search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்!- மு.க.ஸ்டாலின்
    X

    "இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்!"- மு.க.ஸ்டாலின்

    • அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா?
    • அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!

    சென்னை :

    தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

    53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்திற்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என நமது சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு ஒன்றிய அரசுக்கு இணையான - ஒன்றிய அரசு உயர்த்துகிற அகவிலைபடி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது நமது அரசு.

    அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித்துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்து வந்திருக்கிறோம். ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.


    ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும் – அ.தி.மு.க.வின் வரலாறும் எப்படிப்பட்டது?

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து - அசிங்கப்படுத்தி - எள்ளி நகையாடி- அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி.

    இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

    தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!

    அ.தி.முக. என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அ.தி.மு.க.வால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும் – துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே! அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அ.தி.மு.க!

    எஸ்மா - டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும் - அடக்குமுறை செய்ததும்தானே அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம்! அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!

    இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?

    ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும் – துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை!

    பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து – கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து – நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.

    மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும் – ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும் - தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அதனால்தான், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.

    அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான்!

    "உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்" என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன்.

    இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.

    எனவே, தி.மு.க.வின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம் – பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம்!

    அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்…

    நிச்சயம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன்- தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.

    எனவே, "திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்" என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×