search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் பொதுமக்கள் மீண்டும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
    X

    நெல்லையில் பொதுமக்கள் மீண்டும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு

    • தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.
    • வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் நெல்லை மாநகராட்சி வார்டு 18-க்கு உட்பட்ட பகுதிகளும் எம்.ஜி.ஆர்.நகரில் வருகிறது. இங்குள்ள தங்கம்மன் கோவில் தெருவில் கடந்த 56 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வீடு கட்டியுள்ள நிலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக வரி செலுத்தி வருவதாகவும், இருப்பினும் தங்களுக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் தங்கம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருந்ததியர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள். அவர்கள் கொரோனா காலத்தில் அயராது அச்சமின்றி பணியாற்றினர். அவர்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பது என்ன நியாயம் என கூறி பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இதனை தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடந்த 14-ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி திறந்தவெளியில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.

    தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த பகுதியில் மீண்டும் ஒரு பேனரை பொதுமக்கள் வைத்துள்ளனர். அதில் வருகிற 4-ந்தேதி முதல் வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிக்கபோவதாகவும், தீர்வு கிடைக்கும் வரை அரசியல் வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×