஆர்.எம். கல்லூரியில் வேளாண் உயர்கல்வியும், தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கும் முழுவதும் இலவசமாக வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் அலுவலகங்கள் திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார்.
முசிறிப் பகுதி விவசாய மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கொரம்பு அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்ததின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க ரூ.1 கோடி நிதி எஸ்.ஆர்.எம். அறக்கட்டளை மூலம் தரப்பட்டது.
இதன் மூலம் உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உள்பட 10 கிராமங்கள் பயன்பெற்றன.

பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மூன்று கிராமங்களுக்குச் சொந்த நிதியில் போர்வெல் அமைத்துக் கொடுத்தார். தொட்டியம் - நத்தம் கிராமத்தில் ரூ.3 லட்சத்தில் மயான சாலை அமைத்துள்ளார்.
லால்குடி - திண்ணியத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் உதவி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2020-ம் ஆண்டு ஏற்பட்ட
கடும் வறட்சியால், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க, தமது சொந்தச் செலவில் லாரிகள் மூலம் தேவைப்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கினார்.
வெளிநாட்டில் தவித்தவர்களுக்கு தேடிச் சென்று உதவிய பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் டயர் வெடித்ததால் கிணற்றுக்குள் விழுந்து, 8 பேர் பலியாகினர்.
பலியானோர் குடும்பங்களுக்குத் தமது சொந்த நிதியில் தலா ரூ.1 லட்சம் வழங்கி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவையும் தாமே ஏற்றுக்கொண்டார்.
வேலை வாய்ப்பிற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று, அங்கு எதிர்பாரா விதமாக மரணமடைந்த 6 நபர்களின் சடலங்களை, வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் மூலம் அவர்களின் உடல்களைக் குடும்பத்தாரிடம் சேர்க்க வழிவகை செய்தார்.
கொரோனா காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களைச் சார்ந்த 11 பேர் அயல்நாட்டில் பணியிழந்து தாயகம் திரும்ப இயலாமல் தவித்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டது.
வெகுகாலமாகத் தொடர்கின்ற தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.
பொருளாதாரப் பற்றாக்குறையால் சிகிச்சை பெற இயலாமல் உயிரிழக்கும் ஏழை மக்களைக் காக்கும் பொருட்டு, பிரதம மந்திரி நிவாரண நிதியின் மூலம் நோய்வாய்ப்பட்ட ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெற பிரதமருக்குப் பரிந்துரை செய்ததன் பேரில், பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை 40 க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள்
ஒவ்வொருவரும் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை உயர்தரமான இலவசச் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.
இதன்படி 2019-ல் கொடுத்த தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வருடத்திற்கு 300 மாணவர்கள் வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 1200 மாணவ, மாணவியர்களுக்கு இலவச உயர் கல்வியை, தமது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கினார்.

50 ஆண்டு கால கனவுத் திட்டமான அரியலூர் - பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற அன்றிலிருந்து இன்று வரை பிரதமர், நிதி அமைச்சர், ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே வாரியம் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.
முறையாக எடுத்துக் கூறியதால் தற்பொழுது 2023 ஜூலையில் புதிய ரெயில் தடம் அமைப்பதற்கான சர்வே மேற்கொள்ளப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விரைவில் பெரம்பலூருக்கு ரெயில் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி தமிழக அரசுக்கு வழங்கினார்.
பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






