என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது.
- எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது.
சென்னை:
அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் சிங்கமுத்து பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு இடையே சிங்கமுத்துவிடம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் குறித்து கேட்ட போது அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் ஆட்சி கொடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து?
பதில்:-அவர் ஆசை அப்படி இருக்கிறது. தமிழ்நாட்டை முதலில் சீர் திருத்தட்டும். தமிழக மக்கள் கண்ணீரும், கவலையுமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழ் மக்கள் வாடி வதங்கி இருக்கிறார்கள். முதலில் தமிழகத்தை சரி பண்ணட்டும். பிறகு எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.
கேள்வி:-தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. வுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்வது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறதே?
பதில்:- கமல்ஹாசன் மக்களின் மனங்களை அறியாதவர். மக்களோடு மக்களாக இருக்காதவர். திடீரென ஒரு கட்சி தொடங்கி புரட்சி தலைவர் போலவும், புரட்சி தலைவி போலவும் நாட்டை பிடித்து விடலாம் என்று அவர் கற்பனையில் இருக்கிறார். அது நடக்காது. கமல்ஹாசன் எப்போதும் ஒரு ஓட்டுக் குதிரையில் பயணம் செய்வார் அவ்வளவுதான்.
கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பெண்களுக்கு வழங்கப் படும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்:- எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. இது எதையுமே அவர்களால் செய்ய முடியாது.
கேள்வி:- இந்த தேர்தலில் நடிகர் வடிவேலு மவுனம் காத்து வருகிறாரே?
பதில்:-வடிவேலு மவுனம் காத்து வருவதை என்னை விட பொருத்தமாக யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே திரைத்துறையில் பயணம் செய்தவர்கள். அரசியல் எனக்கு ராசியில்லை என்று அவரே சொல்லிவிட்டாரே? பிறகு ஏன் அவரை அழைக்கிறார்கள்?
கேள்வி:-பிரதமர் மோடி தான் என்னை ராமநாதபுரத்தில் போட்டியிட சொன்னார் என ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்து வருகிறாரே?
பதில்:-அவர் சொல்வது அவருக்கு மட்டும் தானே தெரியும். நாம் எல்லாம் கேட்டோமா? பொய் கூட சொல்லலாம் அல்லவா?
கேள்வி:-பிரசார களத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?
பதில்:-அமோகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். நான் மற்றும் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன், அருள்மணி உள்ளிட்ட பலர் பல இடங்களுக்கு பிரசாரத்துக்காக சென்று இருக்கிறோம். முன்பு இருந்ததை விட இரட்டை இலைக்கு புது மவுசு வந்துள்ளது. காரணம் 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட அவஸ்தைகள் போதாதா? அ.தி.மு.க. ஆட்சி மலராதா? என்று மக்கள் ஏங்கி தவிப்பதை நாங்கள் காண்கிறோம்.
கேள்வி:-இந்தியா கூட்டணி பற்றி உங்கள் பார்வையில்?
பதில்:-இந்தியா கூட்டணி இல்லை அவர்கள் இந்திய கூட்டு களவாணிகள் என்று மக்கள் சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பணத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்து வருகிறார்கள்.
- 10 நாட்களுக்குள் மேல் நீடிக்கும் என்பதால் பல கோடி ரூபாய் சிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 3 ஷிப்டுகளாக பிரிந்து போலீசார் சோதனை நடத்தி கார்கள் மற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பணத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்து வருகிறார்கள்.
ரூ.2 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 82½ கோடி பணம் சிக்கயுள்ளது. ரூ.4 கோடி அளவுக்கு மது பாட்டில்கள் பிடிப்பட்டு உள்ளன. ரூ.89 கோடிக்கு பரிசு பொருட்கள் சிக்கி உள்ளன.
பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ச்சியாக நடத்தும் சோதனை இன்னும் 10 நாட்களுக்குள் மேல் நீடிக்கும் என்பதால் பல கோடி ரூபாய் சிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது.
- பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளன. வழக்கமாக தினசரி 550 லாரிகளில் வந்து குவிந்த காய்கறிகள் தற்போது 450 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் காய்கறி விலை வழக்கத்தை விட 10 சதவீதம் அதிகரித்து உள்ளன. பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ100 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் ஊட்டி கேரட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
- செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது.
- மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிகள் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 18004259188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 299188, 299492, 299433, 299255 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற செல்போன் செயலியில் புகைப்படமாகவும், வீடியோ, ஆடியோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம். இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வரை தொலைபேசி வாயிலாக 13 புகார்களும், சி விஜில் என்ற செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது. இந்த புகார்கள் அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
- கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது.
ராயபுரம்:
காசிமேட்டில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் காசிமேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து 61 நாட்கள் இது நடைமுறையில் இருக்கும். மீன்பிடி தடைகாலத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பி வரத்தொடங்கி விட்டனர்.
விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒருவாரம் முதல் 15 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். எனவே குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்களே கடலுக்குள் சென்று உள்ளனர்.
மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளதால் விடுமுறை நாளான இன்று குறைந்த விசைப்படகுகளே திரும்பின. 80 முதல் 90 விசைப்படகுகள் மட்டுமே கரைக்கு திரும்பியதால் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்விலை அதிகரித்தது.
வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்கி விடும் என்பதால் விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் மீன் பிரியர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. எனினும் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களும் விலை அதிகமாக இருந்தது. வஞ்சிரம், கொடுவா, கானாங்கத்தை, நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் மட்டும் விற்பனைக்கு இருந்தது.
கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனது. இதேபோல் ரூ.400-க்கு விற்பனை ஆன கொடுவா ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு-ரூ.450, இறால்-ரூ.500, நெத்திலி-ரூ.350, கானாங்கத்தை- ரூ.250-க்கு விற்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கிவிடும் என்பதால் மீன்விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
- பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.
திருச்செந்தூர்:
தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் இன்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-
சிறுபான்மை மக்களுடன் எப்போதும் இருக்க கூடிய கட்சிகள், அவர்களுக்காக பாடுபடக்கூடிய கட்சிகள் இந்தியா கூட்டணி இடம்பெற்றுள்ள கட்சிகளாகும். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது.
தேவையில்லாத சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மையினருக்கு பல்வேறு கஷ்டங்களை கொடுத்தது பா.ஜ.க. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநாட்டில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவே இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.
பெட்ரோல் ரூ.75-க்கு விற்கப்படும். இன்னும் பல்வேறு சலுகைகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்க பா.ஜனதாவினர் வருகிறார்கள் என்று தெரியவில்லை.
- பண மதிப்பிழப்பு செய்தது வேடிக்கையான ஒன்று.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லைக்கு வரும் ராகுல் காந்தி ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலமாக பெல் பள்ளி மைதானத்திற்கு வந்து சேர்கிறார். அப்போது ரோடு-ஷோ நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஓட்டல்களில் பறக்கும் படை சோதனை மற்றும் ரெயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய மாட்டார்கள்.
சாதாரண வேட்பாளர்களை, நோஞ்சான் வேட்பாளர்களை தான் துன்பப்படுத்துவார்கள். அதுதான் பா.ஜ.க.வின் ஸ்டைல்.
எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்க பா.ஜனதாவினர் வருகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் தான் தற்போது ஓட்டு கேட்க வரும்போது பா.ஜ.க.வினர் கூனி குறுகி போய் நிற்கின்றனர்.
பண மதிப்பிழப்பு செய்தது வேடிக்கையான ஒன்று. தமிழர்களின் உரிமைகளை பா.ஜ.க பறித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன் கொல்லைப்புறமாக அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
பா.ஜ.க.வினரின் சர்வாதிகாரம் மேலோங்கி நிற்கிறது. பாசிசம் ஒழிய வேண்டும். ஜனநாயகம் மலர வேண்டும். சர்வாதிகாரம் வீழ வேண்டும். அதற்கு இந்த தேர்தல் பதில் சொல்லும் என்று நம்புகிறோம். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேயர் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
- இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் MDB திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், குமரி மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், குமரியின் வளர்ச்சி நாயகன், விஜய்வசந்த் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில், கோட்டார் MDB திருமண மண்டபத்தில் மாலை 07.00 மணிக்கு நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய மேயர் மகேஷ் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் அவர்கள், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமின் அன்சாரி அவர்கள், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பார்வையாளர் ராமசுப்பு அவர்கள், காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் அவர்கள், திமுக மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், கம்யூனி்ஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட தலைவர், இராதாகிருஷ்ணன், மற்றும் மாநகர செயலாளர் மற்றும் நாகர்கோவில் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அல்.காலித், இராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன், மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் திமுகழக நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மையம், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
- திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு.
- இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.
இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.
அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி நள்ளிரவில் பிடிபட்டது
- சென்னையில் ரூ.4 கோடி கடத்தி வந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடைபெற்றது
தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.
இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.
3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சென்னையில் ரூ.4 கோடி கடத்தி வந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடைபெற்றது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கணேஷ்மணி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி வீட்டில் ரூ.2 லட்சம் பணம், பரிசுப்பொருட்கள் சிக்கின.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் சிக்கின.
இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "வாக்காளர்களுக்கு விநியோகிக்க பா.ஜ.க.வினர் மேலும் பல கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளதுள்ளனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பல கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்" என மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது.
- 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராசிபுரம்:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
நேற்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே ரூ.7.86 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையிலான அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- 14 அட்டைப்பெட்டிகளில் மூடப்பட்ட நிலையில் பொருட்கள் இருந்தன.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட, 5.88 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வரும், 19ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், பொருட்கள் எடுத்து செல்லப்படுவதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் 11:30 மணியளவில், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் கிருஷ்ணகிரி தர்மபுரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த க்யூரல் கூரியர் நிறுவன பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில், 14 அட்டைப்பெட்டிகளில் மூடப்பட்ட நிலையில் பொருட்கள் இருந்தன. இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, அதில் காவேரிப்பட்டணம், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜூவல்லரிகளுக்கு ஓசூர், சிப்காட்டில் உள்ள டைட்டான் ஜூவல்லர்ஸிலிருந்து தங்க நாணயங்கள் எடுத்து செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான பில்கள் உள்பட உரிய ஆவணங்கள் இல்லை.
அவர்கள் கையில் வைத்திருந்த டெலிவரி ஆர்டர்களில் மட்டும், எடுத்து செல்லப்படும் தங்கத்தின் மதிப்பு, 5 கோடியே, 88 லட்சத்து, 14 ஆயிரம் ரூபாய் என இருந்தது. உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபுவிடம் ஒப்பட்டைத்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள், உரிய பில்கள், ஆவணங்களுடன் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து அவர்களது பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.






