என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பறக்கும் படை"

    • 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ராசிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    நேற்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே ரூ.7.86 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

    சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வினோத் குமார் ஜோசப்பை அமலாக்கத்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
    • தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் பணியாற்றி வரும் அப்பு என்கிற விநாயகனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வருமான வரித்துறையினரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இப்படி பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் செலவுக்காக துபாயில் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணத்தை கொண்டு வர திட்டமிட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத் குமார் ஜோசப் துபாயில் இருந்தபடியே இதுபோன்ற ஹவாலா பண பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

    இது போன்ற மேலும் பல குற்றச்சாட்டுகளின் பேரில் வினோத் குமார் ஜோசப் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் பயன்படுத்தி ஐ-பேட், செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தபோது தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகருக்காக ரூ.200 கோடி பணத்தை ஹவாலா முறையில் அனுப்ப திட்டமிட்டது உறுதியானது. இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிட்டிருந்தனர்.

    இதையடுத்து வினோத் குமார் ஜோசப்பை அமலாக்கத்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர்.

    ஹவாலா பண பரிமாற்ற விவகாரம் துபாய், மலேசியா நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதால் அமலாக்கத் துறையினர் இதன் பின்னணியில் இருப்பவர்களிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி பிரமுகருக்கு ஹவாலா பணத்தை சட்ட விரோதமாக கடத்தி வருவதற்கு தேர்தல் பிரசார களத்தில் உள்ள அப்பு என்கிற விநாயகன் என்பவரும் முக்கிய பங்காற்றியிருப்பதும் தெரிய வந்து உள்ளது. துபாயில் இருந்து வந்த வினோத் குமார் ஜோசப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்வம் என்பவரும் ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திட்டம் தீட்டி செயலாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் பணியாற்றி வரும் அப்பு என்கிற விநாயகனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

    இந்த விசாரணையின்போது ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது பற்றிய தகவல்களை திரட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் யாருக்காக இந்த பணத்தை அனுப்ப திட்டமிட்டார்களோ? அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஹவாலா பணம் விவகாரத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளியும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்.

    • தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.
    • உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மூன்று மாநில எல்லைப்பகுதியான வேப்பனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி, பாராளுமன்ற தேர்தல் முடிந்தது. கர்நாடகத்தில் நாளை மறுநாள், மே 7 என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதேபோல ஆந்திராவில் சட்டசபை, பாராளுமன்ற தேர்தல் மே 13-ல், நடக்கிறது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக வேப்பனபள்ளி உள்ளது.

    எனவே வேப்பனபள்ளி அருகில், கர்நாடக மாநில எல்லையில் உள்ள நேரலகிரி சோதனைசாவடி, அத்திகுண்டா சோதனை சாவடி, வேப்பனபள்ளிஅடுத்த ஆந்திர மாநில எல்லையிலுள்ள ஒ.என்.கொத்தூர் சோதனைசாவடி உள்ளிட்டவற்றில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உரிய ஆவணங்களின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றாலோ, பரிசு பொருட்கள் கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மூன்று மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எத்தனை முறை சோதனையிடுவீர்கள் என சலித்து கொண்டவாறு செல்கின்றனர்.

    ×