என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோடை காலத்தில், உலர்விழி, கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன.
- இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
சென்னை:
கோடை காலம் தொடங்கியதையடுத்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் கண் நோய்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் கண் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கண் அழற்சி பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், கண் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கண் மருத்துவர்கள் கூறியதாவது:-
கோடை காலத்தில், உலர்விழி, கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன. கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீர் சுரக்காதபோது உலர் விழி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
தற்போது இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது. இதனால் அசுத்தமான கைகளால் கண்களை தொடக்கூடாது. சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு பல கண் நோய்களை விளைவிக்கும். இத்தகைய பாதிப்பைத் தவிர்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம். கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாக்கும் இயற்கை பானங்களை அருந்த வேண்டும். செல்போன்கள், கம்ப்யூட்டர் திரைகளை தொடர்ந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
- பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் இன்று காலை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மலையடி வாரத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அண்ணாமலை வடவள்ளி பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
2024-ம் ஆண்டு நடக்கிற பாராளுமன்ற தேர்தலானது ஒரு வித்தியாசமான தேர்தல். மீண்டும் பிரதமர் மோடியே வெற்றி பெறுவார் என்று உறுதியாக தெரிந்து கொண்டு நடக்கிற தேர்தல் தான் இது.
கடந்த 10 வருடமாக தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி நிறைவேற்றிய திட்டங்களால் தற்போது மிகப்பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
2024-2029 காலகட்டம் என்பது தற்போதைக்கு முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக போகிறது. அதனால் இந்த தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்தினரும் பா.ஜனதாவுக்கும், பிரதமருக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வருகிற காலத்தில் பொருளாதாரத்தில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறும். வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த பல கோடி மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் முன்னேறி உள்ளனர்.
பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை. அதனால் வருகிற தேர்தலில் 400 எம்.பிக்கள் தேவை. அதனை கொடுக்க மக்களும் தயாராகி விட்டனர். கோவை தொகுதியில் போட்டியிடும் என்னையும் வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இந்தியாவில் 70 வருடமாக எடுக்கப்படாத முக்கிய முடிவுகள் இனிமேல் எடுக்கப்பட உள்ளது. இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
எதிர்கட்சிகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியவில்லை. இன்னும் அவர்களில் யார் மாப்பிள்ளை என்பதே தெரியவில்லை.
தி.மு.க.வினர் பற்றி இனி பேச வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 33 மாதங்களாக தி.மு.கவினர் குறித்து நாம் கடும் விமர்சனங்கள் வைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் அதற்கு பிறகும் திருந்தவில்லை. அப்படி இருக்கையில் இந்த 16 நாள் பிரசாரத்தில் பேசுவதால் மட்டும் அவர்கள் என்ன திருந்தி விடவா போகிறார்கள்? இல்லவே இல்லை.
தற்போதைய காலகட்டத்தில் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த பலரும் மீண்டும் களத்தில் இறங்கி உள்ளனர்.
கோவை தொகுதி எம்.பியாக இருந்தவர் கோவைக்கு தேவையான எந்த திட்டத்தையும் பிரதமரிடம் கேட்டு பெற்று நிறைவேற்ற தவறிவிட்டார். கோவையில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு ஒதுக்கிய நிதியும் முறையாக எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை.
நான் வெற்றி பெற்றதும் கோவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வன். தற்போது ஐ.ஓ.பி காலனியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சென்னை 45-வது இடத்தில் இருந்தது. தற்போது சென்னை அந்த திட்டத்தில் 199-வது இடத்திற்கு சென்று விட்டது. நகரங்கள் அனைத்தும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. நான் வெற்றி பெற்றதும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நகரங்கள் அனைத்தும் சுத்தமானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.
- வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கையில் பணம் கொண்டு செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். வழக்கும் தொடரப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களுடன் ரூ.1 லட்சம் வரை வைத்து கொள்ளலாம். ஆனால் அவருடன் இருக்கும் வேட்பாளர் ரூ.50 ஆயிரம்தான் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகளையும் நிர்ணயித்துள்ளனர். சிறிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் வரை செலவு செய்யலாம். பெரிய மாநிலங்களில் ரூ.95 லட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம்.
சட்டசபை தேர்தல் என்றால் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம். கூட்டங்கள், பேரணிகள், விளம்பரங்கள், வாகன செலவுகள் அனைத்தும் இந்த வரம்பிற்குள் அடங்க வேண்டும்.
வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். செலவு கணக்குகளை தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் தினசரி செலவினங்களுக்காக தனி பதிவேட்டை பராமரிப்பதுடன், ஒவ்வொரு நாளும் தேர்தல் அதிகாரிக்கு விரிவான அறிக்கைகளை வழங்க வேண்டும். அந்த பதிவேட்டில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பிற பிரசார நடவடிக்கைகளுக்கான செலவுகள், வீடியோ பதிவுகள் ஆகியவை ஆதாரமாக இருக்க வேண்டும்.
நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்கும் பிரசார நிகழ்வுகளின் போது ஏற்படும் செலவுகள் வேட்பாளர் மற்றும் பிரசாரகர் இடையே பிரிக்கப்படலாம். எடுத்துக் காட்டாக, ஒரு வேட்பாளர் நட்சத்திர பிரசாரம் செய்பவருடன் பயணம் செய்தால் அல்லது அவரது பெயரையும் படத்தையும் கேமராவில் வைத்திருந்தால் செலவுகள் பிரிக்கப்படும்.
1951-52-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில், வேட்பாளர்களின் செலவு அதிக பட்சமாக ரூ.25 ஆயிரம். வட கிழக்கு மாநிலங்களில் ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவிட அனுமதிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டில், பெரும்பாலான மாநிலங்களுக்கான செலவுத் தொகை ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டது. 1980-ல் ஒரு வேட்பாளருக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உயர்த்தப்பட்டது.
- சென்னையில் உள்ள மையங்களிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது.
- விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் உள்ள மையங்களிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து ஏற்கெனவே திருத்துதல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணிகள் வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பணியில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தி முடிந்ததும் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 6-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. விடைத்தாள் திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.
- வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் நெல்லை மாநகராட்சி வார்டு 18-க்கு உட்பட்ட பகுதிகளும் எம்.ஜி.ஆர்.நகரில் வருகிறது. இங்குள்ள தங்கம்மன் கோவில் தெருவில் கடந்த 56 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வீடு கட்டியுள்ள நிலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக வரி செலுத்தி வருவதாகவும், இருப்பினும் தங்களுக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
மேலும் தங்கம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருந்ததியர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள். அவர்கள் கொரோனா காலத்தில் அயராது அச்சமின்றி பணியாற்றினர். அவர்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பது என்ன நியாயம் என கூறி பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதனை தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடந்த 14-ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி திறந்தவெளியில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.
தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த பகுதியில் மீண்டும் ஒரு பேனரை பொதுமக்கள் வைத்துள்ளனர். அதில் வருகிற 4-ந்தேதி முதல் வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிக்கபோவதாகவும், தீர்வு கிடைக்கும் வரை அரசியல் வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
- 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
- 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?
2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?
கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?
ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?
அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?
வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?
நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?
#பதில்_சொல்லுங்கள்_மோடி
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன.
- இந்த சிக்கலில் தி.மு.க. மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தெரிந்தே அனுமதித்தார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்தபோது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தான் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி இலங்கையிலும், 28-ந்தேதி டெல்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைத்தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக, கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.6.1974 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.8.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கருணாநிதி அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கருணாநிதி மவுனமாக இருந்து விட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.
இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் தி.மு.க. கூறுகிறது. இந்த சிக்கலில் தி.மு.க. மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.
நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டிய லுக்கு மாற்றப்பட்டது, 1½ லட்சம் அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில் தி.மு.க.-காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் உச்சமாகவே உள்ளன. ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் தி.மு.க. இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க. ஸ்டாலின் விளக்குவாரா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மணிபாரதி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரஹீம், சதீஸ் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் மணிபாரதி (வயது 26). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவதன்று வேலையை முடித்து கொண்டு ரெயிலில் ஆடுதுறைக்கு செல்வதற்காக தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
ரெயில்வே குட்ஷெட் பகுதியில் வந்த போது 4 பேர் திடீரென மணிபாரதியை சுற்றி வளைத்து தாக்கி அவரிடமிருந்து ரூ.480 பறித்தனர். பின்னர் செல்போனை பறிக்க முயலும் போது மணிபாரதி அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பின் தொடர்ந்து 4 பேரும் ஓடினர்.
இதையடுத்து மணிபாரதி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தலைமை காவலர் தேவஞானம், காவலர்கள் கண்ணன், சிவபாதசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேரையும் விரட்டி சென்று சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த அப்துல்ரஹீம் (வயது 19), ஒக்கநாடு கீழையூர் வருண் ( 20), தஞ்சை வண்டிக்கார தெரு சதீஷ் ( 19), ஜெபமாலைபுரம் முகமது ரோஷன் (20) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரஹீம், சதீஸ் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.
- காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
- விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
விவசாயத்திற்கு அடுத்து அதிகப்படியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக் கூடியதாக விசைத்தறி ஜவுளித்தொழில் உள்ளது. ஜவுளித்தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 15 மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடை பெற்றாலும் அதிக அளவில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதியிலும் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்துள்ளது. நூல் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து போனது. இதனால் விசைத்தறி ஜவுளி தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசைத்தறி தொழிலுக்கு தேவையான பஞ்சு நூல் விலை உயர்வுக்கு தீர்வு, ரக ஒதுக்கீடு, ஜவுளி சந்தை அமைத்தல், விசைத்தறிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும் ஏற்கனவே வழங்கி உள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழில் சார்ந்த வாக்குறுதிகளும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எந்த கட்சியுமே தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழிலின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை. இதனால் ஏமாற்ற மடைந்துள்ளோம்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும்தான் பல்லடம் செயல்வீரர் கூட்டத்தில், விசைத்தறி தொழிலை பாதுகாப்பதாக பேசியுள்ளார். அவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்று வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.
- கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி:
நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருணா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தற்போது தலா 9 பறக்கும் படை குழுக்கள், தலா 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுரைகளின் படி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கூடுதலாக தலா 3 பறக்கும் படை குழு க்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய வை அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம் தற்போது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுஉள்ளது. இக்குழுக்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.
- போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.
இந்த பாராளுமன்ற தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை என்று கூறுகிறார்.
தமிழகத்தில் ஒன்று கள்ள கூட்டணி. மற்றொன்று நள்ளிரவு கூட்டணி உள்ளது. இவர்களுக்கு எதிராக தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.
போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை பொருள் இறக்குமதி செய்யும் தாயிடம் குஜராத் தான்.
மோடி ஆட்சிக்கு வரும் போது வீட்டு சிலிண்டர் ரூ.410. ஆனால் இப்போது ரூ.1200 ஆக சிலிண்டர் விலை உள்ளது. அண்மையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சம அளவில் உள்ளது.
கச்சத்தீவை இந்திரா காந்தி தான் இலங்கைக்கு கொடுத்தார். அப்போதைய முதல்வரைகூட கேட்கவில்லை.
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கு கச்சத்தீவு பற்றி பேசும் மோடி 10 ஆண்டுகளில் அவர் விரும்பி இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் மீனவர்களையும் படகுகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை.
சுங்கசாவடி கட்டனங்களும் உயர்த்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடி கட்டுபாட்டில் உள்ளது.மோடி நிர்ணயித்த தேதியில் தேர்தல் நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதற்கும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர்.
- கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள்.
ஊட்டி:
மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சுற்றுலா வுக்கு பெயர் போன பகுதியாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்ப டும். .சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலை துறையினர் செய்து வருகின்றனர்.
கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள். சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும், மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






