என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது.
- மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது.
அரியலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர் , விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.
தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாடு, சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் எதிரணியில் உள்ள தி.மு.க.வினர் சனாதனத்தையும், கலாசாரத்தையும் எப்படி ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.
பாராளுமன்றத்தில் மோடி தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசாரும், அவரை பேசவிடாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே தமிழக கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பா.ஜ.க. பாடுபட்டு கொண்டிருக்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் தோற்றுபோனாலும் கூட, மோடி அவர்கள் நிர்வாகத்தை திறமையாக கையாண்டதினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
2024-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமரானால் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா பொருளாதாரத்தில் 6 மடங்கு வளர்ச்சி பெற்று உள்ளது. 2014-ல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த செல்போன்களில் 97 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தது.
ஆனால் தற்போது 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா செல்போன்களே பயன்பாடடில் உள்ளது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் தெளிவான பொருளாதார கொள்கைதான். கார் உற்பத்தியில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. தற்போது இந்தியா 2வது இடத்திற்கு வந்து விட்டது.
இதற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. தற்போது தரமான மருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. பெட்ரோலிய துறையிலும் 106 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் நாடு முன்னேறும்.
ஏழை மக்களின் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், படித்த இளைஞர்களின் உயர்வு, விவசாயிகளின் பாதுகாப்பு, பட்டியலின மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்த மோடி செயல்பட்டு வருகிறார். ஏழ்மையை அகற்றி வலிமையான இந்தியாவாக உருவாக்க அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.
80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, அல்லது 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் 25 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்து விட்டனர் என்று உலக வங்கி கூறுகிறது.
நாடு முழுவதும் 11.78 கோடி விவசாயிகளுக்கும், அதில் தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு கவுரவ நிதியாக 6 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
10 கோடி பெண்களுக்கு இந்தியாவில் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கும், சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் தமிழகத்திலும், 43 ஆயிரம் வீடுகள் சிதம்பரம் தொகுதியிலும் கட்டப்பட்டு உள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 11.4 கோடி குடிநீர் இணைப்பும், இதில் தமிழகத்தில் 80 லட்சம், சிதம்பரத்தில் 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி கவனம் உள்ளது. அதற்கு உதாரணம் தமிழகத்தின் வருவாய் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு நிதியானது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.1650 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கிராமபுற சாலை திட்டங்களுக்கு ரூ.630 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.822 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம வளர்ச்சிக்காக ரூ.10,800 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
ரெயில்வே திட்டங்களுக் 7 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை, திருச்சி, ஓசூர், கோவை, சேலம் உள்ளது. இதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம், 11 ஸ்மார் சிட்டி தமிழகத்திற்கு மோடி தந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீது மோடிக்கு மிகப்பெரிய பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலை ஒழிப்பேன் என்று மோடி சபதம் ஏற்று உள்ளார். இந்தியா கூட்டணியோ ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சபதமேற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வாரிசு அரசியல், பணம் கொள்ளை யடித்தல், கட்டப்பஞ்சாயத்து என்று தி.மு.க. குடும்ப ஆட்சியின் கூடாரமாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை மைதானத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக செந்துறை ரோடு அமீனாபாத், இறைவன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
இந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா, ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாஜக தேசிய தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது.
- 100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது.
பல்லடம்:
தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம்புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-
அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என ஆண்கள் சிந்திக்கிறார்கள். சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள். எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம். கஞ்சா நம் வீட்டுக்கு வீதிக்கு வரக்கூடாது.
காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது. அதன் பிறகு யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் தாக்கத்தை காண்கிறோம். அணைகள் கட்டுவதற்கு இங்குள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை நாங்கள் செய்து காட்டுவோம் .100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது. குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம்.
பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொடுக்க உங்கள் வீட்டுப்பிள்ளையாகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும்.
கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில அரசால் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் ஊருக்குள் அப்பார்ட்மெண்ட் கட்டி கொடுக்கப்படும். நிலம் இல்லை என்றால் இதுதான் வழி. பிரச்சனைகளை முடித்து கொடுக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கிறார்கள். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போலி புக்கிங் இணைய தளம் தொடங்கி ஐபிஎஸ் டிக்கெட் மோசடி செய்துள்ளனர்.
- சென்னை மற்றும் ஐதராபாத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை-பெங்களூரு போட்டியின்போது, அதிகளவு டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி புக்கிங் இணைய தளம் தொடங்கி ஐபிஎஸ் டிக்கெட் மோசடி செய்துள்ளனர். பிரபல புக்கிங் இணையதளங்களின் பெயரில் போலியாக இணையதள பக்கம் தொடங்கி மோசடி செய்துள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்களின் அருகேயே அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என ஒரு கும்பல் பல லட்சம் மோசடி செய்துள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் ஐதராபாத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
- பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 813 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 21 லட்சத்து 57 ஆயிரத்து 955 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 10 லட்சத்து 96 ஆயிரத்து 858 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அரசியல் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
- வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனையை தொடர்ந்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் அடையாறு இந்திரா நகர், திருவான்மியூர், அபிராமபுரம் ஆகிய 3 இடங்களிலும் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இதே போன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. அரசியல் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கோடிக்கணக்கான பணம் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவலின் பேரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவோடு சோதனை முடிவடைந்து விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாகவும் சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலையில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக நடத்திய சோதனையில் எத்தனை கோடி பணம் பிடிபட்டுள்ளது என்பது பற்றிய முழுமையான தகவல்கள் தெரிய வரும்.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் 3 நாள் சோதனையில் எத்தனை கோடி பணத்தை கைப்பற்றியுள்ளனர் என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேப்பாக்கம் மைதானம்போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.
விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.
தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
- ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும்.
காவேரிப்பட்டினம்:
வருகிற 9-ந் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை 11-ந் தேதி கொண்டாடப்படுகிறதையொட்டி காவேரிப்பட்டணம் வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக இருந்தது.
காவேரிப்பட்டணம் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன ஆனால் தற்போது இப்பகுதியில் ஆடுகளை பெரும்பாலானோர் வளர்ப்பதில்லை. இதனால் ஆடுகளுக்கு இப்பகுதியில் விற்பனை அதிகமாய் உள்ளது. மேலும் ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
- சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
- இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்பரித்து கொட்டி செல்லும். இதனால் கொடிவேரி தடுப்பு அணையில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக அருகே உள்ள பகுதிகளான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
இதனால் இந்த தடுப்பணைக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயிலின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 1 மாதத்துக்கும் மேலாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 80 அடிக்கு மேல் நீர் இருந்தது. அது படிப்படிாக குறைந்து தற்போது 47 கன அடி மட்டுமே உள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணைக்கும் நீர் வரத்தும் குறைந்தது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் இல்லாமல் வரண்டு பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து தடுப்பணைக்கு சென்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாறைகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர். ஒரு சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.
- இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
- பாராளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டியதாக 20 பேர் சுட்டுகொன்றபோது அதிமுக, திமுக வேடிக்கை தான் பார்த்தது.
ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட் கொடுத்து தேர்தலை சந்திக்கிறது தி.முக. முதன் முதலில் இசுலாமிய பயங்கரவாதிகள் என சட்டசபையில் பேசியவர் கருணாநிதி இவர்களா இசுலாமிய காவலர்கள்.
இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லை, பணம் செல்லவில்லை என்று அர்த்தமா?
இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. மேலும் அதில் பயணிக்கும் எங்கள் பெண்களையே அவதூறாக பேசுகிறார்கள் இதுதான் திமுகவின் பெண்ணிய உரிமையா?
பின்னர் அவர் அளித்த பேட்டியளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். இப்போது ஏதோ ஒரு இடத்தில் தான் பிடித்திருக்கிறார்கள். காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் எங்கள் தம்பி அண்ணாமலை அவர்தான் இதற்கு பதில் கொடுக்க வேண்டும்.
நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் பணநாயகமாகி விட்டது. அதனால்தான் எந்த கட்சியுடனும் கூட்டணி சேரவில்லை.
தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் பெண்கள் குறித்து பேசிய பேச்சை அவர்களின் குடும்ப பெண்களே சகித்துக் கொள்ளவார்களா? கதிர் ஆனந்த் எதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
பாராளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். அப்படி என்றால் தமிழில் ஆட்சி மொழியாகும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா?
தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையை கொடுமையாக பார்க்கிறேன். இதுவரை காசு கொடுப்பவர்களின் பணத்தைப் பிடித்தும் என்று ஏதாவது ஒன்றை காட்ட முடியுமா?
ரம்ஜான் நேரம் என்பதால் ஆடு, மாடு விற்பனை செய்யும் பணத்தை எப்படி விவசாயிகள் எடுத்துச் செல்வார்கள் ?
ஊழல் இல்லாத அரசு என கூறும் பாஜக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து 150 கோடி கொடுத்தது அது ஊழல் இல்லையா?
கேட்டால் அதில் நாங்கள் தவறான தகவலை பரப்புகிறோம் என்கிறார்கள் இவர்கள் செய்வதை தானே நாங்கள் பரப்புகிறோம். இமெயில் இன்ஸ்டாகிராம் எல்லாம் வரும் காலத்தில் தடை செய்ய வாய்ப்பிருக்கு?
இவ்வாறு அவர் கூறினார்.
- விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
- கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படும். அதே போல இன்று வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.

இதற்காக பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் வரிசையில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
- சித்திரை மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மண்ணச்சநல்லூர்:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
இத்தகைய பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திரு விழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இன்று காலை அம்மன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்த ருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகி றார்.
இதைத்தொடர்ந்து திரு விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.
அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ் வொரு வாகனத்தில் எழுந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
வருகின்ற 15-ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 16-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகி றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.






