என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிமுக உடன்பிறப்புகளும், இவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை மாவட்ட பாராளுமன்றத் தொகுதிக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக வி.எஸ்.பாபு நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும், இவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவாக, மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று பிரசாரம் செய்தார்.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதி நம்மாழ்வார்பேட்டை சந்தை பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.
பேரணியின்போது, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாங்கள் ஓட்டு கேட்டு வருகிறோம். ஆனால், தலைமை இல்லா 'இந்தியா' கூட்டணி, யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியுமா?
கேரளாவில் இந்தியா கூட்டணியினர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். ஆனால், டெல்லியில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கின்றனர். நாட்டிலேயே கலாசாரம் மிக்க பூமியாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், தி.மு.க. சனாதன தர்மத்தை எதிர்க்கிறது. இதற்கு நாடே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களை சொல்ல முடியுமா? பா.ஜனதா தொண்டர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க கடுமையாக பணியாற்ற வேண்டும். பா.ஜனதாவுக்கு மக்கள் ஓட்டு போடுவதற்காக நாம் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தின்போது வட சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு 5 கிலோ எடை கொண்ட மீன் வழங்கி வரவேற்றார்.
இதேபோல் திருவள்ளூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு ஆதரவு திரட்டி திருநின்றவூரில் ஸ்மிரிதி இரானி பிரசாரம் மேற்கொண்டார்.
- பா.ஜனதா ஆட்சியில் இடஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.
- 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதா மத்திய அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவீத அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.
சென்னை:
தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், கோர்ட்டுகள் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகமாக பெண்கள் பணிபுரிகிறார்கள்.
உள்ளாட்சி நிறுவனங்களைக் கவனித்தால், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மேயர்கள் என எங்கும் பெண்கள் அமர்ந்து ஜனநாயக கடமையாற்றுவதைப் பார்க்கலாம். இவை எல்லாம் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திகழ்ந்து வரும் அதிசயங்கள்.
1989-ம் ஆண்டில் கருணாநிதி ஓர் ஆயுதத்தை கையில் எடுத்தார். இடஒதுக்கீடு என்ற ஆயுதம்தான் அது. தி.மு.க. தேர்தலில் வென்றால், அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 1989-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி அவர் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றபிறகு முதல் அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட முடிவெடுக்கப்பட்டது. 3.6.1989-ல் கருணாநிதி பிறந்த நாளில், அரசாணை வெளியிடப்பட்டு, பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அரசு பணிகளில் வழங்கும் பணி தொடங்கியது.
அதனால்தான், எல்லா அலுவலகங்களிலும் மகளிர் 100-க்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். அதேபோல, கருணாநிதி, 1996 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார்.
அந்த தேர்தலில் வென்ற 1 லட்சத்து 16 ஆயிரத்து 747 மக்கள் பிரதிநிதிகளில் 44,143 பெண்கள் வெற்றி பெற்று வார்டு உறுப்பினர்கள் முதல் மாநகராட்சி மேயர்கள் வரை பொறுப்பேற்ற ஒரு மாபெரும் ஜனநாயக புரட்சி தமிழ்நாட்டில் அரங்கேறியது.
இவை மட்டுமல்ல, 1989-ல் அரசு பணிகளில் மகளிருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு கருணாநிதி வழங்கினார். இதனால் எல்லா அரசு அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையில் மகளிர் பணிபுரிகின்றனர்.
குரூப்-1 பணிகள் மூலம் அரசு பணிகளில் சேரும் மகளிர் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தலைமைப் பதவிகளில் வீற்றிருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் 323 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெண்கள் மட்டும் 96 பேர். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் செயலாளர்கள், முதலமைச்சரின் செயலாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்களாக பெண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
38 மாவட்ட கலெக்டர்களில் 17 பேர் மகளிர் கலெக்டர்களாக வீற்றிருந்து மாவட்ட நிர்வாகங்களை மிகச்சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கருணாநிதி நடைமுறைப்படுத்திய இந்த மகளிர் இடஒதுக்கீட்டுச் சலுகையை தற்போதுதான் சில மாநிலங்கள் பின்பற்ற தொடங்கியுள்ளன.

இப்படி மகளிர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடுகள் மூலம் கருணாநிதி வழியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்ற பின் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
2021 தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கி பெண்குலம் போற்றுகிறார்கள். கல்லூரி மாணவிகள் 4 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி அவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கிறார்.
ஆனால், பா.ஜனதா ஆட்சியில் இடஒதுக்கீடு தத்துவத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மூலமாக மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடுகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவனம் செய்தார்.
ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய பா.ஜனதா மத்திய அரசின் கேபினட் அமைச்சகத்தில் வெறும் 3 சதவீத அளவுக்கே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். 27 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இனியும் பா.ஜனதா ஆட்சி தொடர்ந்தால் இடஒதுக்கீடுகள் மத்திய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும். பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகி விடும். அந்த நிலையை இப்போதே முயன்று தடுத்திடல் வேண்டும். பா.ஜனதா ஆட்சி மத்தியில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய ஒவ்வொருவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டிய தருணமிது. இதைத் தவறவிட்டால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும்.
மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும். விழிப்புடன் இருப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியை அமைப்போம். நாடும் நாமே நாற்பதும் நாமே என்ற நிலையை உருவாக்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ந் தேதியில் இருந்து நேற்றுவரை ரூ.192.67 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.
அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ந் தேதியில் இருந்து நேற்றுவரை ரூ.192.67 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரூ.82.63 கோடி ரொக்கப் பணம், ரூ.4.34 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.84 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.89.41 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.15.43 கோடி மதிப்புள்ள இலவச பரிசுப் பொருட்கள் அடங்கும்.
- தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய அதிரடி சோதனையில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வைத்துள்ளேன்.
- நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன்
திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதி காக்காயம்பட்டி நால்ரோடு பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயை எனது பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், பள்ளிக்கூடங்களில், ஏனைய தேவை உள்ள அத்தனை இடங்களிலும் மனுக்களாக பெறப்பட்டு அவர்களின் தேவைகளை முழுவதுமாக செய்து கொடுத்துள்ளேன்.
அரசு பள்ளிக்கூடங்களுக்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம்.ஆகவே அந்த 17 கோடியை முழுவதுமாக செவழித்து விட்டு உங்கள் முன்பு நிற்கிறேன்.
ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .
இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். மீண்டும் 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி பெற வழிவகை செய்வேன்.
நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து முடித்து வைப்பேன்.
வேட்டை நாயக்கர்கள் என்கிறவர்கள் அவர்களது ஜக்கம்மா தெய்வத்திற்கு முயல் ரத்தம் வைத்து வழிபடுகிறார்கள். காட்டுக்குள் வேட்டைக்கு செல்ல கூடாது என அந்த சமூகத்தினருக்கு ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த 50 பேரை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு வாரம் அங்கி வைத்திருந்து பாராளுமன்றத்தை காட்டி, தாஜ் மஹாலை காட்டி. அதற்கான மந்திரியிடம் பேச வைத்து அவரிடம் புகைப்படம் எடுத்து பிரச்சனையை சொன்னோம்.
இதன் பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பதில் வந்தது. அதில் வேட்டை நாய்கள் தடுக்கப்பட்ட விலங்கினங்கள் அல்ல. அவற்றை பயன்படுத்தலாம் என்று பதில் வந்தது. எனவே நீங்கள் தைரியமாக வேட்டை நாய்களை பயன்படுத்தலாம். அதையும் மீறி வனத்துறையினர் தடுத்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் பார்த்து கொள்கிறேன்.
சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பாரிவேந்தர் பேசினார்.
- சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
- மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா போட்டியிடுகிறார்.
சிதம்பரம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடந்து வரும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
2, 3 தலைமுறைகளாகத்தான் நம் வீடுகளில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள். முன்பெல்லாம் அத்திபூத்தார்போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உருவாவார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது நிறைய பேர் பதவிக்கு வருகின்றனர்.
இதெல்லாம் பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. 'இந்த வேலைக்கு இவர்களெல்லாம் வந்துடறாங்களே' என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா... அந்த ஃபேனை போடு'என கதறுவார்கள்.
இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க, என்ன என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன்தான் - பாமக கூட்டணி அமைத்துள்ளது
இந்தியா கூட்டணி, மக்களுக்கான கூட்டணி. இந்தியா கூட்டணிதான், சமூக நீதி கூட்டணி.
வளர்ச்சி அடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. பலரின் தியாகத்தால் கிடைத்தது தான் சமூக நீதி. இட ஒதுக்கீட்டை பறிக்க பா.ஜ.க பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
மதச்சார்பின்மை பற்றி மோடி பேசுவதில்லை. பன்முகத்தன்மையை மாற்ற நினைக்கும் மோடி வேண்டாம். பா.ஜ.க-பா.ம.க சந்தர்ப்பவாத கூட்டணி.
மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மோடி மீண்டும் பிரதமரானால் மக்களை சிந்திக்கவிட மாட்டார்கள்.
பா.ஜ.க.வின் திட்டங்கள் மிகவும் மோசமானது, ஆபத்தானது.
இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்தியா கூட்டணி என தெரிவித்தார்.
- ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீ மத் ஆண்டவன் வராக மஹா தேசிகன் ரத்தின அங்கியை உபயமாக வழங்கினார்.
- கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் பூதத்தாழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீ மத் ஆண்டவன் வராக மஹா தேசிகன் ரத்தின அங்கியை உபயமாக வழங்கினார். பின்னர் ரத்தின அங்கி அலங்காரத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்று தரிசனம் செய்தார்.

அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர். செப்பு உலோகத்தில் தங்கமுலாம் பூசப்பட்டு, செம்பு கற்கள் பதித்து செய்யப்பட்டுள்ள இந்த விலை உயர்ந்த ரத்தின அங்கியை, ஆழ்வாரின் அவதார உற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய உற்சவங்களில் அலங்கார சேவையாற்ற பயன்படுத்த உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா?
- அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!
சென்னை :
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.
53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்திற்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என நமது சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு ஒன்றிய அரசுக்கு இணையான - ஒன்றிய அரசு உயர்த்துகிற அகவிலைபடி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது நமது அரசு.
அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித்துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்து வந்திருக்கிறோம். ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.

ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும் – அ.தி.மு.க.வின் வரலாறும் எப்படிப்பட்டது?
ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து - அசிங்கப்படுத்தி - எள்ளி நகையாடி- அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி.
இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!
அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அ.தி.மு.க.வால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும் – துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே! அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!
எஸ்மா - டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும் - அடக்குமுறை செய்ததும்தானே அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம்! அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!
இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?
ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும் – துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை!
பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து – கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து – நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.
மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும் – ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும் - தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதனால்தான், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.
அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான்!
"உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்" என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன்.
இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.
எனவே, தி.மு.க.வின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம் – பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம்!
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்…
நிச்சயம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன்- தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.
எனவே, "திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்" என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.
- வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
- முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.
நெல்லை:
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.
இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.
இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.
- ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
- அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பசுபதி நேற்று குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.
அப்போது, வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் வேப்பங்குப்பம் நோக்கி வந்தார்.
அப்போது குருவராஜபாளையத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதியை பார்த்து மன்சூர்அலிகான், 'வணக்கம் பசுபதிசார் அவர்களே' தோற்று போக போகும் நீங்கள் வாக்கு சேகரித்துக் கொண்டு இருக்குறீர்களே, நீங்கள் தோற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்'. அம்மாவை கொன்று விட்டு ஓட்டு கேட்க வந்துட்டீங்களே பாவிகளா? எனக் கூறிவிட்டு பிரசார வேனில் நின்றபடி வேகமாக சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பைக்கில் மன்சூர்அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
அதற்குள் அவர் வேப்பங்குப்பத்தில் உள்ள பள்ளிவாசல் உள்ளே தொழுகை செய்வதற்காக சென்று விட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பள்ளிவாசல் முன் நின்று அ.தி.மு.க. கட்சியை தவறாக பேசிய மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மேலும் மன்சூர்அலி கானை வெளியே வரச் சொல்லுங்கள், அடிக்காமல் விட மாட்டோம். எங்கள் ஊருக்கு வந்து இந்த மாதிரி பேசுகிறார். அவரை அடிக்கிற அடியில் சென்னைக்கு ஓடி விடுவார் என மிரட்டல் விடுக்கும் பாணியில் கூச்சலிட்டு கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரு தரப்பினரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சூரியன்பேட்டை சேர்ந்தவர் கந்தன். (வயது 48). இவருக்கு ரமாவள்ளி (வயது 40 ) என்ற மனைவி இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை கந்தனுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதனால் கந்தனின் மனைவி ரமாவள்ளி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடனடியாக ரமா வள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலை ரமாவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






